ஜனாதிபதித் தேர்தல் – புதிய தெரிவுக்கான அவசியம் – கருணாகரன்

 

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க, பொதுஜன பெரமுன அல்லது சு.க ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கு மாற்றாக புதிய தெரிவொன்று வேண்டும். நிச்சயமாக வேண்டும். நேரடியாகச் சொன்னால், கோத்தபாய ராஜபக்ஸ, ரணில் அல்லது சஜித் ஆகியோரை விட வேறொரு புதிய முகம் தேவை. அது வேறு யாருமல்ல, அனுரகுமார திஸாநாயக்கவே.

இலங்கையின் நிகழ்கால, எதிர்காலப் பாதுகாப்பையும்  வளர்ச்சியையும்   குறித்துச் சிந்திப்போர் நிச்சயமாக இந்த நிலைப்பாட்டை மறுக்க முடியாது. இதற்கு அதிக விளக்கங்கள் தேவையில்லை. இரண்டே இரண்டு விடயங்கள் மட்டும் போதுமானது.

ஒன்று, எப்போதும் நாம் வலியுறுத்தி வருவதைப்போலச் சுதந்திர இலங்கையை (1948 க்குப் பிறகு இதுவரை) இவர்களே மாறி மாறி ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். இவர்களுடைய ஆட்சியில் நாடு சந்தித்த இரத்தக் களரியும் ஜனநாயக மீறல்களும் கொஞ்சமல்ல, சாதாரணமானதல்ல. மிக உச்சமானது. லட்சக்கணக்கான இளையர்களை இவர்கள் கொன்று புதைத்தனர். ஒரு தலைமுறையல்ல, மூன்று தலைமுறைகளை. பல லட்சம் மக்களுடைய வாழ்க்கை சீரழிக்கப்பட்டது. வகையற்று இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டன. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஊர்கள் அடையாளமற்றதாக ஆக்கப்பட்டன. உள்நாட்டுப்போரை இந்தத் தரப்பினரே உருவாக்கி வளர்த்தனர். நாட்டில் மிக மோசமான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவசரகாலச்சட்டத்தின் கீழேயே பல தசாப்தங்களாக மக்கள் வாழ வேண்டியிருந்தது. திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்கள், பௌத்த மயமாக்குதல்கள் எல்லாம் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. சிறைச்சாலைப் படுகொலைகள், நூலக எரிப்பு போன்ற நாகரீகக் கேடான நடவடிக்கைகள் அனைத்தும் இவர்களின் கைங்கரியங்களே. மட்டுமல்ல, இன்று ஊழல் பேயாட்டம் போடுகிறது. இனமுரண்பாடு உச்சத்திற்குச் சென்றுள்ளது. இவர்கள் வளர்த்த இனவாதத்தைக் கடந்து எவராலும் எளிதில் சிந்திக்கவே முடியாது என்ற நிலையே இன்றுள்ளது. அரசியலின் அடிப்படைகள் மீறப்பட்டு ஜனநாயக உரிமைகள் அனைத்தும் குதிரைப் பேரத்திற்கு இலக்காக்கப்பட்டிருக்கிறது. சனங்களால் எதையுமே செய்ய முடியாது. அவர்களுடைய குரலுக்கு எந்த மதிப்புமே இல்லை என்ற நிலையையே இவை உருவாக்கின.

இப்படி மிக மோசமான – நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான – அரசியல் விளைவுகளை உருவாக்கிய தரப்புகளை மீளவும் ஆதரிக்கலாமா? அப்படி ஆதரித்தால் இந்தத் தவறுகளையே தொடர்ந்தும் நாமும் வரவேற்கிறோம் என்றுதானே அர்த்தம். தங்களுடைய தவறுகளுக்கான அங்கீகாரத்தை நாம் வழங்குகிறோம் என்றல்லவா எடுத்துக் கொள்வார்கள். இப்படிக் கடந்த காலத்தில் நடந்ததால்தான் இவர்கள் எந்த மாற்றங்களையும் செய்யாமல் தொடர்ந்தும் தவறான பாதையில் தங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தாம் எப்படிச் செயற்பட்டாலும் அதை மறுக்காமல் அங்கீகரிப்பதற்கு இந்தச் சனங்கள் இருக்கிறார்கள் என்ற துணிபு இவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. எனவே, இதில் நாம் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். திகைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டாவது, இப்போது கூட இந்தத் தரப்புகளின் அரசியல் நிலைப்பாடுகளிலும் அணுகுமுறையிலும் எந்த மாற்றங்களும் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை. கால மாற்றம், சூழல் மாற்றம் என எதையும் பொருட்படுத்தாமல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் பயணிக்க முற்படுகின்றன. நாட்டின் மையச் சிக்கல்களான இனப்பிரச்சினை, பொருளாதார மந்தம், ஜனநாயகப் பிறழ்வு, அரசியற்சிதைவு போன்றவற்றுக்கு எத்தகைய தீர்வு யோசனைகளையும் முன்வைக்கும் திறனை இவை வெளிப்படுத்தவில்லை. இவற்றைக் குறித்த புதிய பார்வைகள் எதையும் இவற்றிடம் காண முடியவில்லை. ஆக, பழைய வழித்தடத்திலேயே மேலும் தம்மை நகர்த்துவதற்கு முற்படுகின்றன. பிரச்சினைகள் எதையும் தீர்க்காமல் அவற்றைப் பராமரிக்கும் அரசியலை முன்னெடுப்பதற்கே விழைகின்றன. இதற்கேற்ப, வழமையைப்போல சில தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மக்களின் வாக்குகளைக் கவர முயற்சிக்கின்றன. இந்த நிலையில் புத்தியை மூடிக் கொண்டு இந்தச் சக்திகளை மேலும் நாம் ஆதரிக்க முடியுமா?

“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று பகடியாக எடுத்துக் கொள்வதற்கு இது ஒன்றும் எளிய விசயமல்ல. நமது தலைவிதியோடும் நாட்டின் எதிர்காலத்தோடும் சம்மந்தப்பட்டது. இந்த நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக வரும் தேர்தல்களைக் கூட நாம் அதற்குரிய வகையில் கையாளாமல் தவற விடுவது நியாயமேயல்ல. அப்படிச் செய்தால் அது வரலாற்றுக் குற்றம்.

ஆகவேதான் நாம் மிக மிக விழிப்பாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டியுள்ளது.

இதை உணர மறுத்து, நமக்குத் தெரிந்த வழமையான பாதையில் – நமது “விருப்பக் கணிதங்களை” முன்வைத்துத் தெரிவுகளைச் செய்ய முயற்சித்தால் கோத்தபாய ராஜபக்ஸ அல்லது ஐ.தே.க சார்பிலான யாரோ ஒருவரே ஜனாதிபதியாக வருவார். இதற்கு நல்லதொரு பெயரை வேறு வைத்திருக்கிறார்கள், அவர்கள் “வெல்லக்கூடிய வாக்காளர்கள்” என்று. அப்படி இவர்களில் ஒருவர் வென்றால், அவரால் மேலும் கால வீணடிப்பு நடக்குமே தவிர உருப்படியான காரியங்கள் எதுவும் நிகழாது. எந்த மாற்றங்களும் ஏற்படாது. எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. ஆனாலும் அதிகாரத்தில் பொருத்தமற்றவரை இருத்தி விட்டு அவரைப்பற்றிய விமர்சனங்களை வித்துவமாகச் செய்து கொண்டிருக்கப்போகிறோமா?

அதனால் என்ன பயன்? எந்தப் பிரச்சினைதான் தீரும்?

ஆக, பிரச்சினைகளுடன்தான் தொடர்ந்தும் நாம் பயணிக்க வேண்டியிருக்கும்.

இதையெல்லாம் கவனத்திற் கொள்ள மறுப்பதாகவே ஜனாதிபதித் தேர்தலைக் குறித்த கருத்துகளைப் பலரும் முன்வைத்து வருகின்றனர். சலிப்பூட்டும் வகையில் கறுப்பா வெள்ளையா, பச்சையா நீலமா என்ற அளவிலேயே தங்கள் பார்வைகளைப் பலரும் எழுதுகிறார்கள்.

அப்படியென்றால் நாம் எம்மைச் சுற்றியிருக்கும் எந்தப் பிரச்சினைக்குமே தீர்வைக்காண விரும்பவில்லையா?

இதைப்பற்றிப் பேசும்போது “தீர்வுகளைக் காணக்கூடிய சிந்தனையையும் வல்லமையும் கொண்ட வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லையே. இந்த நிலையில் நீங்கள் எப்படிப் புதிய மாற்றங்களுக்குரிய வேட்பாளரை அடையாளம் காண்கிறீர்கள்?” என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள்.

குறிப்பாக இனப்பிரச்சினை அல்லது சிறுபான்மைச் சமூகத்தினரின் விசயத்தில் ஐ.தே.க, சு.க மற்றும் பொதுஜன பெரமுனவை விட இன்னொரு தரப்பாகக் களமிறங்கவுள்ள ஜே.வியிடம் (அனுரகுமார திஸாநாயக்கவிடம்) முன்னேற்றகரமான புதிய சிந்தனைகள் ஏதுமுண்டா? என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

இலங்கை இந்திய உடன்படிக்கையை நிராகரித்ததுடன் வடக்குக் கிழக்கைப் பிரித்தது மட்டுமல்ல, சிறுபான்மைத் தேசிய இனங்களுடைய உரிமைப்பிரச்சினை தொடர்பாகவும் ஜே.வி.பியிடம் எந்த முன்னேற்றமான சிந்தனையுமே இல்லை. இப்படியிருக்கும்போது எப்படி அனுரகுமார திஸாநாயக்கவை ஆதரிக்க முடியும்? தவிர, அனுரகுமார வெல்லக்கூடிய வேட்பாளரில்லையே. வாக்குகளைப் பிரிக்கக் கூடிய வேட்பாளரே தவிர வெல்லக் கூடியவரில்லை. வெற்றியடைய முடியாத வேட்பாளருக்கு எதற்காக நாம் வாக்குகளைச் செலவழிக்க வேணும் என்றும்  கேட்கிறார்கள்.

முதலில் நாம் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதைப்போல ஐ.தே.க, சு.க அல்லது பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் ஆதரமளிக்கப்பட்ட குற்றச் செயல்களோடும் தவறுகளோடும் ஆட்சி நடத்தியவர்கள். அவர்களினால் ஏற்பட்ட விளைவுகள் பாரதூரமானவை. அந்தக் கட்சிகள் இந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக் கொள்ள முடியாது.

ஆனால், ஜே.வி.பி ஒரு தடவைகூட ஆட்சியிலிருந்ததில்லை. அதனுடைய நீண்ட அரசியல் பயணத்தில் தவறுகள் உண்டு. அதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனாலும் ஜே.வி.பி தன்னை மெல்ல மெல்ல தவறுகளிலிருந்து விடுவித்து வருகிறது. புதிய பாதையை நோக்கிப் பயணத்தை மேற்கொள்கிறது. ஒப்பீட்டளவில் ஐ.தே.க, சு.க, பொதுஜன பெரமுன போன்றவற்றை விடவும் புதிய தரப்பு என்றால் அது ஜே.வி.பிதான். அதை உரையாடல்கள் மூலம் மேலும் வளப்படுத்தலாம் என்ற நம்பிக்கை உண்டு. காரணம் அடிப்படையில் ஊழல், குறுகிய அரசியல் நோக்கங்கள், அரசியல் பழியுணர்ச்சிகள் போன்றவற்றைக் கொண்டதல்ல ஜே.வி.பி. நாட்டைக் குறித்த அக்கறையைக் கொண்டது. மரபார்ந்த அரசியற் போக்குக்கு அப்பால், முற்போக்கான அம்சங்களும் அடிப்படைகளும் பிற தரப்பை விடவும் ஜே.வி.பியிடம் உண்டென்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆகவே முதலில் ஏனைய தரப்புக்களை விட ஒப்பீட்டளவில் அனுரகுமார வரவேற்கக் கூடியவர். அதோடு, அனுரகுமாரவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் மற்றைய தரப்புகளை நாம் ஏற்கவில்லை, நிராகரிக்கிறோம் என்பதை அவற்றுக்கும் உலகத்துக்கும் உணர்த்த முடியும். இதைச் செய்து அவற்றைத் தடுமாற்றத்துக்குள்ளாக்கலாம். அவை தம்மை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம்.

புதிய சக்தியொன்றுக்கு வாய்ப்பைக் கொடுப்பதன் மூலம் குறிப்பிட்டளவிலான மாற்றங்களையாவது உண்டாக்கலாம். குறைந்த பட்சம் அனுரகுமார இருபத்தைந்து லட்சம் வாக்குகளைப் பெற்றால் அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜே.பி.பி ஒரு புதிய கூட்டுமுன்னணியை அமைக்கக் கூடிய தகுதி நிலையை – நம்பிக்கையைப் பெறக்கூடியதாக இருக்கும். அது பாராளுமன்றத்தில் செல்வாக்கைச் செலுத்தக் கூடியதாக அமையும். இந்த நிலையானது தொடர்ந்தும் தாம் தவறான அரசியற் செல்வழியில் பயணிக்க முடியாது என்ற உணர்வை ஐ.தே.க, பொதுஜன பெரமுன, சு.க போன்றவற்றுக்கு உணர்த்தும்.

இதேவேளை நாம் ஜே.வி.பி மிகச் சரியான தெரிவு என்றோ சரியான தரப்பு  என்றோ இங்கே அடையாளப்படுத்தவில்லை. இன்றைய நிலையில் மாற்றுச் சக்தியாக இருந்து நெருக்கடியைக் கொடுக்கக் கூடிய சக்தியாக ஜே.வி.பியே உள்ளது என்பது ஒன்று. இரண்டாவது விசயம், இந்த மாதிரியான உடைப்புகளை படிப்படியாகவே செய்ய முடியும். அதற்கு இது ஒரு முதற்படியாக இருக்கும். அனுரகுமாரவை வேட்பாளராக அறிவிக்கும் நிகழ்வையொட்டி காலிமுகத்திடலில் திரண்ட மக்கள் சொல்ல முயன்ற சேதியை நாம் எளிதில் புறக்கணித்து விட முடியாது. தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, சிங்கள மக்களிடமும் ஐ.தே.க, பொதுஜன பெரமுன மற்றும் சு.க மீதான அதிருப்தி தாராளமாக உண்டு என்பதற்கான அடையாளம் அதுவல்லவா!

இந்த மாதிரிப் பல விடயங்கள் உள்ளன.

ஆகவே அரசியலில் மக்களாகிய நாம் புதிய மாற்றங்களுக்கான பரிசோதனைகளையும் துணிகரமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இதை நோக்கியே ஆய்வாளர்களும் ஊடகத்துறையினரும் சிந்திக்க முயற்சிப்பது நல்லது.

கட்சி மனோநிலையிலிருந்தும் தாம்சார்ந்த வர்க்க நிலையிலிருந்தும் எதையும் அணுக முற்பட்டால் அந்தக் கண்களில் புதிய காட்சிகள் எதுவும்  புலப்படாது. புதிய வண்ணப்பூச்சுகளைக் கொண்ட பழைய சுவர்களையே அந்த மனம் விரும்பும். அதுவே பாதுகாப்பானது என்று எண்ணத் தோன்றும். அந்த மரபான மனதில் புதியவை பதற்றத்தையும் நம்பிக்கையீனத்தையுமே உண்டாக்கும். எனவேதான் அவர்கள் தமக்குத் தெரிந்தவைகளுடன் சமரசங்களுக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த முறைமையோடு இவ்வளவு காலமும் இவர்கள் காட்டிய வழியில் என்னமாதிரியான முன்னேற்றங்கள் நடந்திருக்கின்றன? இதையே நாம் திரும்பத்திரும்பக் கேட்க வேணும்.

காலம் முழுவதும் இந்த அரசியற் பத்தியாளர்களும் ஆய்வாளர்களும் ஏதோ கதைகளைச் சொல்கின்றவர்களாக இருக்கின்றனரே தவிர, புதிய நிலையை உருவாக்குபவர்களாக இல்லை. இப்பொழுது நமக்குத் தேவை, விண்ணானக் கதைகளல்ல, சுவாரஷ்யமாகக் கதை சொல்வோருமல்ல. புதிய நிலைகளை உருவாக்குவோரும் புதிய நிலைகளுமே.

Share:

Author: theneeweb