இலங்கைக்குள் நுழைய முற்பட்ட சர்வதேச குற்றவாளி திருப்பி அனுப்பப்பட்டார்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரும், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளவருமான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது அவரை நாடு கடத்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போட்டாபயவ் நுர்சான் என்ன 40 வயதான கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கஜகஸ்தான் நாட்டுக்கு செல்லாமல்  துபாயில் தனது மனைவியுடன் தங்கியிருந்துள்ளார்.

இதேவேளை கஜகஸ்தான் அரசு இவரை கைது செய்ய பிடிவிராந்து பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

அவர் இன்று காலை 8.30 அளவில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈ.கே-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு பிரிவுக்கு சென்று அதன்னுடாக நாட்டிற்குள் நுழைவதற்கு விசா பெறுவதற்காக தனது கடவுச்சீட்டை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

அப்போது குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டு தகவல் கட்டமைப்பில் அவரின் கடவுச்சீட்டு பரிசோதிக்கப்பட்ட போது குறித்த நபரை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாத வகையில் பட்டியலிடப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த நபர் தனது கடவுச்சீட்டுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய தலைமை குடிவரவு அதிகாரியிடம் விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டார்.

அதன்போது அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை கண்டறியப்பட்டது.

அத்துடன் அவர் பல குற்றங்களுடன் தொடர்புடையதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வருகை தந்தமை தெரியவந்துள்ளது.

Share:

Author: theneeweb