பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளரா? மறுக்கிறார் கபீர் ஹாஷீம்

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பெயரிடுவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துளளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தகுதியான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வது குறித்தே கலந்;துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்;டமைப்பின் வேட்பாளராக முன்னிலையாகுமாறு இந்த கலந்துரையாடலின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான தமக்கு அதற்கான உரிமை உள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலின் போது சகலரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அதற்காக செயற்குழுவில் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேறு எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளார்களாயின் அது தொடர்பில் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் ஒன்றை எட்ட முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரதமரின் இந்த தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசீம், அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட சிலர் கருத்து வெளியிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே நாளை இடம்பெறவிருந்த முக்கியமான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது.

Share:

Author: theneeweb