அன்று மஹிந்த, கோட்டபயவை கடுமையாக விமர்சித்தவர் – இன்று போற்றி பேசுகின்றார்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் மாத்திரமே நாட்டில் தூய்மையான நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தையும், உருவாக்க கூடியவர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை தெளிவூட்டும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டு மக்களில் சிலர் அரசியல் கட்சிகளை மதத்தை போன்று அரவணைந்துக் கொண்டுள்ளமையே தற்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய டில்வின் சில்வா, ´கட்சிகளை மாற்றுவதில் பல பிரச்சினைகள் உள்ளன ஆனால் மூத்த தலைவர்கள் கட்சிகளை மாற்றுகின்றனர். அப்பாவிடம் இருந்து மகனிடம் கட்சி செல்கின்றது. அதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் கிராமங்களில் உள்ளவர்கள் அதற்கு எதிரானவர்கள்.

உதாரணமாக எஸ்.பீ. திசாநாயக்கவின் கட்சி என்ன என்று யாராலும் கூற முடியுமா? எந்த பக்கம் இருந்துக் கொண்டு அவர் அரசாங்கம் ஒன்றை உருவாக்க முடியும் என அவர் கூறுகின்றார்? அவர் எப்போதும் அரசாங்கத்தில் தான் இருப்பார். 2015 தேர்தலில் அவர் ஆதரவளித்த கட்சி தோற்றவுடன் மறுபக்கம் பாய்ந்து அரசாங்கத்துடன் இணைந்துக் கொணண்டார்.

அரசாங்கத்துடன் இணைந்த அவர் மஹிந்த மற்றும் கோட்டபய போன்றவர்களை கடுமையாக விமர்சித்தார். அதே வாயால் இன்று அவர்கள் இருவரையும் போற்றி பேசுகின்றார். ஆகவே, அரசியலில் அவ்வாறானர்களும் உள்ளனர்.

அவர்கள் அவ்வாறு கட்சி மாறும் போது சிலர் கைதட்டி ஆர்பரிக்கின்றனர். அதுவே, பேரழிவாகும். வழக்கிற்காக நீதிமன்றம் சென்று திரும்பும் தலைவர்களை பார்த்து கைதட்டுவோரும் நம் நாட்டில் உள்ளனர். இந்த நிலைமையை நாங்கள் மாற்ற வேண்டும். எங்களுக்கு ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் தேவை.´ என்றார்.

Share:

Author: theneeweb