என்னவோ நடக்குது நடப்பு – சக்தி சக்திதாசன்

ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. மறையும் ஒவ்வொரு இரவும் அதைத்தொடர்ந்து விடியும் ஒவ்வொரு பொழுதும் புதிய பக்கங்களை இவ்வரசியல் புத்தகத்தில் இணைத்த வண்ணமிருக்கின்றன.

புதிதாகப் பதவியேற்று ஏறக்குறைய ஒரு மாதமே பதிவியிலிருக்கும் எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் முன்னால் நேற்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று ஆகும். அவை மூன்றிலுமே தோல்வி கண்டவர் எனும் பெருமையைத் தனதாக்கிக் கொண்டார்.

நேற்று 2019, செப்டெம்பர் 4ம் நாள் பாரளுமன்றத்தில் கூட்டுச் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டு வரப்பட்ட , ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடக்கையற்றதோர் விலகலைத் தடை செய்வதற்கான மசோதா 28 வாக்குகளினால் வெற்றியடைந்தது.

அதனைத் தோற்கடிக்க வேண்டும் என்று விவாதித்த பிரதமர் பொரிஸ் ஜான்சனிதும், அவரது அமைச்சரவையினதும் விவாதங்கள் செவிடர் காதில் ஊதிய சங்காயின.

அதுமட்டுமல்ல இம்மசோதாவில் ஒரு திருத்த,ம் மற்றொரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னைநாள் லேபர் கட்சித் தலைவர் நீல் கினொக் அவர்களின் மகன் ஸ்டீபன் கினொக் அவர்களினால் கொண்டு வரப்பட்டது.

அது என்ன?

பாராளுமன்றத்தினால் பெரும்பான்மை வாக்குகளினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விலகல் உடன்படிக்கையை ஜரோப்பிய ஒன்றியத்துடன் எட்டாத பட்சத்தில் விலகுவதற்கான திகதியை அக்டோபர் 31 இலிருந்து ஜனவரி 31 வரை நீடிக்கும் காலவரையை பிரதமர் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே வெற்றி பெற்ற மசோதாவின் சாரம். இல்லையா?

அப்படி அக்கலக்கெடுவின் நீடிப்பை பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பிரதமர் இந்நீடிக்கப்பட்ட காலவரையினுள் பாராளுமன்றத்தினல் பெரும்பான்மை பலத்துடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே அத்திருத்தம்.

பிரதமரின் போதாத காலம் அத்திருத்தமும் வெற்றி பெற்றுவிட்டது.

அது மட்டுமல்ல இம்மசோதா சட்டமாக்கப்படுவதற்கான சம்மதத்தை பிரபுக்கள் சபையில் பெரும்பான்மை பலத்துடன் பெறுவதே இதன் அடுத்த கட்டம்.

நேற்றிரவே இம்மசோதா பிரபுக்கள் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து பிரதமர் இந்நிலையில் ப்ரெக்ஸிட் எனும் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பொதுத்தேர்தல் ஒன்றே வழி என்றார்.

மக்கள் என்மீதா, எதிர்கட்சித் தலைவர் மீதா நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதைத் தேர்தல் மூலம் தெரிந்து கொள்வோம். அக்டோபர் மாதம் 15ம் திகதி தேர்தலை நடத்துவோம் என்றார்.

அக்டோபர் 15ம் திகதி என்று அவர் கூறியதன் காரணம் கலக்கெடுவான அக்டோபர் 31ம் திகதிக்கு முன்னதாக நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்பதற்கான ஜரோப்பிய ஒன்றியட்த் தலைவர்களது கூட்டம் அட்டோபர் 17ம் திகதி என்பதினாலேயே.

தேர்தல் 15ம் திகதி நடைபெற்று மக்களின் புதிய ஆணையோடு வெற்றி பெற்ற புதிய பிரதமர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஒரு புதிய உடன்படிக்கையை எட்டலாம் என்பது இவரது வாதம்.

ஆனால் புதுத்தேர்தல் நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டும். பிரதமரின் கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகளில் முக்கியமான லேபர் கட்சி செவிசாய்க்க மறுத்து விட்டது.

காரணம்,

பொதுத்தேர்தலுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால் பிரதமர் அக்டோபர்15ம் திகதி என்று இப்போது கூறிய தேர்தல் திகதியை ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சட்டபூர்வமாக வெளியேற வேண்டிய அக்டோபர் 31 எனும் திகதிக்கு அப்பால் தள்ளி வைத்து விடுவார்.

இதன் விளைவு எந்த உடன்படிக்கையும் எட்டாவிடில் உடன்படிக்கையற்ற விலகலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஐக்கிய இராச்சியம் தள்ளப்படும் என்பதுவே.

பொதுத்தேர்தலுக்கு தாம் சம்மதம் தெரிவித்து ஆதரவளிப்போம் எப்போ தெரியுமா? உடன்படிக்கையற்றதோர் விலகலை பிரதமரின் கைகளில் இருந்து அகற்றுவதற்காக தாம் கொண்டு வந்த பிரேரணை மகராணியின் கையொப்பத்தைப் பெற்று சட்டமூலமாக்கப்பட்ட பின்பே.

இதுவே லேபர் கட்சியின் நிலைப்பாடு.

இக்காரணங்களினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் எனும் பிரதமரின் மசோதா தோல்வியடைந்தது.

சரி இனி மேற்கொண்டு பார்ப்போம்,

இம்மசோதவின் அடுத்த கட்ட நகர்வினுக்கு இடையூறாக பிரதமரின் கட்சியைச் சேர்ந்த பிரபுக்கள் இம்மசோதா மீது 92 திருத்தங்களை வைத்துக் காத்திருந்தார்கள்.

நேற்றிரவு தொடங்கிய விவாதம் இரவிரவாக நடந்தேறியது. பல திருத்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எதிர்க்கட்சி பிரபுக்களின் கூட்டுச் சேர்க்கையினால் தோற்கடிக்கப்பட்டது.

இன்று காலை செய்திகளின் பிரகாரம் இம்மசோதவின் மீதான விவாதங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, இன்று முடிவடைவதற்குள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் எனும் தீர்மானம் பிரபுக்கள் சபையில் எட்டப்பட்டுள்ளது.

மசோதாவின் வாக்கெடுப்பை விவாத நீடிப்பின் மூலம் அதிக பட்சமாக தள்ளிப்போட முனைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதமரின் கட்சியைச் சேர்ந்த பிரபுக்களின் மனதில் ஏனிந்த திடீர் மாற்றம்?

இங்கேதான் இது பிரதமரின் அடுத்தகட்ட நகர்வுக்கான திட்டமோ எனும் சந்தேகம் எழுகிறது.

இதம்மசோதா சட்டமாக்கப்பட்டதன் பின்னால் பொதுத்தேர்தலுக்கு ஆதரவளிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார் அல்லவா? தங்குதடையின்றி இம்சோதா சட்டமாக்கப்படுவதற்கு துணைபோனால் விரைவில் மசோதா சட்டமாக்கப்பட்டு தன்னுடைய நோக்கமான் பொதுத்தேர்தலுக்கான அங்கீரத்தையும் விரைவில் பெற்று விடலாம்.

இந்தக் கணக்கின் பிரகாரம் பிரபுக்கள் சபையில் தன் ஆதரவாளர்களின் மனமாற்றத்தை தூண்டியுள்ளாரோ எனும் சந்தேகம் அரசியல் அவதானிகள் மத்தியில் உலவுகிறது.

வாழ்வோ, சாவோ அக்டோபர் 31ம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது உறுதி என்று சூளுரைத்த பிரதமரின் இன்றைய நிலையைப் பார்ப்போமா?

  • உடன்படிக்கையுடனோ, உடன்படிகையற்றோ அக்டோபர் 31ம் திகதி ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் எனும் அவரது சூளுரைப்பு நிறைவேறுவது சந்தேகமே !

  • ஒரு பொதுத்தேர்தல் மூலம் வெளிவரலாம் என்று எதிர்பார்த்த அவரது திட்டம் தோல்வி

இந்நிலையில் அவருக்கிருக்கும் வழிகள் தான் என்ன?

  • எதிர்கட்சிகளின் நோக்கத்தின்படி அவர்களது மசோதா இவ்வார இறுதியில் சட்டமூலமாக்கப்படும் பட்சத்தில் அடுத்தவார ஆரம்பத்தில் பொதுத்தேர்தலுக்கான அங்கீகாரத்தைப் பெற்று விடுவது.

  • அவரும், அவரது மந்திரிசபையும் இராஜினாமச் செய்வதன் மூலம் மகாராணியாரை எதிர்கட்சித் தலைவரிடம் அரசமைக்க முடியுமா எனும் கேள்வியை எழுப்புவது. எதிர்க்கட்சித் தலைவர் அரசமைப்பதானால் அவர் மற்றைய எதிர்க்கட்சிகளின் அதரவை நாட வேண்டும். மர்ரைய கட்சிகளின் தலைவர்கள் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன் பிரதமராவதை விரும்ப மாட்டார்கள். எனவே எதிர்க்கட்சியும் அரசமைக்க முடியாத பட்சத்தில் அது ஒரு பொதுத்தெர்தலுக்கு வழிவகுக்கும்.

  • நான் ஒரு பொதுத்தேர்தல் நடத்திய பின் தான் ப்ரெக்ஸிட் எனும் விவகாரத்தை தீர்க்க முடியும் எனவே எனக்குக் காலக்கெடு நீட்சி வேண்டும் என்று அக்டோபர் 31 எனும் விலகல் திகதிக்கு கால நீட்சியை ஜரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கேட்டுப் பெறுவது.

இவைகளில் அவர் எந்த வழி செல்வார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கருத்துக் கணிப்புகளில் எதிர்க் கட்சியான லேபர் கட்சியை விட பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சி 10 புள்ளிகளினால் முன்னிற்கிறது.

இதன் அடிப்படையில் தமது வெற்றி உறுதி எனும் நினைப்பிலேயே பிரட்தமர் பொதுத்தேர்தல் எனும் வழி ஏக நினைக்கிறார். ஆனால் கடந்த மூன்றரை வருடங்களாக ப்ரெக்ஸிட் எனும் விவகாரத்தின் மீதான பலத்ரப்பு விவாதங்களின் மூலம் அன்றைய சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னால் மக்களுக்குப் புலப்படாத பல விடயங்கள் இப்போது புலப்பட்டுள்ளன.

பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது கன்சர்வேடிவ் கட்சி தனது வெற்றியை ப்ரெக்ஸிட்எனும் அந்த ஒரு விடயத்தில் மக்கள் அதரவு தமக்கிருக்கும் என்பதன் அடிப்படையிலேயே நம்புகிறார்கள்.

இன்றைய சூழலில் மக்கள் எத்தகையதோர் முடிவை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இன்று சற்று முன்பு கிடைத்த செய்திகளின் படி பொரிஸ் ஜான்சன் அவர்களின் மந்திரி சபையினில் ஒரு மந்திரியாக இருந்த ஜான் ஜான்சன் தனது மந்திரிப்பதவியையும், பாராளுமன்ற அங்கத்தினர் பதவியையும் இராஜினாமச் செய்கிறார் என்று தெரிகிறது.

இதற்குக் காரணமாக தனது குடும்பத்துக்கும், நாட்டின் நன்மைக்கும் இடையிலே ஏற்படும் போராட்டத்தினால் ஏற்படும் மனச்சிக்கலைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே இத்தீர்மானம் என்று கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு விடிவும் இங்கிலாந்து அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் புதிய செய்திகளை எழுதிக் கொண்டிருக்கிறது.

சிலவேளைகளில், சில விடயங்களில் நாம் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடிகிறது.

அடுத்துவரும் வேளைகள் தொடுத்துவரும் நிகழ்வுகளை எதிர்பார்த்திருப்போம்.

5.9.2019

Share:

Author: theneeweb