எதற்கு தமிழர் கட்சிகளின் கூட்டு? யாருக்கு தமிழ் மக்களின் வோட்டு?

-குடாநாடான்-

எதிர் வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே ஒரு இலக்குடன் கட்சிகளின் பெயரால் பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்று கூறப்பட்டு வருகிறது. ஜனநாயக மரபின் பிரகாரம் கட்சி என்பது ஒரு கொள்கையின் கீழ் அதன் யாப்புச் சட்ட விதிகளின் படி  இயங்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் கட்டமைப்பாகும். எனவே அக் கட்சியின் வேட்பாளர் தெரிவு அக் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைய இடம் பெற வேண்டியது அவசியமான ஜனநாயக நடைமுறையாகும்.
இலங்கையில் கட்சிகளின் வரலாறு என்பது தனிநபரின் வரலாறாகவே இன்று வரை அமையப் பெற்று வருகிறது. இலங்கையின் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய, ஆங்கிலத்தில் கல்வி கற்றுப்(சுதேச மொழி தெரியாத) பட்டம் பெற்ற படித்த கனவான்கள் ஒன்றிணைந்து நாட்டின் ஆட்சியதிகாரத்தை கையேற்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை(UNP) உருவாக்கினார்கள். அதிலிருந்து பிரிந்து வந்தவைகள் தான் சிங்கள-தமிழ் மக்கள் மத்தியில் இன்று நாம் காணும் அனேக கட்சிகளாகும். இப்பிரிவுகள் யாவுமே தனிப்பட்டஒருவரின் செல்வாக்குகளுக்கு ஆட்பட்டே இடம் பெற்றன. நாட்டின் இன்றைய இரு பிரதான ஆளும் கட்சிகளும் இந்த வகையில் பிரிந்து வந்தவைகளே.
ஆனால் இக்கட்சிகள் எந்தக் காலத்திலும் தனிக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடாத்தியதில்லை. வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தே ஆட்சி நடாத்தி வருகின்றன. இந்தக் கூட்டு சேர்வது என்பது ‘கொடுக்கல் வாங்கல்’ என்ற வியாபாரமாகவே இருந்து வருகிறது. மக்களும் இதனை ஆதரித்தே வாக்களித்து வந்துள்ளனர். சர்வதேச சமூகமும் இதனை ஜனநாயம் என்று அங்கீகரித்து வருகிறது.
இன்று நாட்டில் உள்ள கட்சிகளின் கட்டமைப்பையும் அவற்றின் செயற்பாடுகளையும் சற்று உற்று நோக்கினால் அவைகள் யாவும் ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் உள்ள, அவரது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப முடிவுகளை மேற்கொள்கிற கம்பனிகளாகவே காணப்படுகின்றன.
மக்கள், மக்களின் நலன், மக்களின் உரிமைகள் என்று வாயளவில் உச்சரிக்கும் கட்சித் தலைவரும் அவரைச் சுற்றி இருப்போரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்தவிதமான அநியாயங்களையும் செய்வதற்குத் தயங்காதவர்களாகவே காணப்படுகின்றனர். கட்சித் தலைவரின்(கட்சிக்கல்ல) நம்பிக்கைக்குரியவராக செயற்படுபவர்கள் பட்டியலின் மத்தியில் இருந்து தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். கட்சியின் செயற்பாடு அதன் தலைவரின் குடும்பச் விவகாரம் என்கிற பாணியிலேயே அமைந்து வருகிறது.
இலங்கையில் சட்டம், நீதி துறைகள் சுதந்திரமாக செயற்படுமானால் சிறப்புரிமைகளோடு ராஜ பவனி வரும் இன்றைய மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பான்மையானவர்கள் சட்ட விசாரணைக்கு ஆளாக வேண்டியவர்களே.
இந்த வகையான தராதரங்களைக் கொண்டிருக்கும் கட்சிகள்தான் குடிமக்களின் வாக்குகளைப் பெற்று இலங்கையில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து வருவதாக சர்வதேசம் நற்சான்றிதழ்களை அவ்வப்போது வழங்கி வருகிறது. அண்மையில் இலங்கை ஜனாதிபதிக்கு “ஏப்ரல் 21 குண்டு வெடிப்புக்குப் பின் நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமைக்காக ‘இன்டர்போல்(சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பு)’ பதக்கம் வழங்கிப் பாராட்டியுள்ளது. இதனூடாக சர்வதேச சமூகத்தின் நீதி, நியாயத் தன்மையை இலங்கைக் குடிமக்கள் நன்கு புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக தமிழ்ப் பேசும் குடிமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 
1947ல் ஆட்சிக்கு வந்த நாள் முதல் எமது நிலங்களை கைப்பற்றத் தொடங்கி மலையகத் தமிழர்களை நாடற்றவராக்கி, தொழில் உரிமை – கல்வி உரிமைகளை மறுத்து, அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் வகைதொகை கணக்கின்றி மக்களைப் பிணங்கள், அங்கவீனர்கள், அனாதைகள், அகதிகள் என்றாக்கி வரும் ஆளுந்தரப்புக் கட்சிகளுடன் கடந்த 72 வருடங்களாக நடாத்தி வந்த அரசியல் நாடகத்தின் அடுத்த காட்சி தான் இன்று தமிழர் கட்சிகள் ‘நான் முந்தி. நீ முந்தி’ என, 2015 முதல் இரகசியத் திட்டத்துடன் ‘நல்லாட்சி’ என்ற பெயரில் நாடகமாடும் இந்த இரண்டு கட்சிகளுடனும் ஏற்படுத்தும் கூட்டு. இந்தக் கூட்டுக்காக எமது கட்சிகளால் முன் வைக்கப்படும் ‘நியாயப்படுத்தல்கள்’ தமிழ்ப் பேசும் மக்கள் சிந்திக்கும் திறனற்றவர்கள் என்று அவர்கள் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதையே மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.
அடுத்த தடவை இந்த இரு கட்சிகளில் இருந்து யார் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் சகல கட்சிகளும் பிழைத்துக் கொள்ளும். அதேவேளை மக்களுக்கு எதுவுமே கிடைக்காது. அத்துடன் ‘பயங்கரவாத அச்சுறுத்தல்’ என்ற போர்வையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ‘நச்சரிப்புக்களும் உத்தரிப்புக்களும்’ தாராளமாகவே கிடைக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டில் அண்மையில் இடம் பெற்று வரும் கைதுகளும், ஆயுதக் கண்டு பிடிப்புகளும் அதனைத் தொடர்ந்து அரசியல் வாதிகளினால் தெரிவிக்கபட்டு வரும் கருத்துக்களும், ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகளும் அமைந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றம்  மாகாணசபைத் தேர்தல்கள் தொடரக் கூடும்(தாமதமாக்கப்படவும் வாய்ப்பு உண்டு). இந்நிலைமையில் நாட்டின் குடிமக்களாகிய நாம் கடந்த 72 வருடங்களாக  எமக்கு வழங்கிய தங்களது வாக்குறுதிகளை மறந்து எங்களை ஏமாற்றியவர்களை, பௌத்த துறவிகளுக்குப் பணிந்து நாட்டின் சட்டங்களை மீறுவோரை, சுகாதாரத்தையும் கல்வியையும் காசுக்கு விற்பவர்களை, மக்களின் வரிப்பணத்தில் உலகம் சுற்றி உல்லாச பவனி வருபவர்களை, குற்றம் புரிந்தவர்களுக்குப் புகலிடம் அளிப்போரை, நாட்டில் தொடர்ந்தும் பயங்கரவாதச் சூழலை தக்க வைக்க முயற்சிப்பவர்களை தான் இம்முறையும் பதவியில் அமர்த்தப் போகிறோமா? என்று சிந்திக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் ஆட்களையோ, கட்சியையோ மட்டும் மாற்றுவதாக அமையக் கூடாது எமது தீர்ப்பு. மாறாக நாட்டின் நடைமுறைகள் யாவும் மாற்றியமைக்கப்படல் வேண்டும். அரசியல் யாப்பு, தேர்தல் முறைமை, பிரதிநிதிகளுக்கான தகைமை, அவர்களுக்கான கொடுப்பனவு, பொது நிதிச் செலவுக்கான கணக்குக் காட்டல், சுதந்திரமான நீதித் துறை, சுற்றாடல் பாதுகாப்பு, உடல் வருந்த உழைப்பவர்களின் அடிப்படை ஊதியத்திற்கான உத்தரவாதம் யாவும் மறுசீரமைப்புச் செய்யப்படல் வேண்டும்.
மேற் குறிப்பிட்டவற்றை நிறைவேற்றக் கூடிய கட்சிகளோ, தலைவர்களோ இன்று எமக்கு முன்னால் இல்லை. ஆனால் இவைகள்தான் வாக்காளராகிய எமது அபிலாசைகளும், கோரிக்கைகளும் என்பதை இவர்களுக்குப் புரியவைக்கும் ஒரு அதிர்ச்சி அறுவை சிகிச்சையாக இத் தேர்தலை நாம் பயன்படுத்த வேண்டும்.
19வது திருத்தச் சட்டம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்துள்ளதே தவிர முற்றாக நீக்கவில்லை. அதனை நாம் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக சகல விதமான ஊடக ஊதல்களையும் தாண்டி பௌதீகமான வகையில் நேருக்கு நேர் பார்த்து அனுபவித்து வருகிறோம்.
சக குடிமக்களே,  ஜனாதிபதி வேட்பாளர்களை நீங்களே உற்று நோக்குங்கள். அவதானியுங்கள். செவிமடுங்கள். மேலே குறிப்பிட்டுள்ள அபிலாசைகளை கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடியவரை நீங்களே தெரிவு செய்யுங்கள். வேட்பாளருக்கும் உங்களுக்கும் இடையே தரகர்களும், ஒப்பந்தக்காரரும், ஒட்டிப் பிழைப்போரும், தட்டிப் பறிப்போரும், தண்டக்காரரும், தடி எடுப்போரும், தவிச்ச முயல் அடிப்போரும் குறுக்கிட இடம் வைக்காதீர்கள். இந்தத் தடவையாவது உங்களுடைய வாக்குச் சீட்டின் சக்தியை உங்கள் மனச்சாட்சி கூறுவதன் படி சுதந்திரத்துடன் பாவியுங்கள்.
இம்முறை தேர்தலை இலங்கையின் வரலாற்றில், இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக சிங்கள பேரினவாத ஆளும் கட்சிகளுக்கும், அவர்களுடன் ஒத்து ஊதித் தங்களை தக்க வைப்போருக்கும் முகத்தில் அறையும் வகையில் பாடம் படிப்பிக்கும் விதமாக பயன்படுத்துவோம் என்று ஒரு உறுதிமொழி எடுப்போம். அதன் படி நடப்போம். மக்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை நடைமுறையில் உணர்த்துவோம்.
பி.கு.
“கொடுக்கல் வாங்கல் முறையிலேயே வட கிழக்குத் தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும்” என தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் தனது பேட்டியொன்றில் வலியுறுத்தியுள்ளார்.(chakkaram.com)(28 August 2019)
“அண்டை நாட்டில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை எவரும் மறந்து விடக் கூடாது” என தனது பேட்டியொன்றில் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார்.(themorning.lk(26 August 2019)
Share:

Author: theneeweb