வெண்ணை திரண்டுவரும் போது பானையை உடைக்கும் ஐக்கிய தேசிய கட்சியினர்..!

இதேவேளை வெண்ணை திரண்டுவரும் போது பானையை உடைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் செயற்படக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

எதிரிகளை வீழ்த்துவதற்கு ‘ஒற்றுமை’யே வலிமையான ஆயுதம் என்பதை புரிந்துசெயற்பட்டால் மாத்திரமே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி, கம்பளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் வேளையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நின்று சொற்சமரில் ஈடுபட்டுவருகின்றனர்.

புதிய அரசியல் கூட்டணியோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இவ்வாறு கருத்து மோதலில் ஈடுபடுவதானது ஏனையக் கட்சிகளுக்கே களம் அமைத்துக்கொடுக்கும்.

கட்சியின் மத்திய செயற்குழுவில் கலந்துரையாடி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை சந்திக்குகொண்டுவருவதானது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான விம்பத்தை உருவாக்கிவிடும் என்பதையும் புரிந்துசெயற்படவேண்டும் என வேலுக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஒற்றுமை’யைக் கருதியே ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்யும் பொறுப்பை ஐக்கிய தேசியக்கட்சிக்கே வழங்கினோம்.

எங்களின் இந்த விட்டுக்கொடுப்பை மற்றும் தியாகத்தை எவரும் பலவீனமாககருதி செயற்படக்கூடாது.

கூட்டணி ஜனநாயகத்தை மதிப்பதாலேயே மிகவும் கௌரவமான முறையில் பங்காளிகளாக செயற்பட்டுவருகின்றோம்.

எனவே, கட்சிக்குள் கலந்துரையாடல்களை நடத்தி, மக்கள் மனநிலையை அறிந்து, மக்களால் கோரப்படும் வெற்றிபெறக் கூடிய வேட்பாளரை களமிறக்கும் தீர்மானத்தை ஐக்கிய தேசியக்கட்சி கூடிய விரைவில் எடுக்கவேண்டும்.

நாட்டின் எதிர்காலம், வெற்றிவாய்ப்பு உட்பட இதர காரணிகளையும் கருத்திற்கொண்டே வேட்பாளர் தீர்மானிக்கப்படவேண்டும்.

மாறாக தான்தோன்றித்தனமாக – மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்த வேட்பாளர்களை போட்டிக்காக நிறுத்தக்கூடாது.

அவ்வாறு நடைபெற்றால் அதற்கு எதிராகவே நாம் செயற்படுவோம்.

ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், கூட்டணி அரசாங்கத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதற்கு கூட்டு எதிரணி சதித்திட்டம் தீட்டிவருகின்றது.

எனவே, இந்த சதிகார வலையில் எவரும் சிக்கவேகூடாது.

அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும்போது விழிப்பாகவே இருக்கவேண்டும்.

ஆகவே, மக்கள் மத்தியில் வீண்குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் செயற்படக்கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் கோரியுள்ளார்.

Share:

Author: theneeweb