பௌத்த ஆதிக்கமா? ஜனநாயகமா? . கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரோ அதனைத் தொடர்ந்தோ நடைபெறப்;போகும் மாகாண, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் முன்னிலைப் படுத்தப்படும் ஒரே பிரச்சினை பௌத்த மதத்தினதும் பௌத்தர்களினதும் பேராதிக்கத்தை எந்தக் கட்சி அல்லது தலைமைத்துவம் நிலைநாட்டப்போகும் என்பதே. இந்த ஆதிக்கத்தாகம்சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தூபம்போட்டு வளர்க்கப்பட்ட இனவாதத்தீயின் உச்ச வெளிப்பாடு. இதை ஒரு வெறியென்றுகூட அழைக்கலாம்;
உண்ணாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் மிக வேகமாக வளர விடப்பட்டுள்ளது இந்த ஆதிக்கவெறி. இந்த வெறியில் கூத்தாடி வருகின்ற பொதுபல சேனை, ராவண பலகய, சிங்ஹ லே, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிரவாத இயக்கங்ளும் அவர்களின் இசைக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் பௌத்த குருமார்களும் பௌத்த ஆதிக்கத்தை ஆதரிக்கும் கட்சிக்கே பௌத்தர்களின் வாக்குகள் சென்றடைய வேண்டுமென அயராது பாடுபடுகின்றனர்.
இந்தக் கும்பல்களின் தீவிரவாதஈடுபாடுகள் இந்நாட்டின் இரண்டு சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதோடு மட்டுமல்லாது அவ்வினங்களை ஒன்றுசேரா வண்ணமும் தடுத்தாளப் பார்க்கின்றது. கடந்த பல ஆண்டுகளாக முஸ்லிம் சமூகத்தைப் பல இன்னல்களுக்குட்தள்ளி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்கின்ற அவர்களுக்கு அன்னியர் என்ற பட்டத்தையுஞ் சூட்டி, அவர்களை நாட்டைவிட்டே வெளியேற வேண்டுமெனவும் கூச்சல் போடுகின்றது. அதேவேளை தமிழ் மக்கள் அடர்ந்து வாழும் பகுதிகளுக்குள் பௌத்த இராணுவப் படையினரின் ஆதரவுடன் அத்துமீறிக் கூடியேறுவதும், இந்துக் கோயில்களை பௌத்த விகாரைகளாக மாற்றுவதும், மூலைமுடுக்குகளுக்குள் புத்தர் சிலைகளை இரவோடிரவாக நிறுவுவதும் இவ்வாதிக்க வெறியின் இன்னொரு பக்கமெனக் கூறலாம்;. இந்தச் செயல்களும் இவ்வெறியரின் பயங்கரமான பிரச்சாரங்களும் நாட்டின் இன மத அமைதியைக் குலைத்து ஜனநாயக அரசியலையும் உருக்குலைப்பதுடன் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கின்றமையை எல்லாயதார்த்தவாதிகளும் உணர்வர்.
இருந்தும் தேர்தல் களத்தில் குதித்துள்ள எந்தச் சிங்கள பௌத்த தலைவராவது இந்த ஆதிக்கவெறியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று இதுவரை பகிரங்கமாகக் கூறாதிருப்பது ஏன்?
கடந்த ஆனி மாதம் கண்டி நகரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்;டத்தில், பௌத்த துறவியொருவர்,“இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு வீடு. அதற்கு அவர்களே தனி உரிமையாளர், மற்ற இனத்தவரெல்லாம் குத்தகைக்குக் குடியிருப்பவர்களே”, என்று கூறியபோது ஏன் அவரின் கூற்றை பௌத்த அரசியல் தலைவர்கள் மறுத்துரைக்கவில்லை?அவ்வாறு மறுத்துரைத்த ஒரேயொரு அமைச்சரை ஒரு சமூக விரோதியாகக் கருதி பௌத்த பீடம் அவரை ஒதுக்கி வைத்துள்ளதை உணர்ந்து அவர்கள் அஞ்சினரோ?
இன்னுமொரு துறவி முஸ்லிம்களின்மேல் கல்மாரி பொழியுங்கள், அவர்களின் கடைகளைப் பகிஷ்கரியுங்கள் என்று கூற அவரை ஏன் இத்தலைவர்கள் கண்டிக்கவில்லை?தலைவர்களின் இந்த மௌனமே தேர்தலின் பின் என்ன நடக்கப்போகின்றது என்ற ஓர் அச்சத்தை குறிப்பாக சிறுபான்மை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.
பௌத்த ஆலயங்களுக்குள் அமைதியாக அடங்கி இருந்து சித்தாத்தரின் போதனைகளை பக்தர்களுக்கு உபதேசம் செய்த துறவிகளை தனது அரசியல் இலாபத்துக்காக தேர்தல் மேடைகளுக்கு இழுத்து வந்தவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலஞ்சென்ற பிதா எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள். ஈற்றில் ஒரு துறவியின் துப்பாக்கியினாலேயே அவர் கொலை செய்யப்படட்டது இந்த நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த ஓர் அத்தியாயம். இன்று அந்தத் துறவிகளின் புதிய ஒரு சந்ததியினர் வீதிகளையே தேர்தல் மேடைகளாக்கி,நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தையும் நாடி,இலங்கையை சர்வ துறைகளிலும் பௌத்தமயமான ஒரு நாடாக மாற்றுவதற்கு பௌத்த அரசியல்வாதிகளையும் தமது கைப்பொம்மைகளாக்கி விட்டமையை ஜனநாயகம் என்பதா மதவெறி என்பதா?
இவற்றிற்கு மத்தியில் பிரதான கட்சித் தலைவர்கள் பொதுமேடைகளில் நின்றுகொண்டு அடிப்படைவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாப்போம் என்று கூச்சலிடுவதில் ஏதேனும் அர்த்தமுண்டா? அவர்கள் அடிப்படைவாதம் என்று கருதுவது தீவிரவாத முஸ்லிம்களின் அடிப்படைவாதத்தை மட்டுமே. சில முஸ்லிம் கொலைகாரர்களினால் அவிழ்த்துவிடப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு நாசகாரச்செயல் இத்தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அடிப்படைவாதத்தை ஒழிப்போம் என்பவர்கள் பௌத்த ஆதிக்கவெறியை ஒழிப்போம் என்று வெளிப்படையாகக் கூறுவார்களா?
அதேபோன்று நாட்டைப் பாதுகாப்போம் என்று கூறுபவர்கள் யாரிடமிருந்து
என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லையே. ஈஸ்டர் கொடுமையையே
மையமாகவைத்து மத்தியகிழக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டுக்குள் நுழையப் பார்க்கிறார்கள் என்ற ஒரு பயத்தை மக்களிடையே பரப்புகின்றனர். ஆனால் அச்சம்பவத்துக்கும் அந்தத் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்பதைத்தானே இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறாயின் வேறெங்கிருந்து இந்த ஆபத்து வரப்போகின்றது? சீனாவிலிருந்தா, இந்தியாவிலிருந்தா, அமெரிக்காவிலிருந்தா? இந்த நாடுகளை இலங்கைக்குள் இழுத்துவந்தவர்களே இந்தத் தலைவர்கள்தானே.
நாட்டின் இறைமையை யாருக்கும் சரணடைய விடமாட்டோம் என்று இன்னொரு பல்லவியையும் பாடக்கேட்கிறோம். உலகமே ஒரு கிராமமாகிவிட்ட இந்த புகோளமயவாக்க யுகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உதயமாகிய இறைமைத் தத்துவம் என்றோ காலாவதியாகிவிட்டதென்பதை இத்தலைவர்கள் உணர்வார்களா? அமெரிக்க வல்லரசுகூட தனது தற்பாதுகாப்புக்காக இன்னொரு நாட்டுக்குள் படையெடுப்பதென்றால் முதலில் ஐக்கிய நாட்டுப் பொதுச்சபையின் அனுமதியையேனும் பெறவேண்டியுள்ளது. இறைமையென்ற பெயரால் ஒரு நாடு; அணுவாயுதங்களைக்கூட பாதுகாப்புக்கருதி குவிக்க முடியாது. இலங்கையின் இறைமை உண்ணாட்டுப்போர் தொடங்கியதிலிருந்தே கசிவடையத் தொடங்கிற்று. இப்போது அதுபற்றி ஒப்பாரி வைப்பதில் பயனில்லை. இறைமையின் அர்த்தமே மாறிவிட்ட இந்த யுகத்தில் எந்த இறைமையைப்பற்றி இந்த அரசியற் பிரசங்கிகள் பிரஸ்தாபிக்கிறார்கள்?
ஆகவே, இப்போது பாதுகாக்கப்பட வேண்டியது நாட்டின் ஜனநாயகமும், அதன்கீழ் வாழும் பிரஜைகள் யாவரினதும் உரிமைகளும். இவை இரண்டும் உறுதிப்படுத்தப்படுமானால் மக்களிடையே தேசப்பற்றும் இலங்கையர் என்ற உணர்வும் வளரும். இனமத அமைதியேற்பட்டுப் பொருளாதாரமும் செழிக்கும். இதற்கு இடைஞ்சலாக வளர்கிறது பௌத்த ஆதிக்கவெறி. இதுவே ஜனநாயகத்துக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் ஒரு எதிரியாகத் தோற்றமெடுத்துள்ளது.
இந்த நாட்டின் சனத்தொகையில் பௌத்தர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. நாட்டின் அரசியல் யாப்பிலும் பௌத்தத்தக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளதையும் இலகுவில் மாற்றமுடியாது. இவ்விரண்டு தரவுகளையும் ஏற்றுக்கொண்டு பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேற்றுமையின்றி சகல மக்களின் ஜனநாயக, ஜீவாதார உரிமைகள் பேணப்படல் வேண்டும். இதை எந்தக் கட்சி உறுதி செய்யும்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழமையான கட்சிகளுடன் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) களத்தில் குதித்துள்ளது. அதனுடைய தேர்தல் விஞ்ஞாபனம் பூரணமாக இன்னும் வெளிவரவில்லையெனினும் இனவாதத்ததையும் மதவாதத்தiயும் ஒதுக்கி இலங்கையரென்ற தோரணையில் நாட்டின் பொருளாதார மீட்சிக்கான மறுசீரமைப்பு,நாட்டு மக்கள் அனைவரின் நலன் மேம்பாடு, ஜனநாயக உரிமைகள் என்ற மூன்றையும் முன்வைத்து அக்கட்சியின் தலைவர் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
இக்கட்சி ஏற்கனவே இரண்டு முறை 1970இலும் 1984இலும் அரசியற் கிளர்ச்சியில் ஈடுபட்டுத் தோல்வியடைந்துள்ளதை மறுக்கமுடியாது. அவை அக்கட்சியின் வரலாற்றில் குருதிபடிந்த ஓர் அத்தியாயம். எனினும் அவைபற்றிய இரண்டு உண்மைகளை மனதிற்கொள்ளல் வேண்டும். முதலாவது, அக்கட்சியின் இன்றையத் தலைவர்களிற் பெரும்பான்மையினர் 1970இல் பிறந்திருக்கவும் மாட்டார்கள்.அப்பொழுது பிறந்தவர்கள் 1984இல் பதின்மவயதைக் கழித்திருப்பர். மனித வாழ்வில் அந்தப்பருவம் எப்படிப்பட்டதென்பது எல்லாருக்கும் தெரியும். புரட்சிவாதத்தினுள் மயங்கி, புரட்சியால் உலகையே மாற்றியமைக்கலாமெனத் துடிக்கவைக்கும் பருவம் அது. அந்தத் துடிப்பு வரலாற்றில் ஏற்படுத்தியுள்ள உயிரிழப்புகளும் உடமைச் சேதங்களும் அனந்தம். ஆனால் வயது முதிரமுதிர யதார்த்தம் உணர்வுகளையும் சிந்தனைகளையும் மாற்றும். அவ்வாறு மாற்றமடைந்தோரே இக்கட்சியின் புதிய தலைவர்கள். இது இரண்டாவது உண்மை. இதனாலேதான் இக்கட்சியை ஒரு புதிய கோணத்திலிருந்து யாவரும் நோக்க வேண்டுவது அவசியம். இக்கட்சியின் ஆரம்பகாலத் தலைமைத்துவம் இழைத்த குற்றங்களுக்கு இந்தத் தலைமுறை மன்னிப்புக் கோரவேண்டுமெனச் சிலர் நினைப்பது எவ்வகையிற் பொருந்தும்?
இன்றைய அரசியற் சூழலில் இலங்கை ஒரு புதிய மாற்றத்தை வேண்டி நிற்கின்றது. இதுவரை நாட்டை ஆண்ட கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் இனவாதத்தையே துரும்பாகப் பாவித்து, ஆட்சியமைத்து, ஆட்சியின் நன்மைகளையும் இனவாதரீதியிலேயே பகிர்ந்தளித்துள்ளனர். இதனால் இலங்கையர் என்ற உணர்வும் தேசப்பற்றும் வளாரது நாட்டையே பிரிக்கவேண்டுமென்ற எண்ணத்தையும் அவர்கள் தோற்றுவித்தனர்.அவர்கள் பேசியதெல்லாம்ஜனநாயகம் நடைமுறைப்படுத்தியதெல்லாம் இனநாயகம். இனியும் மக்கள் இந்தப் பம்மாத்துக்குப் பலியாக வேண்டுமா?
இந்த நிலையில்,இரண்டு சிறுபான்மை இனங்களும் இந்தப் பம்மாத்துக்காரருடனேயே மீண்டும் பேரம்பேசத் துணிந்தால் சிறுபான்மையினரின் தலைவர்கள் வரலாற்றின் பாடங்களைச் சரியாகப் படிக்கவில்லை என்பதுதான் அர்த்தம். எப்போதுமே புதுமையைப்பற்றிய ஒரு பயம் எல்லாருக்கும் ஏற்படுவது சகஜம். அந்தப் பயத்தினால் புதுமையை என்றுமே தழுவாமல் இருந்தால் பழமை சமூக்தையும் மக்களையும் பின்தள்ளிக்கொண்டே இருக்கும்;. எனவேதான் ஜே.வி.பி தலைமைத்துவத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது புத்திசாதுரியமானதாகும். பௌத்த ஆதிக்கவெறியை கூண்டிலடைத்து ஜனநாயகப் பறவையை சுதந்திரமாகப் பறக்கவிட விரும்பினால் இப்புதிய தலைமைத்துவத்துக்கு வாய்ப்பளிப்பது சாலவும் சிறந்தது.

Share:

Author: theneeweb