யூடியூப் நிறுவனத்துக்கு 170 மில்லியன் டொலர்கள் அபராதம்

சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யூடியூப் பயன்படுத்தும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தரவுகளை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்தி கொள்வதாக, அமெரிக்காவை சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. அந்த தரவுகள் மூலம் சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம், (U.S. Federal Trade Commission) விதிகளை மீறியதற்காக யூடியூப்பின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்துக்கு  170 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.

சிறுவர்களின் அந்தரங்கம் பேணும் உரிமை தொடர்பாக விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகை இது என கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த தொகை கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை ஒப்பிடும் போது மிகவும் குறைவு தான் என விமர்சனங்கள் எழுந்துள்ளன

Author: theneeweb