தமிழ்-முஸ்லிம் இனங்களின் அரசியற் பயணமும் ஜனாதிபதித் தேர்தலும் கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா


இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்றுவரை தமிழர் முஸ்லிம் ஆகிய இரு சிறுபான்மை இனங்களும் இரு வேறு பாதைகளில் தமது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். ஒரு கோணத்திலிருந்து நோக்கும்போது பெரும்பான்மை இனத்தவரின் பலத்தில் ஆட்சிசெய்த அரசாங்கங்களே சிறுபான்மை இனங்களின் இவ்வரசியல் பாதைகளுக்கு வழிவகுத்ததெனவும் கூறலாம். ஆரம்பத்திலிருந்தே நாமெல்லாரும் இலங்கையர்@ நமக்குள்ளே மத, மொழி, கலாசார வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளென்ற ஒற்றை அடையாளத்தின்கீழ் நமக்கெல்லாம் சமமான உரிமைகளும் கடமைகளும் உண்டு@ அவற்றின் அடிப்படையில் தாயகத்தின் பொருளாத்தையும் மக்களின் நலன்களையும் விருத்தி செய்வோம் என்ற உணர்வுடன் அரசுகள் இயங்கியிருந்தால் சிறுபான்மை இனங்களிரண்டும் தனித்தனியே தமக்கென வேறு அரசியற் பாதைகளை அமைக்கவேண்டிய அவசியமே எழுந்திருக்காது. தமிழரின் உரிமைகள், முஸ்லிம்களின் உரிமைகள் என்றில்லாமல் இலங்கைப் பிரஜைகளின் உரிமைகளென்ற ஒரே கோஷத்துடன் மக்கள் இணைந்திருப்பர். அன்றைய அரசுகள் இழைத்த தவறு இன்று இலங்கையை ஓர் இன, மத வெறிகொண்ட சமுதாயமாக மாற்றியுள்ளது.
இனவாத அடிப்படையில் அரசாங்கங்கள் இயங்கியதால் தமிழர்கள் தம்மினத்தின் நலனைக் காக்க நினைத்துத் தமக்கென அரசியற் கட்சிகளை அமைத்துப் போராடத் தொடங்கினர். இந்தக் கட்சிகளுக்குள் முஸ்லிம்கள் சிலரையும் இணைத்தபோதும் அது ஓர் இதயபூர்வமான இணைப்பாக என்றுமே அமையவில்லை. மாறாக, ஒரு மாற்றாந்தாயின் உறவாகவே என்றும் இருந்தது. அதற்குரிய காரணங்களை இங்கே விபரிக்க விரும்பவில்லை. எனினும் இந்தக் கசப்பான உண்மையை தமிழரின் தலைமைத்துவம் ஜீரணித்தேயாக வேண்டும்.
தமிழரின் தனித்துவமான அரசியல் போராட்டம் தமிழினத்துக்குப் பல பேரழிவுகளையும் பெரும்பான்மை இனத்தவரின் சீற்றத்தையும் பெற்றுக் கொடுத்தனவே ஒழிய குறிப்பிடத்தக்க அளவு நன்மைகளை ஈட்டிக் கொடுக்கவில்லை. சாத்வீகப் போராட்டம் தொடங்கி ஆயுதப் போராட்டம் வரையிலான தமிழரின் அரசியல் பயணத்தின் சோகக் கதை இது.
முஸ்லிம்களின் அரசியல் பயணமோ சந்தர்ப சகவாசமானதொன்று. அதன் பாதைகள் காலத்துக்குக் காலம் வேறுபட்டாலும் அவற்றின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. நீண்ட காலமாக அவர்களுக்கெனத் தனிக்கட்சிகள் இல்லாதிருந்த வேளையிலும் அண்மைக்காலத்தில் அவ்வாறான கட்சிகள் அமைந்துள்ளபோதிலும் அவர்களின் நோக்கமெல்லாம் பெரும்பான்மை இனத்துக்கும் தமிழருக்குமிடையே எழுந்த பிரிவினையை எவ்வாறு தம்மினத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பதே. வர்த்தகர்களாகக் குடியேறிய ஓர் இனம் அரசியலையும் ஒரு வர்த்தகமாகவே கருதியதில் வியப்பில்லையல்லவா. சந்தர்ப்பம் அவர்களை பெரும்பான்மை இனத்துடனேயே இணையத் தூண்டிற்று. பெரும்பான்மை இனத்தின் தலைமைத்துவமும் பல்வேறு காரணங்களுக்காக அவர்களை அரவணைப்பதற்கு அப்போது தயங்கவில்லை. இந்தச் சந்தர்ப்ப சகவாசத்தினால் முஸ்லிம் சமூகம் அடைந்த நன்மைகளோ பல. அவற்றையும் இங்கே பட்டியல்போட்டு விபரிக்கத் தேவையில்லை. ஆனாலும் 2009க்குப் பின்னர் வளர்ந்த, ஏன், வளர்க்கப்பட்ட பௌத்த பேராதிக்க உணர்வு முஸ்லிம்களின் அரசியல் சகவாசம் பெரும்பான்மை இனத்துக்கு இனிமேல் அவசியமாகாதென்பதை குறிப்பாக பெரும்பான்மை இனத்தவர்களுக்கு உணர்த்திற்று. இதன் விழைவாக தமிழர்களைப்போன்று முஸ்லிம்களும் பல்வேறு இழப்புகளுக்கும் அவஸ்தைகளுக்கும் ஆளாகியுள்ளனர். 2014இலிருந்து இன்றுவரை இடம்பெற்று வரும் முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் இதைத்தான் சுட்டிக் காட்டுகின்றன. பௌத்த பேராதிக்கவாதிகளின் விஷமப் பிரச்சாரத்துக்குள் சிக்கித் தடுமாறுகின்றனர் முஸ்லிம்கள். அவர்களின் அரசியல் தலைமைத்துவமோ சக்தியற்ற ஒரு கோமாளிக் கூட்டமாக நடிக்கிறது.
இதிலொரு வேடிக்கை என்னவெனில் தமிழரும் முஸ்லிம்களும் அன்று தாமாகவே பிரிந்து நின்று அதன் அரசியல் பலாபலன்களை முறையே அனுபவித்தனர். இன்றோ பெரும்பான்மை இனமே இவர்களிருவரையும் என்றுமே சேராமலிருப்பதற்கான வழிவகைகளைக் கையாண்டு கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் செறிந்துவாழும் கல்முனையில் அண்மையில் பௌத்த துறவிகளுடன் சில தமிழர்களும் சேர்ந்து நடத்திய உண்ணாவிரதப் போராட்ட நாடகம் இதற்கோர் எடுத்துக்காட்டு.
எனினும், தமிழினத்தின் நலனுக்காகவும், அவ்வினத்தையும் மற்றைய சிறுபான்மை இனங்களையும் உள்ளடக்கி நாட்டின் மொத்த நலனுக்காகவும், புதிய ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் பாடுபடவென பெரும்பான்மை இனத்துக்குள்ளிருந்தே ஓரிரு முற்போக்குச் சக்திகள் 1950களிலும் 1960களிலும் தலையெடுத்து தமிழர்களையும் முஸ்லிம்களையும் அவர்களுடன் இணையுமாறு நேசக்கரம் நீட்டிய ஒரு வரலாறும் உண்டு. உதாரணமாக, அன்றெழுந்த மொழிப் போராட்டத்தில் “தமிழுக்கும் சம அந்தஸ்து வேண்டும்@ ஒரு மொழியெனின் இரு நாடுகள்@ இரு மொழிகளெனின் ஒரே நாடு” என்று பாராளுமன்றத்தில் குரலெழுப்பியவர்கள் பெருமான்மை இனத்தின் முற்போக்குவாதிகளே. ஆனால், அவர்களின் சகவாசமே நமக்கு வேண்டாம் என்று இவ்விரு இனங்களும் அவர்களை உதறித்தள்ளி விட்டன. இனத்தின் அடிப்படையில் தமிழர்களும் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களும் அம்முற்போக்குவாதிகளை ஒதுக்கினர். அதற்காக வரலாறு இரு இனங்களையும் இன்று தண்டிக்கின்றதை இன்றையத் தலைமுறை உணருமா?
இந்த நிலையிலேதான் ஜனாதிபதித் தேர்தலொன்று விரைவில் இவ்விரு இனங்களையும் எதிர்கொள்ளப் போகிறது. இத்தேர்தல் பெரும்பாலும் ஒரு முக்கோணப் போட்டியாக அமையக்கூடிய வாய்ப்புண்டு. ஒரு கோடியில் ஆளும் அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக ஒருவரும் மறு கோடியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பாக ராஜபக்ஜஸ குடும்பத்தினரான கோத்தாபயவும் அவர்களிருவருக்குமிடையில் மக்கள் வடுதலை முன்னணி சார்பாக அனுர குமார திஸநாயகாவும் களத்திற் குதிப்பர். தற்போதைய ஜனாதிபதி சிறிசேனாவும் போட்டியிட அயராது கனவு காண்கின்றபோதிலும், அதிஷ்டக்காற்று அவர் திசையில் வீசாவிட்டால், அவரது கனவு கனவாகாவே முடியுமென்று துணிந்து கூறலாம்.
இந்தப் போட்டியில் தமிழரும் முஸ்லிம்களும் என்ன செய்ய வேண்டுமென்பதே ஆராயப்பட வேண்டிய விடயம். 2005இலிருந்து 2015வரை ராஜபக்ஸ ஆட்சியில் தமிழர் அடைந்த இழப்புகள் அனந்தம். 2009இல் புலிகளைத் தோற்கடித்த போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ அவர்கள், தமிழர்களின் இழப்புகளை ஈடுசெய்து, அச்சமூகத்தின் மனவேக்காடுகளை அகற்றி, அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு வழிசமைத்துக் கொடுத்து, ஒரு பெரும் ராஜதந்திரியாகவே மாறியிருக்கலாம். ஆனால் பௌத்த பேரினவாதத்தின் அழுத்தங்களுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியாததால் அவர் ஒரு சாதாரண அரசியல்வாதியாகவே தமது பதவிக் காலத்தைக் கடத்தி, அவரது ஆட்சியை ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியாகவே மாற்றினார். இதனால் ஏமாற்றமடைந்த தமிழ்த் தலைமைத்துவம் 2015 ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேனாவுக்கும், பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க வுக்கும் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்க அவர்களும் அவ்வாறே செய்தனர். தமிழ்த் தலைமைத்துவம் அரசாங்கத்துக்குத் தன் பூரண ஆதரவை வழங்கியதால் ராஜபக்ஸ எதிர்க்கட்சியினர் அவ்வரசாங்கத்தை தமிழரின் அரசாங்கமென்றே பெரும்பான்மை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தனர், செய்கின்றனர். இருந்தும் நடந்ததென்ன? தமிழருக்கு இவ்வரசாங்கத்தால் நன்மையேதும் ஏற்பட்டதா? பேரினவாதச் சக்திகள் புதிய அரசாங்கத்தiயும் ஜனாதிபதியையும் ராஜபக்ஸ போன பாதைக்கே தள்ளிவிட்டுள்ளதை ஏன் இத்தலைவர்கள் இன்னும் உணராதிருக்கின்றனர்? தமிழ்த் தலைமைத்தவம் இக்கட்சிகளுடன் இன்னும் பேரம் பேசவேண்டுமா? இதே கேள்விதான் முஸ்லிம்களையும் எதிர்நோக்கியுள்ளது.
இன்றைய முஸ்லிம் தலைவர்களிற் பெரும்பாலானோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற இரு இனரீதியான கட்சிகளிலிருந்து உதயமானவர்கள். முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்போம், அவற்றிற்காகப் போராடுவோம் என்று மேடைதோறும் ‘அல்லாஹ_ அக்பர்’ என்ற கோஷத்துடன் முழங்கி, முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர்ந்து, ஆட்சியாளர்களுடன் பேரம்பேசி, அவர்கள் இற்றைவரை வென்றதெல்லாம் தத்தமக்கு வேண்டிய பதவிகளும் சலுகைகளுமே. இறைவனின் பெயரையும் இறைதூதரின் பெயரையும் அரசியலுக்குள் கொண்டுவந்து முஸ்லிம் சமூகத்தின் முதுகிலேறிப் பதவியும் செல்வமும் சேகரித்த இச்செல்வச் சீமான்கள் முஸ்லிம் சமூகத்துக்காகப் போராடி வென்றெடுத்த நன்மைகளைப் பட்டியலிட்டுக் கூறுவார்களா? இவர்களின் சுயநயப்போக்கினாலும், முஸ்லிம் சமுதாயத்தைப்பற்றிய தூரநோக்கில்லாததாலும், வைதீக மதவாதிகளின் பிழையான வழிகாட்டல்களுக்கு ஆமாப்போட்டதாலும் இன்று பௌத்த பேரினவாதிகளின் பழிவாங்கலுக்கு முஸ்லிம் சமூகத்தைப் பலியாக்கியுள்ளனர். இவர்களின் தந்திரோபாயங்களுக்குள் முஸ்லிம் வாக்காளர்கள் இனியும் சிக்கினால் முஸ்லிம்களின் வருங்காலம் இலங்கையில் ஒரு கேள்விக் குறியாக மாறுவதுண்மை. முஸ்லிம் வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய சந்தர்ப்பம் நெருங்கி விட்டது.
1950களிலும் 1960களிலும் சிறுபான்மை இனங்கள் இரண்டும் முற்போக்கு அரசியல்வாதிகளையும் அவர்களின் கட்சிகளையும் உதறித்தளியமையையும் அதனால் இன்று பிற்போக்குச் சக்திகளிடையே சிக்கிச் சீரழிவதையும் ஏற்கனவே குறிப்பிட்டோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் இவ்வினங்களை எதிர்நோக்கப் போகின்றது. மக்கள் விடுதலை முன்னணி என்ற மக்கள் இயக்கம் 1960களின் பிற்பகுதியில் உதயமாகி, கிளாச்சிமூலம் இருமுறை ஆட்சியைக் கைப்பற்ற முயன்று, தோல்வியடைந்து, பல நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களையும் இராணுவத்தின் துப்பாக்கி ரவைகளுக்குப் பலியாக்கி, அந்தக் குருதிபடிந்த வரலாற்றிலிருந்து பல பாடங்களைக் கற்று இன்று முதிர்ச்சி பெற்ற ஒரு முற்போக்குச் சக்தியாக புதியதொரு தலைமைத்துவத்துடன் ஜனநாயக ஆட்சிமுறையைத் தழுவியுள்ளது. இனபேதங்களுக்கு அப்பால் நின்று இலங்கையர் என்ற ஒரே குடையின்கீழ் மக்கள் திரள வேண்டுமென்றும், யாவரும் சம உரிமையுடனும், சுதந்திரமாகவும் வாழவேண்டுமென்றும், நாட்டின் பொருளாதாரத்தை மக்களின் நலனைப் பிரதான குறிக்கோளாக வைத்து அதற்கேற்றவாறு சந்தைச் சக்திகளையும் வெளிநாட்டு முதலீடுகளையும் வழிப்படுத்தி மாற்றியமைக்க வேண்டுமென்றும் இம்முன்னணி வேண்டுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஐக்கிய இலங்கையொன்றை உருவாக்கி, தேசப்பற்றுடன் எல்லா இன மக்களும் செயற்பட்டால் இலங்கை செழிப்புடன் வளருமென இம்முன்னணி நம்பிக்கை கொண்டுள்ளது. அதில் பெருமளவு உண்மையும் உண்டு.
மக்கள் ஐக்கிய முன்னணி ஒரு பின்-நவீனத்துவ இடதுசாரிக்கட்சி. அதை அன்றைய பொதுவுடமைக் கட்சியின் மறு உருவமாகவோ புரட்சிவாதக் கட்சியாகவோ எடைபோடுவது தவறு. பொருளாதார ரீதியில் ஏற்றத் தாழ்வில்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி, நாட்டை அன்னியரின் எடுபிடிகளிலிருந்து விடுதலையாக்கி, அதே சமயம் ஜனநாயக சுதந்திரங்களைக் கட்டிக்காக்க  முனைகின்ற ஒரு பின்-நவீனத்துவ இடதுசாரிக்கட்சி  இம்முன்னணி. இடதுசாரி என்றாலே அவர்கள் நாத்திகவாதிகள் என்ற மரபுவழியான இஸ்லாமிய மதவாதிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சாதிப்பாகுபாட்டில் ஊறித்திழைத்த இந்து, கிறித்தவத் தமிழ் தலைமைத்துவங்களும் இக்கட்சியைப்பற்றிப் பொய்ப்பிரசாரங்களை அவழ்த்துவிடுவரென்பது உறுதி. இதனாலேதான், இளம் தலைமுறை முஸ்லிம் தமிழ் வாக்காளர்கள் இக்கட்சியைப்பற்றிச் சுயமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் இக்கட்சியின் கொள்கைகளே சிறுபான்மை இனங்கள் இரண்டும் 2009 தொடக்கம் இன்றுவரை அனுபவித்த, அனுபவிக்கும், இருள்படிந்த வாழ்வுக்கு ஒரு விடிவெள்ளியாகத் திகழ்கின்றன. எனவேதான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ம.வி.மு அபேட்சகரை ஆதரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் சிறுபான்மை வாக்காளர்களுக்கு உண்டு. அவ்வாறான ஒரு கட்சியின் தலைமையிற்தான் இலங்கைக்கே விடிவுகாலம் உண்டு.         
Share:

Author: theneeweb