ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் ஜனநாயகத்துக்கு நல்லது

கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ

கடந்த காலத்திலும் அண்மைக்காலத்திலும் தவறுகளைச் செயதிருந்தாலும், நாட்டின் ஜனநாயக சமநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு முக்கியமான கூறு ஆகும். அது ஒரு மத்திய பாதைக் கட்சியாக இருந்துவந்திருக்கிறது. அதன் பொதுவான  திசையமைவு நாட்டின் அரசியலில், பொருளாதாரத்தில், வெளியுறவு விவகாரங்களில் மற்றும் கலாசார / தேசிய பிரச்சினைகளில் தேவையானதாகும். இந்த விவகாரங்கள் தொடர்பில் அந்த கட்சி பல தடவைகள் தவறிழைத்திருந்தாலும், அதன் தேவை அவசியமானதேயாகும். சுதந்திர கட்சியை விமர்சிப்பவர்கள் ‘1956  தனிச்சிங்கள சட்டத்தை’  நினைவுபடுத்தக்கூடும், ஆனால் மத்திய பாதையில் நேர்கோடு இருக்கமுடியாது.

 

இலங்கை இப்போது ஒரு முட்டுச்சந்தில் வந்து நிற்கிறது.மத்திய பாதைக்கு புத்திளமையூட்டுவது அவசியமானதாகும். பல பிளவுகளுக்கு மத்தியில், குறிப்பாக  ‘நவதாராளவாத அராஜகத்துக்கும் ‘ ‘தேசியவாத ஏதேச்சாதிகாரத்துக்கும் ‘ இடையிலான துருவமயாதல் ஒன்று வெளிக்கிளம்பியிருக்கிறது.

சுதந்திர கட்சியின் அன்றைய பொதுச்செயலாளரும் வேறு சில உறுப்பினர்களும் முன்னைய ஆட்சியில் இருந்து வெளியேறி 2015 மாற்றத்தில்  முக்கிய பாத்திரத்தை வகித்தார்கள். நாட்டின் ஜனநாயகத்தின் படிமுறை வளர்ச்சிக்கு அது அவசியமாக இருந்தது.2018 வரை சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டரசாங்கத்திலும் பங்கேற்றது.2015 இடம்பெற்ற குறிப்பிடத்தக்க மாற்றத்துக்குப் பிறகு, கட்சியின் முன்னைய தலைவர் மகிந்த ராஜபக்ச ( மெய்யாகவோ இல்லையோ ) தவறுகளை ஒத்துக்கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஆனால், அதற்குப் பிறகு சுதந்திர கட்சியினாலோ அல்லது அதன் தற்போதைய தலைவரினாலோ புதிய அரசாங்கத்திற்குள் குறிப்பாக, பொருளாதார, வெளியுறவு விவகாரங்களில் நியாயபூர்வமான ஒரு மத்திய போக்கை கொண்டுவர முடியாமல் போய்விட்டது.அதில் அவர்கள் தவறிவிட்டார்கள்.அதற்கு பெருவாரியான காரணங்கள்.சர்வதேச நெருக்குதல்களும் கூட்டரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசிய கட்சியின் கோட்பாட்டுத் திசையமைவும் மிகவும் வலிமையானவையாக இருந்தன. அந்த சூழ்நிலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. சுதந்திர கட்சியின்  அலங்கோலத்தில் இருந்தும் விரக்தியில் இருந்துமே இது தோன்றியது.

ஆனால், பொதுஜன பெரமுன ஒரு சுதந்திர கட்சியல்ல. பொதுஜன பெரமுன குறிப்பாக, அரசியல் முனையிலும் கலாசார / தேசிய பிரச்சினைகளிலும் மத்திய பாதையைப் பின்பற்றுவதாக தோன்றவில்லை.இலங்கையின் அரசியலில் ராஜபக்ச குடும்பம் வகித்த பாத்திரத்தை மதிப்பதற்கு எவரும் தயங்கக்கூடாது என்கின்ற அதேவேளை, பொதுஜன பெரமுனவின் தலைவர் தனது சொந்த தம்பியார் என்னதான் திறமைகள் கைவரப்பெற்றவராக இருந்தாலும், அவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை வரம்புமீறிய ஒரு செயலேயாகும்.பொதுஜன பெரமுன இன்னொரு தம்பியாரால் உருவாக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.மூழ்குகிற கப்பலில் இருந்து வெளியேறுவதில் சுதந்திர கட்சி காட்டிய தாமதமே பொதுஜன பெரமுனவின் தோற்றத்தை தவிர்க்கமுடியாததாக்கியது.

முக்கிய அரசியல்  கட்சியொன்றை தனியொரு குடும்பத்தின் பிடிக்குள் வைத்திருப்பதென்பது நாட்டுக்கோ அல்லது ஜனநாயகத்துக்கோ நல்லதல்ல. ராஜபக்ச ஆட்சிக்காலத்து ஊழல், பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவையாக இருந்தாலும் கூட, அந்த குடும்பத்தின் அல்லது ஆட்சிக்காலத்தின் ஜனநாயக நம்பகத்தன்மை மிகவும் மோசமானதாகவே இருந்தது.அவர்களின் பெரிய சாதனையென்றால், தேசிய பாதுகாப்பையும் மிதமான அபிவிருத்தியையுமே கூறமுடியும்.தலைவர் தனது சொந்த தம்பியை ஜனாதிபதி வேட்பாளராக ஏன் நியமித்தார் என்பது முக்கியமான ஒரு கேள்வி.சுதந்திர கட்சியே  அல்லது பொதுஜன பெரமுனவோ ஆற்றல்மிக்க தலைவர்கள் இல்லாத கட்சிகள் அல்ல.

துரதிர்ஷ்டவசமாக அவர்களில் பலர் குடும்பத்தின் பிடிக்கு இரையாகிவிட்டார்கள்.சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுக்குள் முற்றாக  கரைந்துவிட்டால், பிறகு  மீண்டுவருவதற்கு இடமிருக்காது என்பதை இந்த கட்டத்திலாவது அந்த தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது உண்மையே. கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அதன் செயற்பாடு படுமோசமானதாக இருந்தது. அநாவசியமாக ஒரு நீண்டகாலத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்திருந்தமையே அந்த தேர்தலில் சுதந்திர கட்சியின் செல்வாக்கை நிர்ணயித்தது.அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதில் காட்டிய தாமதத்தின் காரணமாக சுதந்திர கட்சி மீது அதன் வாக்காளர்களும் பொதுவில் மக்களும்  ஆத்திரமடைந்திருந்தனர்.நீண்டகாலமாக உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தாமல் இருந்தமையினாலும் மக்கள் கொதித்துப்போயிருந்தனர்.ஆனால், அந்தக் காரணிகள் ஜனாதிபதி தேர்தலில் அதேமாதிரியே தாக்கத்தைச் செலுத்தாமல் போகலாம்.

இலங்கை அரசியலில் பெரும்பகுதியும் பதவி ஆசை, அதிகாரம் மற்றும் அனுகூலங்களினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.எவ்வாறெனினும், பொதுஜன பெரமுன இரு ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும்  சுலபமாக வெற்றிபெற்றால், சுதந்திர கட்சியின் தலைவர்கள் ஓரங்கட்டப்படுவர்.

கோதாபய ராஜபக்ச ஆட்சி கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியை விடவும் கூட வித்தியாசமானதாகவே இருக்கும்.அது  செயற்திறன் மிக்கதாக ஆனால், அதேவேளை  எதேச்சாதிகாரமானதாக இருக்கும்.அத்தகைய ஆட்சியைப் பொறுத்தவரை, சுதந்திர கட்சியின் தற்போதைய சிந்தனைப்போக்கு ஒரு குந்தகமாகவே இருக்கக்கூடும்.கோதாபய புதிய ‘ இரத்தத்தையும் ‘ புதிய ‘ மூளைகளையும் ‘ நாடிச்செல்வார் என்பதில் சந்தேகமில்லை.அத்தகையதொரு ஆட்சி குறுகிய காலத்துக்கு பாதுகாப்புக்கு அல்லது பொருளாதாரத்துக்கு நல்லதாக இருக்கலாம்.ஆனால், ஜனநாயகத்துக்கோ அல்லது சுதந்திரங்களுக்கோ நல்லதாக இருக்காது. ஒரு மத்திய பாதையோ அல்லது சமநிலையான அணுகுமுறையோ இவற்றையெல்லாம் கணக்கில் எடுக்கவேண்டும்.

சுதந்திர கட்சி பல்வேறு வகைப்பட்ட ஆட்களுக்கும் அரசியலுக்கும் இடையே சமநிலைமைப் பேணக்கூடிய ஆற்றல்களைக் கொண்டிருந்த ஒரு கட்சியாகும்.அதுவே நிலைவரங்களைப் பொறுத்து அந்த கட்சியின பலமாகவும் பலவீனமாகவும் கூட இருந்தது.ஆனால், பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் உலகளாவிய கோட்பாடுகளின் அடிப்படையில் தொடக்கத்தில் இருந்தே கட்சி மத்திய பாதையொன்றுக்கான தெளிவான திசையமைவைக் கொண்டிருந்தது. இது விடயத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க பொதுவில் ஒரு சிங்கள இனவாதி என்று பழிகூறப்பட்டாலும் கூட, ஒக்ஸ்போர்ட்டில் இருந்து நாடுதிரும்பிய காலகட்டத்தில் அவர் ‘ பொதுவான மனிதகுலத்தை ‘ ( Common humanity )  பற்றி பேசினார்.பண்டாரநாயக்கவை விட வேறு எந்தவொரு தலைவரும் அத்தகைய சொற்தொகுதியை பயன்படுத்தியதாக நான் அறியவில்லை.அவர் வெளிப்படையான — புரிந்துகொள்ளக்கூடிய  காரணங்களுக்காக சிங்கள மக்கள் பக்கமாக சாய்ந்தார். அந்த சமூகத்தின் ஊடாகவே அவரால் ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பவும் கூடியதாக இருந்தது.

1952 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க சுதந்திர கட்சியை ஆரம்பித்போது பிரகடனம் செய்தததைப் போன்று முதற்பணி சிங்கள வெகுஜனங்களை  ஐக்கியப்படுத்தி அணிதிரட்டுவதாகவே இருந்தது.இரண்டாவது பணி ஒரு தேசியப்பதாகையின் கீழ் சகல சமூகங்களையும் ஐக்கியப்படுத்துவதாக இருந்தது.இரு பணிகளும் சில முரண்பாடுகளைக் கொண்டிருந்தன என்பது வெளிப்படையானது என்கிற அதேவேளை, இரண்டாவது பணி இன்னமும் கட்சியினால் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.ஒரு புறத்தில், சுதந்திர கட்சி வடக்கிலும் தெற்கிலும்  வறிய மக்களின் நன்மைக்காக முற்போக்கான விவசாயக்கொள்கை ஒன்றைக் கொண்டதாக இருந்தது. நாட்டுக்கு இன்று கூட செல்லுபடியானதாக கருதப்படக்கூடிய  ( சந்தைப் பொறிமுறைகள் மீது முக்கியமாக கரிசனையுடனான ) கலப்பான பொருளாதாரக் கொள்கைகளையும் கட்சி முன்வைத்தது.

அதேவேளை, இடதுசாரிக் கருத்துக்களை குறிப்பாக சில சோசலிசக் கொள்கைகளை வரவேற்கக்கூடிய கட்சியாகவும் அது விளங்கியது. சில கொள்கைகள் உள்நோக்கியவையாக ( மூடிய பொருளாதாரம் )வும் வேறு சில கொள்கைகள் முன்னோக்கியவையாகவும் ( வறியவர்களுக்கு பாதுகாப்பு ) இருந்தன.வெளியுறவு விவகாரங்களில் அணிசேராக்கொள்கை முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியதாகும்.கிழக்கு — மேற்கு சமநிலையொன்றை நாடுவதற்கு தேவையான ஒன்று என்று அணிசேராக்கொள்கை இனறும் வியாக்கியானப்படுத்தப்படக்கூடியதாகும்.

இலங்கையின் சூழ்நிலையையும் கட்சி முறையையும் கருத்திற்கொண்டு நோக்குகையில், சுதந்திர கட்சி மு்கியமான ஒரு ஜனநாயகக் கூறாக இருந்துவருகிறது என்பது குறிப்பாக கவனிக்கப்படவேண்டியதாகும்.இன்றும் கூட இந்த முக்கியமான கட்டத்தில் ஒரு ஜனநாயக கட்சி என்ற வகையில் சுதந்திர கட்சி வகிப்பதற்கு பங்கொன்று இருக்கிறது. அந்த கட்சி குறிப்பாக பாராளுமன்ற தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவுடன் ஏதோ ஒரு வகையான கூட்டணியை அமைத்துக்கொள்வதில் தவறேதுமில்லை.ஆனால், ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை, அது பொதுஜன பெரமுனவுக்கு முற்றுமுழுதாக கீழடங்கிப் போகுமேயானால், அதனால் அந்த பெரமுனவுக்குள் எதேச்சாதிகாரப் போக்குகள் வலுப்பட்டுவிடக்கூடும். குடும்பஆட்சி என்பது நாடு தவிர்த்துக்கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஏனைய அரசியல் சக்திகளின் ஊடாக சாத்தியமான நமநிலைப்படுத்தல் ஊடாக அல்லது அதற்கு அப்பாலும் சென்று குடும்ப ஆட்சியை தடுக்கவேண்டும்.

சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் பொதுஜன பெரமுனவின் வேட்பாளரையே தனது சொந்த வேட்பாளராக கருதுமேயானால் அது பெரிய அனர்த்தமாகிப்போகும்.பொதுஜன பெரமுன வெற்றிபெறும் பட்சத்தில் சுதந்திர கட்சி ஓரங்கட்டப்படும் அல்லது முற்றுமுழுதாக புறக்கணிக்கப்படும்.பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு இரண்டாவது விருப்புரிமை வாக்கை வழங்குவது அல்லது வாக்காளர்களே தீர்மானத்தை எடுத்துக்கொள்வதற்கு அனுமதிப்பதே சுதந்திர கட்சியைப் பொறுத்தவரை சிறந்த கொள்கையாக இருக்கும்.

ஐக்கிய தேசிய கட்சி சஜித் பிரேமதாசவை அல்ல, கரு ஜெயசூரியவையே உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கான சாத்தியப்பாடுகளே பெருமளவுக்கு இருக்கின்றன. ஆனால், இலங்கையில் இருந்து தொலைவில் வெளிநாட்டில் இருந்துகொண்டு துல்லியமாக எதிர்வு கூறுவது எனக்கு கஷ்டமானதாகும். அவ்வாறு கரு ஜெயசூரிய தான் நியமிக்கப்டுவாரேயானால், ஐக்கிய தேசிய கட்சியின் கிளர்ச்சியாளர்களுக்கும் சுதந்திர கட்சி்கும் இடையில் கூட்டணியொன்று ஏற்படுவதற்கான சாத்தியமும் தோன்றக்கூடும்.மற்றுமபடியும் கூட, ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய விரக்தி சுதந்திர கட்சி நோக்கித் திரும்புமே அல்லாமல், பொதுஜன பெரமுன நோக்கியல்ல. எதேச்சாதிகாரமான குடும்ப ஆட்சிக்கு வழிவகுத்துவிடக்கூடியதாக ‘ வெற்றுத்தாளில் ‘ கையெழுத்துவிடாமல் இருப்பதே எதிர்வரும் ஜனாதிபதிதேர்தலைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். இது எனது எதிர்வு கூறல் அல்ல, ஜனநாயகத்தின் நன்மைக்காக எனது ஒரு யோசனையாகும்.

தமிழில் வீரகேசரி

Share:

Author: theneeweb