இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் – ‘லண்டன்-95’ — எம்.ஆர்.ஸ்டாலின் ஞானம் —


                                

லண்டன்-95 என்கின்ற பெயரில் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தனது சிறுகதை தொகுதியொன்றை வெளியிடுகின்றார். இந்த நூலானது  ‘தேம்ஸ் நதி‘ வெளியீடாக வரவிருக்கின்றது. தனது சொந்த வாழ்வில் அரச பொதுசுகாதார துறை அதிகாரிகுழந்தைகள் நல அதிகாரி என்னும் தொழில் சார்ந்து இயங்கினாலும் மானுட மருத்துவ வரலாறுசுகாதாரக்கல்வி போன்றவற்றோடு இலக்கியம் மற்றும் திரைப்படத்துறை போன்ற பல்துறைகளை சார்ந்த ஆளுமை கொண்டவராக இவர் திகழ்கின்றார். அத்தோடிணைந்து மனித உரிமைகள்பாலியல் சமத்துவம் போன்றவற்றுக்காக ஓயாது குரல் கொடுத்து வருபவராக  இந்த இராஜேஸ்வரி  தன்னை எப்போதும் முன்னிறுத்திவருகின்றார்.

இவர் ஒரு முற்போக்கு இலக்கிய மரபினுடான எழுத்துலகின் அடையாளம் கொண்டவர். அது மட்டுமன்றி ஒரு தீவிரமான சமூக அரசியல் களப்போராளியாக இன்றுவரை இயங்கிவருகின்றார்.

புகலிட இலக்கியத்தின் மூல வேர்களில் ஒருவரான ராஜேஸ்வரி பலநூறு பெண்களுக்கு முன்னுதாரணமாகஆதர்சமாக விளங்குபவர். இலங்கையிலும் இந்தியாவிலும் பல பல்கலைக்கழக மாணவர்கள் இவரது எழுத்துக்களை தங்களது ஆய்வுக்காக எடுத்தாண்டு வருகின்றனர். அண்மையில்கூட கொங்கு நாடு கலை அறிவியற் கல்லூரி மாணவர் பிரியா ‘புலம்பெயர்ந்தோர் புதினங்களில் வாழ்வியல் சிக்கல்கள் ‘என்னும்தலைப்பிலான ஆய்வொன்றினை  ராஜேஸ்வரியின் எழுத்துக்களை ஆதாரமாக கொண்டு செய்துள்ளார். அதுவும் நூலுருப்பெற்றுள்ளது.

தற்போது வெளியாகின்ற ‘லண்டன் -95 சிறுகதை தொகுதியானது ராஜேஸ்வரியினுடைய ஆறாவது சிறுகதை தொகுதியாகும். ஐந்து சிறுகதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ள அவர் இதுவரை எழுதிய சிறுகதைகள் சுமார் நூறினை தாண்டும்  என அறிய முடிகின்றது. தமிழ் சிறுகதைகள்.கொம் என்கிற இணையத்தில் இவரது 84 கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை எட்டு நாவல்கள் வெளிவந்துள்ளன.  இவை மட்டுமன்றி ‘தாயும் சேயும்‘, ‘உங்கள் உடல் உள  நலம் பற்றி‘ என்கின்ற மருத்துவம் சார்ந்த நூல்களும்  ‘தமிழ் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்‘ என்கின்ற மானுடவியல் ஆய்வு நூலும் குறிப்பிடத்தக்கன. இவற்றில் பனி பெய்யும் இரவுகள் என்கின்ற தொகுதியானது 2015ஆம் ஆண்டு மதுலகிரிய விஜயரத்ன எனும் எழுத்தாளரினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. விரைவில் இரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகவுள்ளன.

எழுத்து துறையில் மட்டுமன்றி திரைப்படம் மற்றும் ஆவணத்துறையிலும் இராஜேஸ்வரி தனது திறமைகளை வெளிக்காட்டியுள்ளார். 1985ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட படுகொலைகளை மையமாக கொண்டு அவர் உருவாக்கிய திரைப்படம் சர்வதேச தமிழ் அகதிகளின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. Escape  from genocide என்னும் இத்திரைப்படமானது இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும்ஆபத்துக்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லும் விதமாக எடுக்கப்பட்டது. அதே போன்று திருமண வாழ்வின் பெயரில் நடந்தேறும் ஆணாத்திக்க பாலியல் கொடுமைகளை அடிப்படையாக கொண்டு ‘The private place’ குறும் படத்தினையும் 1986ஆம் ஆண்டில் இவர் எடுத்து வெளியிட்டார்.

அதேபோன்று உள்நாட்டு யுத்தம் அகோரமானபோது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை பக்கச்சார்பின்றி அம்பலப்படுத்துவதிலும் ராஜேஸ்வரியினுடைய மனிதஉரிமை செயற்பாடுகள் நடுநிலைவாய்ந்தனவாகவிருந்தன.

இங்கிலாந்தில் தொழிற்கட்சியின் அங்கத்தவரான இவர் ஈராக் யுத்தத்தில் இங்கிலாந்து எடுத்த பிழையான நிலைப்பாட்டை விமரிசனம் செய்து தனது தொழிற்கட்சியின் நீண்டகால உறுப்புரிமையை துறந்தார். 1982ஆம் ஆண்டில்  லண்டனில் உருவாகிய தமிழ் மகளீர் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் 1985ல் உருவாக்கிய தமிழ் அகதிகள் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் முன்னின்று செயற்பட்டு பல்லாயிரம் இலங்கை தமிழ் அகதிகளின் நலன்களை உறுதி செய்வதில் பெரும் பங்காற்றியவர். இந்த தமிழ் அகதிகள் அமைப்பின் முதற் தலைவியாக அவ்வேளை தமிழீழத்துக்காக

போராடிக்கொண்டிருந்த ஐந்து இயக்கங்களில் லண்டன் பிரதிநிதிகளும் ஒருமித்து இவரை நியமித்திருந்தனர் என்பது முக்கியமான வரலாற்றுச்  செய்தியாகும்.

அதுமட்டுமன்றி சுமார் 25 வருடங்களுக்கு மேலாக புகலிடத்தில் இருந்து இயங்கிவரும் பெண்கள் சந்திப்புஇலக்கிய சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கெடுத்தும்முன்னின்று நடாத்தியும் வருபவர்களில் இவரும் ஒருவர்.

இவரது எழுத்துலக சாதனைகள் அளப்பரியன. அந்த வகையில் ‘விபவி‘ இலக்கியவிருது, ‘சுபமங்களாவிருதுலில்லி தேவசிகாமணி விருது, ‘திருப்பூர் தமிழ் சங்க‘ விருதுபோன்றவை ராஜேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனபோதிலும்  சுமார் ஐம்பதாண்டு காலமாக அயராது எழுத்துலகில் இயங்கிவரும் ராஜேஸ்வரி அவர்கள் இலங்கையில் மட்டுமன்றி புகலிடத்திலும் கூட  தேவையான கெளரவம்  பெறவில்லை என்பது எனது கணிப்பு.

தமிழ் கூறும் நல்லுலகில் எத்தனையோ எழுத்தாளர்கள் எத்தனையோ வெளியீடுகள் என்று இலக்கிய பரப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனபோதிலும்  அதில்  ஓரிருவரே சாதனையாளர்களாக முன்னிறுத்தப்படுவர் என்பது சாதாரணமான உண்மையாகும். அந்தவகையில் மிக அதிகமாகவே  எழுதி மிக குறைவாகவே கவனிக்கப்படும் ஒருவராக இந்த இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் காணப்படுகின்றார். எனவேதான் இலக்கிய உலகில் வழங்கப்பட்டு வரும் தெரிவுகளும் புகழாரங்களும் மதிப்பீடுகளும் விருதுகளும்  உண்மையிலேயே இலக்கிய பிரதிகளின் சுயமான வாசிப்பு அனுபவங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கின்றனவாஎன்கின்ற கேள்விகளும்  அவ்வப்போது எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான்  1970ஆம் ஆண்டு காலத்திலே புலம்பெயர்ந்து லண்டனில் குடியேறிய இவரது பூர்வீகம் என்னஇவர் யார்இத்தனை ஆளுமை கொண்ட இந்த பெண் எங்கிருந்து இத்தனைதூரம்  பல்துறை அறிவை பெற்றுக்கொண்டாள்?  என்று நோக்கவேண்டியுள்ளது. ஆம்,அவரது அண்மைக்கால பேட்டியொன்றில் (குவர்னிகா- இலக்கிய சந்திப்பு தொகுப்பு  வெளியீடு) அவர் தனது பூர்வீகம் பற்றி இப்படி விபரிக்கின்றார்.

நான் 1943ஆம் வருடம் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோளாவில் கிராமத்தில் பிறந்தேன். தந்தையாரின் பெயர் கந்தப்பாதாயார் கந்தையா மாரிமுத்துஎனக்கு மூன்று சகோதரிகளும் ஆறு தம்பிகளும் உடன்பிறந்தார்கள். கோளாவில் அழகிய சிறு கிராமம். கிராமத்துக்கு கிழக்கே பொங்கியெழும் வங்காள விரிகுடாவும் மேற்கில் மேகம் தொடும் மலைத்தொடர்களும் அதை தழுவிக்கிடக்கும் பரந்த பச்சை வயல் வெளிகளும் தெற்கில் செல்லமாக நடைபோடும் தில்லையாறும் இருந்தன.

ஆம் அந்த தில்லையாற்றை கதைக்களனாக கொண்ட  அவரது கதை மாந்தர்கள் உலாவரும் பிரதியே  “தில்லையாற்றங் கரையில்”  என்கின்ற நாவல்.  அறுபது எழுபது வருடங்களுக்கு  முன்னரான மட்டக்களப்பின்  சமூகஅரசியல் சூழலை  நமது  கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வல்லமைவாய்ந்த ஒரு வரலாற்று புனைவு அது.

 

அரங்கம் பத்திரிகையில் இருந்து…

Share:

Author: theneeweb