வலி கிழக்கிலிருந்து சந்நிதி செல்லும் பலம் திறந்து வைப்பு மேலதிக ஏற்பாடுகளும் பூர்த்தி

வலி கிழக்கில் இருந்து சந்நிதி ஆலய வளாகத்தினை அடையும் தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணை பலத்தினூடான போக்குவரத்து கதவுகள்  நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் திறந்து விடப்பட்டுள்ளதுடன் உற்சவத்தினை முன்னிட்டு இப்பகுதியூடாக ஆலயத்தினை அடையும் பக்தர்களுக்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சந்நிதி முருகன் ஆலயத்தின் உற்சவத்தின் போது வருடா வருடம் தொண்டமனாறு உவர் நீர்த்தடுப்பணை பாதை ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படுவது வழமையாகவுள்ளது. இவ் வருட உற்சவத்தில் ஆறு நாட்கள் முழுமையாக இப்பகுதி  ஊடான போக்குவரத்திற்கு நீர்ப்பாசனத்திணைக்களம் உடன்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பாலத்தின் ஊடாக பக்கதர்களின் போக்குவரத்திற்கு திறந்துவிடும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.
நீர்ப்பாசனப் பொறியியலாளர் சர்வநந்தன் சர்வராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராஜா உள்ளிட்ட ஆலய முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், கிராமசேவையாளர்கள், நலன்பேண் சேவைகளைச்சேர்ந்தோர் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பக்தர்களின் போக்குவரத்திற்கான பாதைகளும் திறந்து விடப்பட்டன.
இப்பாலம் யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் குறிப்பாக சந்திநி உற்சவ காலத்தில் பிரதேச சபைகளின் பங்களிப்போடு மண் அணைகள் அமைக்கப்பட்டு பக்கதர்களின் போக்குவரத்திற்கு அனுமதிக்கபட்டது. எனினும்; யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீரைப்பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் 400 மில்லியன் நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட மிக நீண்ட அழகான புறத்தோற்றமுடைய இப்பாலத்தின் பணிகள் கடந்த வருடம் பூர்த்திசெய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் இருந்து சந்நிதி ஆலயத்தினை அடையும் இலகுவழி மார்க்கமாக இப் பாதை உள்ளது. கடந்த வருடம் உற்சவகாலத்தில் மூன்று நாட்களே இப்பாதை திறந்து விடப்பட்டபோதும் இம் முறை ஆறுநாட்களுக்கு திறந்துவிடப்படவுள்ளது.
இதேவேளை, சந்நிதி உற்சவ ஏற்பாட்டுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு இணங்க தனியார் வாகனத்தரிப்பிடவசதிகள் ஏற்பாடு செய்துள்ளதுடன் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் அரச தனியார் வாகனங்கள் தரித்து நின்று பக்தர்களை ஏற்றிச் செல்வதற்கான உரிய உரிய ஒழுங்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதுடன் வாகன நெரிசலைக்கட்டுப்படுத்தும் வலி கிழக்கு பிரதேச சபை எல்லையூடாக ஆலயத்தினை அடையும் வாகனங்களுக்கு நோக்கில் ஒருவழி போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்தும் பொலிசாருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
Share:

Author: theneeweb