நடேசலிங்கம் பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் போராட்டம்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ள இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நடேசலிங்கம் மற்றும் பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது.

குறித்த தம்பதிகளின் குழந்தையான தருணிக்கா தன்னை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் விடுத்த கோரிக்கையை ஏற்கமறுத்த அதிகாரிகள், அதனை அமைச்சரிடம் அனுப்பிவைக்கவும் மறுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர்களின் நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றடைந்தனர்.

அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு சிறு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் புகலிடக் கோரிகையை முன்வைத்திருந்தனர்.

எனினும், அவர்களின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடைக்கால நுழைவு விசைவும், கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாது.

இதையடுத்து, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சு ஈடுபட்டது.

இதற்கமைய, அவர்கள் பல காலமாக வாழ்ந்து வந்த குயின்ஸ்லாந்தின் பிலோலோ பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச் சென்று நாடுகடத்துவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முயற்சிக்கப்பட்டது.

எனினும், சட்ட நடவடிக்கை காரணமாக அந்த முயற்சி இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மெல்போன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, நாடுகடத்தலுக்கு எதிராக அவர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பின்னர், உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவும் கடந்த மே மாதம் 14 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.

எனினும், நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினர் வாழ்ந்து வந்த பிலோலே பகுதி மக்கள், குறித்த குடும்பத்தை தங்களது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், அவர்களின் கோரிக்கை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சகத்தினால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜுன் 12ஆம் திகதி குழந்தை தருணிக்காவின் பெயரில், உள்துறை அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கையை, ஏற்கமறுத்த அதிகாரிகள், அதனை அமைச்சரிடம் அனுப்பிவைக்கவும் மறுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமா, நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb