பிரெக்ஸிட் விவகாரம்: பிரிட்டன் அமைச்சர் ராஜிநாமா

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அமைச்சரவையிலிருந்து மூத்த அமைச்சர் ஆம்பெர் ரூட் விலகியுள்ளார்.
இது, இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்ஸனுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் பிரதமராகப் பொறுப்பேற்ற போரிஸ் ஜான்ஸனின் அமைச்சரவையில், பணியாளர் மற்றும் ஓய்வூதிய விவகார இணையமைச்சராக ஆம்பெர் ரூட் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு உறவு தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரதமர் போரிஸ் ஜான்ஸன் போதிய முயற்சி மேற்கொள்ளாததால் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஐரோப்பிய யூனியனும், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான பிரிட்டனின் பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டு வருகின்றனர். ஆனால், அத்தகைய பரிந்துரைகள் எதுவும் இதுவரை பிரிட்டன் தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை’ என்று குற்றம் சாட்டினார்.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு உறவு தொடர்பாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தெரசா மே மேற்கொண்ட ஒப்பந்தத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துவிட்டது.
பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயர்லாந்துக்கும், தனி நாடாகத் திகழும் அயர்லாந்துக்கும் இடையே வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஒப்பந்தத்தை எம்.பி.க்கள் நிராகரித்தனர்.
இதனால், தெரசா மே தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்ஸன், ஐரோப்பிய யூனியனுடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

Share:

Author: theneeweb