கிளிநொச்சியில் இரண்டு நாளுக்கு ஒரு தடவையே நீர் விநியோகம் – நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

கிளிநொச்சி நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் மேற்கொள்ளப்படுகின்ற நீர் விநியோகமானது இரண்டு நாளுக்கு ஒரு தடவையே விநியோகிக்கப்படுகிறது என மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர் நிலைகளில் நீர் வற்றியதனால் குடிநீருக்கான நீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன.முக்கியமாக கிளிநொச்சிக்கான குடி நீர் விநியோகத்திற்கு நீர் பெறப்படும் குளமான கிளிநொச்சி குளத்தின் நீர் முழுமையாக மாற்றமடைந்துள்ளது. அதிகளவு பாசி காணப்படுவதனால் நீரின் நிறம் மாற்றமடைந்துள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 700 மீற்றர் கீயூப் நீரை சுத்திகரித்து வழங்கிய வந்த நிலைமை மாறி தற்போது சுமார் 350 மீற்றர் கீயூப் நீரையே சுத்திகரித்து வழங்க முடிகிறது. எனத் தெரிவித்த நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது தம்மால் 14 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு குழாய் வழி நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான கால நிலை தொடர்ந்து நீடித்தால் இரண்டு நாளுக்கு ஒரு தடவை வழங்கும் குடிநீர் விநியோகத்திலும் நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்து

Share:

Author: theneeweb