இனநல்லுறவின் அவசியம் – கருணாகரன்

இன்று நமக்கு அவசியமாக வேண்டியிருக்கும் விசயங்களில் முக்கியமான ஒன்று இன நல்லுறவு. ஆனால், அதுவோ எட்டாக்கனியாக – சாத்தியக்குறைவுடையதாக – இருக்கிறது. எவ்வளவுதான் சாத்தியக்குறைவுடையதாக இருந்தாலும் அதைச் சாத்தியப்படுத்தியே தீர வேண்டும். இல்லையென்றால் இலங்கைத்தீவில் அமைதி ஒருபோதுமே ஏற்படப்போவதில்லை.

அமைதி வேண்டுமாக இருந்தால் எத்தகைய தடைகள், சிரமங்களிருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து இன நல்லுறவை எட்டியே தீர வேண்டும். அமைதிக்கான அடிப்படையும் அத்திவாரமும் இன நல்லுறவே. இல்லையென்றால் எந்தப் பிரச்சினைகளுமே தீர்க்கப்படாமல் நெருக்கடிகளின் மத்தியிலேயே வாழ வேண்டும். கூடவே அச்சம் நிறைந்த சூழலையும்  எதிர்கொண்டேயாக வேண்டும்.

நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும்போது எவராலும் நிம்மதியாக வாழ முடியாது. புதியனவற்றைச் சிந்திக்க முடியாது. புதியனவற்றைச் சிந்திக்கவில்லை என்றால், முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படாது. அச்சத்துடன் வாழ்வதென்பது நிம்மதியற்றுப் பதற்றத்தோடு வாழ்வதாகும். இது  ஏறக்குறைய அடிமைத்தனத்துடன் வாழ்வதாகும். இத்தகைய நெருக்கடியான வாழ்க்கையை வாழப்போகிறோமா? அல்லது எல்லோரும் கூடிக் களித்து மகிழ்ச்சியாக இருக்கும் அமைதியான வாழ்க்கையை வாழப்போகிறோமா?

இதுவே இன்று இலங்கைச் சமூகங்களின் முன்னிருக்கும் கேள்வி.

மிகச் சிறிய இலங்கைத்தீவிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அரசியல் காரணங்களினால் மிக மோசமான அளவில் பிளவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பிளவுகள் உண்டாக்கிய சேதங்களும் அழிவுகளும் கொஞ்சமல்ல. சாதாரணமானதுமல்ல. நமது கடந்த காலம் பிளவுகளின் புதைசேற்றில் கழிந்ததே. இன்னும் கூட நாம் மரணக்குழியின் விளிம்பில்தான் நிற்கிறோம். ஆனாலும் யாரும் இதிலிருந்து எந்தப் படிப்பினைகளையும் பெற்றுக் கொண்டதாக இல்லை. இன்னுமின்னும் ஏட்டிக்குப் போட்டியாகப் பகையையும் முரணையும் வளர்த்துக் கொண்டேயிருக்கின்றனர்.

இது சமூகங்களுக்கிடையிலான இடைவெளியை மேலும் மேலும் அதிகரிக்கிறது. சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளியைக் குறைப்பதற்குப் பதிலாக அதை அதிகரிப்பதென்பது சமூக விதிக்கு மாறான செயற்பாடே. இதற்கான அக – புறக் காரணிகள் உண்டாயினும் அவை நிச்சயமாகக் களையப்பட வேண்டியவையே. இந்தப் பின்னணியில்தான் நாம் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவையும் முரண்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் விரிந்து கிடக்கும் இடைவெளியில் தொடர்ந்தும் முரண்களே உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்றன. இது இரண்டு சமூகங்களுடைய இருப்புக்கும் எதிர்காலத்துக்கும் நிச்சயமாக நல்லதல்ல. கூடவே தொடர்ச்சியான அபாயங்களையும் பின்னடைவுகளையும் உண்டாக்கக்கூடியதுமாகும்.

இந்த இரண்டு சமூகத்தினரும் பெரும்பான்மைச் சிங்களத் தரப்பினால், அவர்களை மையப்படுத்திய அரசினால் ஒடுக்குதலுக்குள்ளாகின்றனர். இந்த நிலையில் தமக்கிடையில் முரண்பாடுகளைக் கொண்டிருப்பதும் பகைமை கொண்டிருப்பதும் ஒடுக்கும் அரசுக்கு வாய்ப்பை அளிப்பதாகவே இருக்கும். பிரித்தாளும் தந்திரத்தை மிகச் சுலபமாகப் பயன்படுத்தி மேலும் இந்தச் சமூகங்களைப் பகைமைக்குள்ளும் முரணுக்குள்ளும் தள்ளிப் பலவீனப்படுத்தும் அரசுக்கு இது புரியாணி. கடந்த காலத்திலிருந்து தற்போதைய நிகழ்காலம் வரையில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

ஆகவே இந்த அபாயச் சூழலிலிருந்த விடுபட்டுத் தப்பித்துத் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் இரண்டு சமூகங்களும் பரபரஸ்பரம் உறவாட வேண்டும். இது தவிர்க்கவே முடியாத அவசிய நிர்ப்பந்தமாகும்.

ஆனால் அந்த உறவு நிலை என்பது எளிதில் உருவாகி விடக்கூடியதல்ல. சம்பிரதாயமான வார்த்தையாடல்களினால் கட்டமைக்கப்படக் கூடியதுமல்ல. இதனால்தான் தமிழ் – முஸ்லிம் உறவுக்கான முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. இனப்பிரச்சினைத்தீர்வைப்பற்றிய முயற்சிகளும் கதையாடல்களும் எப்படி பொருட்படுத்தக்கூடியதாக இல்லாமல், நகைப்பிற்குரியதாக மாறியதோ அதைப்போலவே தமிழ் – முஸ்லிம் உறவு என்பதும் நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கிறது. அவ்வப்பொழுது அரசியல் தரப்புகள் இதைப்பற்றிப் பேசினாலும் நடைமுறையில் இது எந்தப் புள்ளியையும் உருவாக்கியதுமில்லை, தொட்டதுமில்லை.

ஏனென்றால் இந்தப் பிளவானது நிலம், அரசியல் அதிகாரம், தொழில் போன்ற   சமூகப்பொருளாதார அரசியற் காரணிகளால் உருவாகியவை. அந்தக் காரணிகள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. எளிதிற் கடந்து செல்லக் கூடியவையுமல்ல. இவற்றை நிதானமாக நோக்க வேண்டும். நேர்மையாக அணுக வேண்டும். ஆகவே அவற்றை அவற்றுக்குரியவாறு கணக்கில் எடுத்துப் பேச முற்படாமல், அந்த அடிப்படையில் செயற்பட விளையாமல் வெறுமனே மேலோட்டமாக தமிழ் – முஸ்லிம் உறவாடல் என்பதை உருவாக்கி விட முடியாது. இதனால்தான் முஸ்லிம் காங்கிரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் எதுவுமே உரிய பயனைத் தராமற் போயின. இன்னும் இதே மாதிரியான மேலோட்டமான அரசியல் முன்னெடுப்புகள்தான் நிகழுமென்றால் நிலைமை மேலும் கெடுமே தவிர, உருப்பெறாது.

ஏனெனில் இதற்குப் பின்னே ஆழமான காயங்களும் இருண்ட பக்கங்களும் உள்ளன. வலியும் துயரும் நிறைந்துள்ளது. இதையெல்லாம் நாம் வெட்டித் திறந்து போக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாக மனந்திறந்த உரையாடல்கள் பல இடங்களிலும் நிகழ வேண்டும். இந்த உரையாடல்கள் சம்பிதாயமானவையாக அமைந்தால் அதனால் பயனில்லை. ஏட்டிக்குப்போட்டியாக ஒவ்வொருவரும் தம்மை நியாயப்படுத்தும் அடிப்படையில் அமைந்தால் அது மேலும் இடைவெளியையும் மனக் கசப்புகளையுமே உண்டாக்கும். ஆகவே இது மிகக் கவனமாகக் கையாள வேண்டிய ஒரு வேலைத்திட்டமாகும்.

மெய்யாகவே எமது எதிர்த்தரப்பு எது? இந்த நாட்டில் எமது நிலைமை என்ன? எதிர்காலத்தில் நமது நிலை எப்படியிருக்கப்போகிறது? இது பாதகமாக இருக்குமானால் அதை  மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள் என்ன? அதற்கு நமது பங்களிப்புகள் என்ன? அவை எப்படியானவையாக அமைய வேண்டும்? அதற்கான ஒழுக்கம் என்ன? இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து முன்னேறுவது எங்ஙனம்? இந்த முயற்சியில் அல்லது வேலைத்திட்டத்தில் குறுக்கிட்டு இடைக் குழப்பங்களை விளைக்கும் சக்திகளை எதிர்கொள்வது எப்படி? இதையெல்லாம் கவனத்திற் கொண்டே நாம் உரையாடலைச் செய்ய வேண்டும். அந்த உரையாடல்கள்,  ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கூடியதாக, ஒருவரை ஒருவர் மனங்கொண்டு அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். உண்மைக்கும் யதார்த்தத்துக்குமிடையில் உள்ள புள்ளிகளைப் புரிந்து கொள்வது இதில் அவசியம். ஏனென்றால் உண்மைகள் எப்போதும் வலுவானவையாக இருக்கும். கூடவே பல சந்தர்ப்பங்களிலும் வலி நிறைந்தவையாகவும் இருப்பதுண்டு. அதை எந்த அளவில் நாம் புதிய சூழலுக்கும் எதிர்காலத்துக்குமாக – யதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப – புரிந்துணர்வோடு கையாள்கிறோம் என்பது முக்கியமானது. உதாரணமாக கடந்த கால உண்மையில் தமிழ்த்தரப்பினால் முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதைப்போல முஸ்லிம் தரப்பினால் தமிழ்த்தரப்புப் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலே ரிஷிமூலம் நதிமூலம் காண்பதெல்லாம் மேலும் இருளின் ஆழ் கிடங்கிற்குள் தள்ளப்படுவதாகவே அமையும். ஆனால், நடந்தவையெல்லாம்  உண்மையே. அந்த உண்மையைப் பிடிவாதமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவரும் நிறுவ முற்படுவதென்பது நிகழ்கால, எதிர்கால யதார்த்துக்கு எந்தளவுக்கு உதவும்? இதைப் புரிந்து கொள்வதே அவசியம்.

அதேவேளை இந்த இழப்புகளுக்கான இழப்பீடுகளை – நிவாரணங்களை, நீதியை வழங்குவதும் பெறுவதும் எமது புரிந்துணர்வுடனான செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது. இரண்டு சமூகங்களும் புரிந்துணர்வுடன் பேசிக் கண்டடையும் இணக்கப்பாடுகளே சிறந்த இழப்பீடுகள். அதுவே உயர்ந்த நீதியாகவும்  இருக்கும். அந்த இழப்பீடு என்பது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் உத்தரவாதப்படுத்துவதாக அமையும்.

இதுவரையிலான தமிழ் – முஸ்லிம் உறவுக்கான எத்தனங்கள் எல்லாம் அரசியல் தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டவையே. அதுவும் தேர்தலை மையப்படுத்திய அரசியல் தரப்புகளால். இவை தமது வாக்குச் சேகரிப்புக்கான  அரசியல் அவதானங்களின் அடிப்படையிலேயே இவற்றை மேற்கொண்டன. அதன் லாப நட்டக் கணக்கின் அடிப்படையில். மற்றும்படி தூரநோக்கில், அவசியமான பணி இது என்ற அர்ப்பணிப்போடு இதைச் செய்ததில்லை. இதனால்தான் தமிழ் – முஸ்லிம் உறவும் உரையாடலும் என்பது  நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இதை நாம் மாற்றியமைக்க வேண்டும். நிச்சயமாக மாற்றியேயாக வேண்டும்.

ஏனெனில் அதில்தான் இந்த இரண்டு சமூகங்களின் எதிர்காலமே தங்கியிருக்கிறது. இதற்கான முயற்சி பல தளங்களில் நிகழ்வதே பொருத்தம். சமூக மட்டத்தில். மதத்தலைவர்களிடத்தில். பல்கலைக்கழகச் சூழலில். எழுத்தாளர்கள், கலைஞர்களின் பங்களிப்பிலும் பங்கேற்பிலும். சமூக வலைத்தளங்களைப் பொறுப்பாகக் கையாள்வதில். ஊடகங்களில். ஊடகவியலாளர்களிடத்தில். சமூகச்செயற்பாட்டாளர் மத்தியில். அரசியல் தரப்பினர்களால்.

இப்படிப் பல இடங்களிலும் தொடர்ச்சியாக நடக்கும் முயற்சியினால்தான் நற்சாத்தியங்களை உண்டாக்க முடியும். இது ஒரு திட்டமிடப்பட்ட – அவசியமான பணி  என்ற உள்ளுணர்வு ஒவ்வொருவருக்குமே இருந்தாற்தான் இதற்கு மாறான தடத்தில் நம்முடைய எண்ணங்களும் நடவடிக்கைகளும் கால் பதிக்காது. நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாம் உழைத்துச் சேகரிப்பதில் முக்கியமானதாக இருக்க வேண்டியது பாதுகாப்பும் அமைதியும். அது இல்லையென்றால் எதையும் நாம் பாதுகாப்பானதாக வைத்திருக்க முடியாது. அந்த அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அவசியமானது நல்லுறவு. அயலாருடன். அடுத்தவருடன். உலக மனிதருடன். இதுவே இன்றைய – நாளையை விதி. ஆமாம், ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு….

Share:

Author: theneeweb