நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினர் மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ள நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினர், விரைவில் அவுஸ்திரேலியா திரும்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம் – பிரியா மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர் குறித்த நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் குறித்த குடும்பத்தை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த குடும்பத்திற்கு ஆதரவு வலுத்துவருவதால் அந்தக் குடும்பம் மீண்டும் அவுஸ்திரேலியா திரும்புவதற்கு அரசாங்கம் தடையாக இருக்காது என்று உயர்மட்ட அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக சில செய்தித் தளங்களை மேற்கோள்காட்டி SBS செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஏதிலி அந்தஸ்து கோருதல் தொடர்பான தற்போதைய அவுஸ்திரேலிய விதிமுறைகளின்படி, ஒருவரின் ஏதிலி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர் திரும்பிச் செல்வதற்கு மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாக அவரின் நாட்டுக்கு அரசாங்கம் திரும்ப அனுப்பிவைக்கும்.

அவ்வாறு பலவந்தமாக நாடுகடத்தப்பட்ட ஒருவர் மீண்டும் அவுஸ்திரேலியா வருவதற்கு விண்ணப்பிக்க ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்படும். என்றும் அதன் பின்னரே அவர் விண்ணப்பிக்க முடியும்.

இதேநேரம், அவர் பலவந்தமாக திருப்பி அனுப்பிவைக்கப்படுவதற்கு அரசாங்கம் செலவு செய்த பணத்தை மீள செலுத்திய பின்னர், அவர் மீண்டும் அவுஸ்திரேலியா வருவதற்கு அனுமதிக்கப்படுவார் என குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb