கிளிநொச்சி: வெள்ள அபாயமும் வரட்சி அனர்த்தமும் – கருணாகரன்

 

“…பார்க்குமிடமெல்லாம் நந்தலாலா

பட்டமரம் தோன்றுதையே நந்தலாலா.

காணும் காட்சியெல்லாம் நந்தலாலா

காய்ந்தே தெரியுதையே நந்தலாலா…”

இப்படிப் பாடிக்கொண்டு போகிறார் ஒரு முதியவர். வெயில் கொழுத்திக் கொண்டிருக்கிறது. தெருவில் ஆட்களே இல்லை. எங்காவது ஒன்றிரண்டு பேர் மட்டும் அவசரமாக எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகங்களும் காய்ந்து வரண்டே உள்ளன. தொலைவில் நான்கைந்து மாடுகள் எதையோ மேய்வதற்கு முயற்சிக்கின்றன. நிலத்தில் புற்களே இல்லை. மாடுகளிலும் ஒரு சொட்டு தசைப் பிடிப்பில்லை. கோழிகள் சோம்பிச் சோம்பி விழுந்து சாகின்றன. ஒரு சொட்டு நிழலுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டலைகின்றன நாய்கள். விசர் முற்றிப்போகுமோ என்று அச்சமாயிருக்கிறது. வளவுகளில் தென்னைகள் எல்லாம் தலைகுத்தி முறிந்துள்ளன. ஊரே இழவு வீடாகத் தோன்றுகிறது.

இதுவே கிளிநொச்சியின் நிகழ்காலக் காட்சிகள்.

சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு வெள்ள நிவாரணம் பெற்ற சனங்கள் இப்பொழுது வரட்சி நிவாரணத்துக்காக விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளத்துக்குக் காரணமும் இந்தச் சனங்கள்தான். இப்பொழுது பற்றியெரியுமளவுக்குக் கொதித்துக் கொண்டிருக்கும் வரட்சிக்குக் காரணமும் இந்தச் சனங்கள்தான். வெள்ளம் வந்தாலும் லாபம். வரட்சி வந்தாலும் லாபம். இரண்டுக்கும் நிவாரணம் கொடுப்பார்கள் அல்லவா. ஆகவே எது வந்தாலும் அது நன்மையே என்றுதான் எல்லோரும் கணக்குப் பார்க்கிறார்கள். இல்லையென்றால், இப்படிப் போய் தலை வரண்ட வேலையைச் செய்வார்களா?

எங்கள் வீட்டிலிருக்கும் தென்னைகளிலிருந்த குரும்பையெல்லாம் உதிர்ந்து கொட்டி விட்டது. ஐந்து தென்னைகள் இன்றோ நாளையோ தலையைக் கவிழ்க்கும். இவ்வளவுக்கும் இந்த மரங்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வளர்க்கப்பட்டவை.

இப்படித்தான் ஊர் முழுவதிலும் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகப் பாடுபட்டு வளர்த்த மரங்கள் எல்லாம் வரண்டு வாடிப்படுகின்றன. இது ஏதோ இந்த ஆண்டு வந்த வரட்சியினால் மட்டும்தான் நடக்கிறது என்று யாரும் எண்ணி விட வேண்டாம். ஒவ்வொரு ஆண்டும் கிளிநொச்சியில் வரட்சி ஏற்படுகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை வெள்ளப் பெருக்கு நிகழ்கிறது. இரண்டின்போதும் சனங்கள் அல்லாடுகிறார்கள். இரண்டின்போதும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அல்லற்படும் சனங்களோடு கிடந்து மாய்கிறது. இரண்டின்போதும் அரசியல் தலைவர்கள் வந்து, தாம் ஆபத்பாந்தவர்கள் எனத் தோற்றம் காட்டுவதற்காக அல்லற்படும் சனங்களோடு நின்று படங்களை எடுத்துப் பரப்புரை செய்கிறார்கள்.

ஆகவே, எல்லோருக்கும் வெள்ளமும் வேண்டும். வரட்சியும் வேண்டும் என்றாகி விட்டது. இல்லையென்றால் வெள்ள அரசியலை எப்படிச் செய்வது? வரட்சி அரசியல் வியாபாரத்துக்கு என்ன வழி? சனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமல்ல, அதிகாரிகளுக்கும் வெள்ளம் வேண்டும். ஏனென்றால், வெள்ள நிவாரணத்திலும் கையை வைக்கலாம். வரட்சி  நிவாரணத்திலும் சுருட்டிக் கொள்ளலாம் அல்லவா! கணக்கில்லாமல் வரும் வருவாய் அது.

கடந்த வெள்ளப் பெருக்கின்போது நாடு முழுவதிலுமிருந்து பெருமளவு நிவாரணம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு வந்திருந்தது. ஜனாதிபதியும் பிரதமரும் கூட போட்டி போட்டுக்கொண்டு வெள்ள நிவாரண உதவிகளைச் செய்திருந்தனர். ஆனால், எவ்வளவு நிவாரணப் பொருட்கள் கிடைத்தன? என்னென்ன பொருட்களும் உதவிகளும் கிடைத்தன? யாரெல்லாம் உதவினார்கள்? அந்த நிவாரணம் எந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டது? எவ்வளவு பகிரப்பட்டது? என்ற விவரமெல்லாம் யாருக்குமே தெரியாது. எல்லாமே மூடு மந்திரம்.

மூடப்பட்டிருக்கும் அந்த ரகசியப் பெட்டியைத் திறப்பதற்கு இரண்டு மூன்று ஊடகவியலாளர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தார்கள். அவர்களால் முடியவில்லை. “தகவல் அறியும் சட்டம் இருக்கிறதல்லவா! அந்தத் தூண்டிலைப் பயன்படுத்தி உண்மை என்ற மீனைப்பிடிக்கலாமே” என்று உங்களுடைய தலைக்குள்ளே அருமையானதொரு ஐடியா தோன்றலாம்.

இந்தத் தகவல் அறியும் சட்டமூலம் என்ற தூண்டிலையே விழுங்கி விடக்கூடிய பெரிய திமிங்கலங்கள்தான் அதிகாரத்திலிருக்கின்றன. ஏதோ அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ஸ தரப்பினர் மட்டும்தான் ஊழல் திமிங்கலங்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தீர்கள் என்றால் உங்களுடைய கண்களையே திருடி விற்று விடுவார்கள். அவர்களையே தின்று ஏப்பம் விடக்கூடிய அளவுக்கு இவர்கள் பலே கில்லாடிகள். அவர்களுடைய ஊழல்கள் உலகறிந்தவை. இவர்களுடைய ஊழல்கள் ஊருக்குள் ரகசியமாகப் புதைக்கப்பட்டவை.

ஆக மொத்தத்தில் எல்லோருக்கும் வெள்ளமும் தேவை. வரட்சியும் தேவை. அவரவர் தேவைகளுக்கு ஏற்ப இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இல்லையென்றால், ஊர்களிலிருக்கும் குளங்களையும் தாழ்வான நிலங்களையும் மண்ணை நிரப்பி மூடிக் கொண்டிருப்பதை எந்த முட்டாள்கூட ஏற்றுக்கொள்வாரா?

பட்டப்பகலிலேயே குளங்கள் மூடப்பட்டு, அங்கே குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன. வயல் நிலங்கள் மண் நிரப்பப்பட்டு அங்கே வணிக வளாகங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. பரந்தனில் இரண்டு போகமும் நெல் விதைத்து அறுவடை செய்யப்பட்ட வயல் நிலத்தில் இப்பொழுது மிகப் பெரிய திருமண மண்டபமும் சுற்றயலில் வாகனத் தரிப்பிடமும் உருவாக்கப்பட்டுள்ளன. இது பரந்தன் ஐந்தாம் வாய்க்கால் என்ற பகுதியில் ஏ.9 பிரதான வீதிக்கு அண்மையாக உள்ளது. இதற்கெல்லாம் அனுமதியைக் கொடுத்தது யார்? அந்த அனுமதி எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? இதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கும் சுட்டிக் காட்டுவதற்கும் ஊரில் எந்த அமைப்பும் கிடையாது. கமக்காரர் அமைப்பு, விவசாயத்திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், பிரதேச சபை, கிராம அபிவிருத்திச் சங்கம், காணிப் பயன்பாட்டுக்குழு, நகர திட்டமிடல் மற்றும் நிர்மாணிப்பாளர்கள், விவசாயிகள் சங்கம், சுற்றுச்சூழலியலாளர்கள், இயற்கை நேசர்கள் என்றிருக்கும் எந்தத் தரப்புக்கும் இந்தத் தவறுகள் கண்ணில் படுவதில்லை.

பெய்யும் மழையை நிலத்தில் தேங்காமல் விரட்டி விடுவதன் பலனே இந்த வெள்ளமும் வரட்சியுமாகும். ஆனால் இதைப்பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. இதற்கான வழிகாட்டல்கள் இல்லை. முன்னர் நிலத்தடி நீர்ச்சேகரிப்புக்கென ஏராளம் ஏற்பாடுகளிருந்தன. வளவுகளில் வேலியோடு வரம்புகளைக் கட்டி வைப்பார்கள். ஊர்களில் குளங்களும் சிறிய குட்டைகளும் தூர்வாரப்பட்டிருக்கும். கேணிகளைச் சுத்தமாக்கி வைத்திருப்பார்கள். இதெல்லாம் எதற்காக என்றால், நிலத்தடி நீர்ச் சேகரிப்பிற்காகவே. நிலத்தடி நீர்ச்சேகரிப்பில்லை என்றால் கோடையில் ஏற்படும் நீர்த்தட்டுப்பாட்டையும் வரட்சியையும் சமாளிக்கவே முடியாது. தண்ணீரின் முக்கியத்துவத்துவம் எவ்வளவு என்பதைத் தெரிந்திருந்தார்கள்.

இதையெல்லாம் இன்று நாம் செய்யாமல் கைவிட்டு விட்டோம். பதிலாக இது கால நிலை மாற்றம். ஓசோனில் ஓட்டை. அதனால்தான் இந்தப் பாதிப்புகள் என்று காரணங்களை அடுக்கிச் சமாதானம் சொல்லி விடுவதிலேயே பலருடைய கவனமும் உள்ளது. ஆனால், கால நிலை மாற்றம், இயற்கை அனர்த்தம் எல்லாவற்றுக்கும் நாமே காரணம் என்பதை மறந்து விடுகிறோம். காடுகளை அழிப்பது, சூழலைச் சிதைப்பது என்று இயற்கைக்கு எதிராகவே செயற்பட்டால் காலநிலை மாறாமல் வேறு என்னதான் செய்யும்? நான் எப்போதுமே வலியுறுத்தி வருவது, இயற்கையைப் பேணிய வாழ்க்கையையே லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால், இப்போது நாம் இயற்கை அழித்து வாழும் வாழ்க்கையை வாழ்கிறோம்.

இது தவறானது. இயற்கையைப் பேணுவது, காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது இன்றைய அவதானத்திற்குரியது. இதைப் படித்து இதற்குள் சமனிலை காண்பதே மனித ஆற்றலாகும். மனித வரலாறே இயற்கையைப் படித்துப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற முன்னேற்பாட்டையும் வழிவகைகளையும் செய்வதையே உணர்த்துகிறது. இந்த வரலாற்றுண்மையை நாம் மட்டும் மறுதலித்துப் புது வழி காண்போம் என்று அடம்பிடிப்பது முட்டாள்தனமின்றி வேறென்ன?

இப்பொழுது கிளிநொச்சியில் 9933 குடும்பங்களைச் சேர்ந்த 34785 பேர்  வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் தகவல். இந்த எண்ணிக்கை நாள்தோறும் கூடிக் கொண்டே போகிறது. தினமும் பல கிணறுகளில் குடிநீர் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. குடிநீருக்கே பல குடும்பங்கள் அல்லாடுகின்றன. மிகப் பெரிய நீர்த் தேக்கமான இரணைமடுவை வைத்திருக்கும் கிளிநொச்சியில்  இப்படியொரு நீர்ப்பஞ்சமா என நீங்கள் வியக்கலாம். ஆம், நீங்கள் கேட்பது நியாயமே. ஏனென்றால், ஒரு மாதத்துக்கு முன்பு 18000 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப்படக்கூடியதாக இருந்தது. அதே மாவட்டத்தில் இப்பொழுது குடிநீருக்கே பஞ்சம். இரணைமடு நீர்த்தேக்கம் மட்டுமல்ல, கனகாம்பிகைக்குளம், பிரமந்தனாறுக்குளம், அக்கராயன்குளம், முறிப்புக்குளம், வன்னேரிக்குளம், கல்மடுக்குளம், கந்தன்குளம், ஐயன்குளம் என இன்னும் பல பாசனக்குளங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உண்டு என்பதும் உண்மையே. ஆனாலும் தண்ணீருக்காகச் சனங்கள் அலைகிறார்கள். வரட்சி ஒரு பிசாசைப்போல ஆட்டிப்படைக்கிறது. இதற்குள் வீட்டுத்திட்டத்திற்கான வீடுகளையும் கட்ட வேண்டியுள்ளது. தண்ணீரில்லாமல் எப்படி குறித்த காலப்பகுதியில் வீட்டைக் கட்ட முடியும்?

ஒவ்வொரு ஆண்டும் வரட்சிக்காக அரசாங்கத்தினால் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் உருவாகும் வரட்சி என்பது ஒரு நிரந்தரப்பிரச்சினையாக உள்ளது. இதற்கு என்ன தீர்வு?

தற்போதுள்ள வரட்சியினால் 3000 க்கு மேற்பட்ட தென்னைகள் அழிந்துள்ளன. இதுவும் மேலும் கூடலாம். இதில் இளைய தென்னைகளே அதிகம். இதற்கு நஸ்ட ஈடு என்ற பேரில் ஒரு சிறிய தொகைப் பணம் பாதிக்கப்பட்டோருக்குக் கிடைக்கக் கூடும். அது தென்னைகளால் தொடர்ந்து கிடைக்கும் வருமானத்துக்கு ஈடாகப்போவதில்லை. ஆக இப்படித்தான் உள்ளது நமது நிலையும் சூழலும்.

இந்த வரட்சியை எதிர்கொள்ளக் கூடிய அணுகுமுறைகள், பயிற்செய்கை முறைகளைப் பற்றி யாரும் சிந்திப்பதாகவும் இல்லை. காவேரிக்கலாமன்ற இயக்குநரும் இயற்கை வேளாணில் அக்கறையுள்ளவருமான யோசுவா அடிகள் சொல்கிறார், “ கடும் வரட்சியினால் விவசாய உற்பத்தி, கால்நடைப் பொருளாதாரம் மிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மீள்குடியேற்றத்துக்குப் பின்னால் மிகச் சிரமப்பட்டுக் கட்டியெழுப்பப்பட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் பல்லாண்டுப்பயிர்களான தென்னை, மா, பலா போன்ற பயிர்கள் முற்றிலும் அழிவை நோக்கிச் செல்கிறது. விவசாய அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தெளிவான கொள்கைகள் நடைமுறையில் இருக்கின்றனவா? தென்னை அபிவிருத்திச் சபை, தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை, தென்னை ஆராய்ச்சி நிலையம், விவசாயத் திணைக்களம், விவசாய ஆராய்ச்சி நிறுவனம், விவசாயப் பல்கலைக்கழகம், விவசாயக் கல்லூரிகள், கமநலசேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு, கால்நடை வளர்ப்பு அபிவிருத்தித்திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், வனத்திணைக்களம், கனிய வளங்கள் திணைக்களம் இப்படி ஏராளம் நிறுவனங்கள் இந்த விடயத்தில் அக்கறையோடு செயற்பட வேண்டும். எல்லா அறிவுசார், அனுபவம்சார், ஆற்றல்சார் வளங்களும் இந்த அனர்த்த நிலைகளில் இருந்து விவசாயத்தையும் வான்பயிர்களையும் பாதுகாப்பது எப்படி என்ற மாற்று முறைகளை (Altenative irrigation & caltivation methods) அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றைக் கண்டறிந்து மக்களுக்குச் சொல்லிக் கொடுக்காமலிருப்பது ஏன்? உதாரணத்திற்கு நீர் வேளாண்மை முறையில் பானை நீர்ப்பாசனம் (Clay pot irrigation system) குறைந்தளவு நீரில் பல்லாண்டுப் பயிர்களைப் பாதுகாக்கும் உத்தியைப் பயன்படுத்தலாம். இதையெல்லாம் மக்களுக்குக் கூறாமலிருப்பது ஏன்? அசோலா உற்பத்திக்கூடாக கால்நடை உணவுப் பிரச்சினைக்கு மிகக்குறைந்த செலவில், மூன்று நாட்களில் தீர்வைக் காணலாமே! இதெல்லாம் ஏன் நடக்கவில்லை?

ஒவ்வொரு திணைக்களங்களிலும் மிகு நிலை மனித வளங்களோடு அமர்ந்திருக்கும் அதிகாரிகள் இந்த நெருக்கடி நிலையிலும் அசையாமலிருப்பது ஏன்? வரட் நிவாரணத்துக்குப் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொடுப்பதுதான் இவர்களுடைய பணியா? அழிவு நிவாரணம் வழங்குவதுதான் இவர்களுடைய தீர்வா, வழிகாட்டலா?

சவால்களைக் கையாளக்கூடியவாறு மக்களை வழிநடத்தி வளங்களைப் பாதுகாக்கும் அறிவும் ஆற்றலும் ஊட்டப்பட வேண்டும். இதை விட்டு விட்டு காலத்திற்குக் காலம் நிவாரணம் வழங்குவதற்குத்தான் இந்த அறிவும் ஆற்றலும் பயன்படுத்தப்படுகிறது என்றால்…! இவர்களது அறிவையும் ஆற்றலையும் குறித்து நாம் கேள்வி எழுப்ப வேண்டும். அதிகளவு சம்பளம் பெறும் இந்த அதிகாரிகளும் துறைசார் நிபுணர்களும் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்ல வேண்டும். மக்களுடைய வரிப்பணத்துக்குப் பயன் கிடைக்க வேண்டும். பதில் கிட்ட வேண்டும். நிவாரணம்தான் இறுதி வழிமுறை என்றால் அதை யாரும் செய்து விட்டுப்போகலாம்” என.

யோசுவா அடிகளின் இந்தக் கோபத்தில் நியாயமுண்டு. இந்த உணர்வு தார்மீக நிலைப்பட்டது. இதைக்குறித்து கிளிநொச்சி சிந்தளைக்குளாத்திலும் உரையாடல்கள் நடந்தன. ஆனால், இதையெல்லாம் பொறுப்பிற் கொள்வது யார்? அதற்கான வழிகள் என்ன என்பதே இன்னும் பதிலில்லாமலிருக்கும் கேள்வியாகும். இதற்கு அரசியல் அதிகாரமுடைய தரப்புகள் அல்லது சிந்தனைக்குழாம் போன்ற சிவில் அமைப்புகள் முன்வந்து செயற்பட வேண்டும்.

இதேவேளை இயற்கையைப் புரிந்து கொண்டு செயற்படாமல், அதற்கு மாறாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தால் எப்படி வளர்ச்சியும் அபிவிருத்தியும் ஏற்படும்? மக்களுக்கான பாதுகாப்பு எப்படிக் கிடைக்கும்?

யுத்தம்தான் இடப்பெயர்வையும் அழிவையும் தரும் என்றில்லை. இயற்கைக்கு எதிரான நமது வாழ்க்கை முறையும் செயற்பாடுகளும் கூட நம்மை இடம்பெய வைக்கும். படைகளாலும் ஆயுததாரிகளாலும்தான் எமக்கு ஆபத்தென்றில்லை. நமது முட்டாள்தனமான செயற்பாடுகளும் நம்மைப் பாதுகாப்பற்ற நிலைக்குள் தள்ளும்.

இப்போதுள்ள இந்தப் பாதகமான சூழலானது மாற்றத்துக்குள்ளாக்கப்படவில்லை என்றால் எதிர்காலத்தில் கிளிநொச்சியிலிருந்து மாபெரும் இடப்பெயர்வு நடந்தே தீரும். கடந்த நூற்றாண்டில் யாழ்ப்பாணத்திலிருந்தும் தென்பகுதியிலிருந்தும் கிளிநொச்சியைத் தேடி லட்சக்கணக்கானோர் குடியேறுவதற்காக வந்தனர். இப்பொழுது கிளிநொச்சியில் தொடர்ந்தும் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு காலம் வடக்கின் நெற்களஞ்சியம் என்றும் பச்சை மாவட்டம் என்றும் வர்ணிக்கப்பட்ட கிளிநொச்சி, இப்பொழுது வரட்சியான மாவட்டம் எனவும் வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டம் என்றும் பேரெடுத்துள்ளது.

இதற்கெல்லாம் காரணம் என்ன? காரணர்கள் யார்?

Share:

Author: theneeweb