கையறு நிலையில் தமிழ்ச் சமூகம் – கருணாகரன்

“கையறு நிலையில் தமிழ்ச்சமூகம்” என்ற எளிய தலைப்பை மிக வெளிப்படையாகவே  இந்தக் கட்டுரை கொண்டிருக்கிறது என்பது மிகத் துயரமான ஒரு நிலையே. ஆனாலும் வேறு வழியில்லை, அப்படித்தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சமூகம் மீட்சியற்ற நிலையில், இருண்ட துயர்க்குழியிலேயே கிடந்துழன்று கொண்டிருந்தால் அதை எப்படி மதிப்பிடுவது?எவ்வாறு அதைக்குறிப்பிடுவது? எழுபத்தைந்து ஆண்டுகாலம் என்பது சாதாரணமான ஒன்றல்ல. சுமார் மூன்று தலைமுறைக்கும் அப்பாலான காலம். ஒரு நூற்றாண்டின் முக்காற் பகுதி. இந்த எழுபத்தைந்து ஆண்டு காலத்திலும் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அரசியலில், பொருளாதாரத்தில், பண்பாட்டில்,சிந்தனை முறையில், பிரச்சினைகளை அணுகும் முறைகளில், தீர்வு காணும் வழிகளில் என.

ஆனால் எதுவும் தமிழ்ச்சமூகத்தைத் தீண்டவேயில்லை. அது இன்னும் தன்னுடைய பழைய, பழகிய வழிகளிலேயே பயணிக்கிறது. உண்ணாவிரதம், ஊர்வலம், கதவடைப்பு, ஹர்த்தால், பணிப்புறக்கணிப்பு, நிராகரிப்பு என்று தன்னை வருத்தும் முறைகளில். இதெல்லாம் காந்தி முன்னெடுத்த அகிம்சை வழிப்போராட்ட வழிமுறைகள். ஆனால், காந்தி ஒரு போதும் வன்முறையை முன்மொழியவில்லை.வன்முறையை நம்பவுமில்லை. அவர் இறுதி வரையிலும் அகிம்சை வழியிலேயே
நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் அதையே வழிமுறையாகவும் வெற்றிக்கான நம்பிக்கையாகவும் கொண்டிருந்தார். அவருடைய போராட்ட ஆயுதமே அகிம்சைதான். எதிராளியைக் கலங்க வைக்குமளவுக்கான சகிப்பு. அந்தச் சகிப்பின் மூலம்தன்னுடைய வலிமையை அகிம்சையில் காட்டினார். இது ஒரு கன்னத்தில் அடித்தால்மறுகன்னத்தைக் காட்டு என்ற கிறிஸ்துவின் நிலைப்பாட்டுக்கு நிகரானது. எதையும் நாம் போராட்டத்திற்கான வழிமுறையாக, ஆயுதமாகக் கொள்ளலாம். அதில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை நமக்கு உறுதியைத் தரும். நம்பிக்கை இல்லையென்றால் தளர்வே ஏற்படும். பதற்றமும் குழப்பமும்
உண்டாகும்.

தமிழ் அரசியல் ஒரு போதுமே அகிம்சையைக் கொள்ளவில்லை. அது உண்மையாகவே அகிம்சையைக் கொண்டிருந்தால், இறுதிவரையில் அந்த வழியிலேயே பயணித்திருக்கும். அகிம்சைக்கு முடிவில்லை.  ஈழத்தமிழ்ச்சமூகம் ஒரு போதுமே அகிம்சையைக் கொண்டிருக்கவில்லை. அது எப்போதும் பழிக்குப் பழி என்ற வன்முறை அல்லது எதிர்ப்புணர்வு அரசியலையே முன்னெடுத்தது. அதன் விளைவுகள் சாதாரணமானவையல்ல.

சுதந்திரத்துக்குப் பிந்திய (1948) அரசியல் போராட்ட வரலாற்றில் எவ்வளவோ
அனுபவங்கள் தமிழ்ச் சமூத்துக்குக் கிடைத்துள்ளன. முப்பது ண்டுகாலத்துக்கு மேலாக உலகெங்கும் பரந்து பல லட்சம் தமிழர்கள்
வாழ்கின்றனர். அந்த அனுபவங்களும் அவதானங்களும் மிகப்பெரிய கொடை. இதையெல்லாம் தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும். இந்த அனுபவங்களையும் அவதானங்களையும் பாடங்களாகக் கொள்ளவும்அறிவாக மாற்றவும் விரும்பாமல் இருட்குழிக்குள்ளேயே கிடக்கிறது அது.

இந்தக்கிணற்றுத் தவளை உலகம் என்பது தன்னளவிலான மயக்க நிலையே. இந்த மயக்கநிலையிலிருந்து கொண்டே அதனுடைய அரசியல் மதிப்பீடுகளும் அரசியல்கற்பனைகளும் நிகழ்கின்றன. இதனால்தான் அது கால மாற்றம், சூழல் மாற்றம்,உலக வளர்ச்சி போன்ற எதையும் கவனத்திற் கொள்ளாமல், இன்னும் துருவநிலைப்பட்ட (பகை) அரசியலை முன்னெடுக்க விரும்புகிறது.

பகை வளர்ப்பு அரசியலுக்கு எதிரான போக்கை உலகம் வலியுறுத்திக்
கொண்டிருக்கும்போது தமிழ்ச்சமூகம் அதற்கு எதிராகச் சிந்திப்பது என்பது
ஒரு போதும் உலக அங்கீகாரத்தைப் பெற்றுத் தராது. போருக்குப் பிந்திய
அரசியலை நல்லிணக்கம், பகை மறப்பு என்ற அடிப்படையிலேயே முன்னெடுக்கவேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தியது. அதற்கான ஏற்பாடுகளையும்ஆதரவையும் அது வழங்கியுமிருந்தது. இன்னும் அந்தத் தளத்தில் இலங்கைஅரசியலை முன்னெடுப்பதற்கே சர்வதேச சமூகத்தின் பங்களிப்புகள் உள்ளன.

ஆனால், இதற்கு எதிராகவே தமிழ்ச்சமூகத்தின் போக்கும் சிந்தனையும் உள்ளன.அது வெற்றியைத் தராத, காலங்கடந்த, பழைய மனோபாவங்களின் திரட்சியைஉடையதாகவே உள்ளது. இதனால்தான் இன்னும் பன்மைத்துவத்தை ஏற்காத, பல்வேறுசிந்தனைப்போக்குகளை உள்ளடக்காத ஒரு துருவ அரசியலையும் ஒற்றைச் சிந்தனைமுறையையும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. மாற்று அரசியலுக்கும் மாற்றுஉபாயங்களுக்கும் எதிராகச் செயற்படுகிறது.

இப்படி உலகப் போக்குக்கு எதிராகச் சிந்தித்துக் கொண்டு, உலக விருப்புக்கு
மாறாகச் செயற்பட்டுக்கொண்டு எவ்வாறு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற
முடியும்? ஒரு பக்கத்தில் உலகத்துக்கு எதிராகச் சிந்தித்துச்
செயற்பட்டுக்கொண்டு மறு பக்கத்தில் உலக அங்கீகாரத்தைக் கோருவதும்
எதிர்பார்ப்பதும் முரணன்றி வேறென்ன?

இந்த முரண்பாடே தமிழ் அரசியலின் முதலாவது தோல்வியாகும். இதற்கு அது தன்னைமுழுமையான பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய போராட்டங்கள் பெற்றுத் தந்ததென்ன? மிகஉச்சமான தியாகங்களால் எதைப் பெற முடிந்தது? மிகப் பெரிய இழப்புகளுக்கான பெறுமதி என்ன? இவ்வளவையும் செய்தும் எத்தகைய முன்னேற்றங்களையும் அரசியல்
அடைவுகளையும் இன்னும் பெறமுடியாதிருப்பது ஏன்? என்ற கேள்விகளுக்கான பதிலைக் காண வேண்டும். இதிலிருந்தே எதிர்கால அரசியலுக்கான மதிப்பீட்டைச்செய்ய வேண்டும். ஆனால் அதற்குத் தமிழ்ச்சமூகம் தயாராக இல்லை. அதனுடையஉளநிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

இதற்குப் பிரதான காரணம், தமிழ்ச்சமூகத்தின் உளவியல் சாதியக் கூறுகளால்கட்டமைக்கப்பட்டிருப்பதே. இந்தச் சாதிய உளவியலின் திரண்ட வடிவமேதமிழ்த்தேசியச் சிந்தனையிலும் பிரதி பலிக்கிறது. மற்றமைகளை
ஏற்றுக்கொள்ளாத, ஜனநாயக உள்ளடக்கத்தை விரும்பாத இயல்பு. இதன் மறுபக்கம் என்பது எப்போதும் தாழ்வுச் சிக்கலிலும் உயர்வெழுச்சியும் மாறி மாறிச்சஞ்சலப்படுவதாகும். எப்போதும் தன்னையும் பிறரையும் பிறவையும்
சந்தேகிப்பது. இது ஒரு தீராத நோய்க்கூறு. இந்த நோய் தமிழ்ச் சமூகத்தைப்
பீடித்துள்ள தீராப்பிணியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் அதனைத் தொடர்ந்தும் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையைக் கண்டறிய வேண்டியது தமிழ்ச்சமூக ஆய்வாளர்கள்,
புத்திஜீவிகள், முற்போக்காளரின் கடமை. அவர்களில் பலரும் இதனைக்
கண்டறிந்துமுள்ளனர். ஜனநாயக சக்திகள் இதை உணர்ந்து இந்தக்
குறைபாட்டரசியற் சிந்தனை முறைக்கு எதிராகப் போராடியுமுள்ளனர். ஆனால்,அதையெல்லாம் ஏற்றுக்கொள்வதற்கு தமிழ்ச் சமூகத்தின் உளவியல் இடம்கொடுக்கவில்லை. அது எப்போதும் தன்னைக் கிணற்றுத் தவளை நிலையில் வைத்துக்கொண்டு உலகப்போக்கை நிராகரிக்கிறது. இதனால் மாற்று அரசியலை, புதியஅரசியலை, ஜனநாயக அடிப்படைகளை வலியுறுத்துவோர் எதிராளிகளாகச்சித்தரிக்கப்படுகிறார்கள். சமயங்களில் உளவாளிகள், துரோகிகளாகவும்கட்டமைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.

இது பழங்குடிச் சமூக மனோநிலைக்கு ஒப்பானது. எப்போதும் எதிர்த்தரப்பைக் கண்டு சந்தேகிக்கின்ற, அஞ்சுகின்ற மனோநிலை. இதனால்தான் அது ஒன்றுபட்டு நின்று எதிர்த்தரப்பை எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறது. தேர்தல்களை எதிர்கொள்வது தொடக்கம் அவ்வப்பொழுது மேற்கொள்ளப்படும் உணர்வெழுச்சிப் போராட்டங்களுக்கான அறைகூவல்கள் வரையில் இதனை நாம் அவதானிக்கலாம்.

ஒன்றுபடவில்லை என்றால் அதற்குப் பதற்றம் ஏற்படுகிறது. ஒன்றுபடுதல் என்பது மேம்போக்கான பார்வையில் சரிபோலவும் அவசியம் போலவும் படலாம். ஆனால், அதில் எப்போதும் ஒற்றைப் பார்வையும் ஒற்றை வழிமுறையுமே இருக்கும். அந்த ஒற்றை வழியைத்தான் உலகம் ஏற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கும். ஆதரிக்கும் என்றில்லையே. ஆகவே நடைமுறையில் பல வழிமுறைகள், பல நடைமுறைகள் இருக்க
வேண்டும். அப்பொழுதுதான் இன்னொரு வழியினால் விடயங்களைக் கையாளக் கூடியதாகஇருக்கும். இன்னொரு வழியினால் தொடர்பாடலை மேற்கொள்ள வாய்க்கும். ஒரேகூடையில் எல்லா முட்டைகளையும் கொண்டு போகக்கூடாது என்ற அனுபவ மொழிஉணர்த்தும் உண்மையும் இதுவே.

இன்றைய உலகம் பன்முகப்பட்டது. அது  பல்நிலை, பல்திசை, பல்கோணம், பல்கோணம் என்ற அடிப்படையில் எதையும் எதிர்கொள்ளவும் எதையும் செய்ய விளைகின்ற ஒன்று. இது மிக எளிய உண்மை. ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையிலேயே எதவும் கட்டமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அது கட்சிகளாயினும்
சரி. நிறுவனங்களாயினும் சரி. அரசியல் வழிமுறைகளாயினும் சரி. குடும்ப
உறவாயினும் சரி. எல்லாவற்றிலும் பன்மைத்துவத்துக்குரிய இடமளிக்கப்பட
வேண்டும் என்பதே விதி.

ஆனால் தமிழ்ச்சமூகத்தில் படித்தவர்களும் சிந்தனையாளர்களாகக்
கருதப்படுவோரும் கூட இந்த இயல்பு விதிக்கு மாறாகவே சிந்திக்கிறார்கள்.
அவர்கள் தமது குடும்பம், நிர்வாகம், நிறுவனங்கள், கட்சி போன்றவற்றில்
மட்டுமல்ல அரசியலிலும் பன்மைத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிராகவே சிந்திக்கிறார்கள். அதிலும் அரசியல் என்று வரும் முற்று முழுதாக அறிவை நிராகரித்து விட்டு, ஏகம் என்ற ஒற்றைப்பரிமாண உணர்வு மயப்பட்டு விடுகிறார்கள். அந்த உணர்வுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறார்கள். பேசுவது அறிவரசியலின் தேவையைப்பற்றியதாக இருக்கும். ஆனால், நடைமுறைப்படுத்த விரும்புவது உணர்ச்சிவயப்பட்ட அரசியலை. அதாவது யதார்த்தத்துக்குப்
புறம்பான அரசியலை.

இவ்வாறான பிறழ்வுளவியல் சிக்கல்களிலிருந்து வெளிவந்தால்தான்
தமிழ்ச்சமூகத்தின் அரசியலில் மாற்றங்கள் நிகழும். பிரச்சினைகள் தீரும்.
கண்ணீரும் கம்பலையுமான வாழ்க்கை மறையும். முன்னேற்றம் ஏற்படும்.
இல்லையெனில் தொடர்ந்தும் கிறீஸ் கம்பத்தில் ஏறுவதைப்போலவே வரலாறு நகரும்.

இப்படிச் சொல்லும்போது சிங்களத் தரப்பின் அரசியல் மட்டும் உலக
விருப்புக்கும் உலக நோக்குக்கும் ஏற்ப நடக்கிறதா என்று யாரும் கேட்கலாம்.
சிங்களச் சமூகத்தின் அணுகுமுறையும் அரசியலும் பகை வளர்ப்பிலேயே உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அது உலக வர்க்க அரசியல் நலன்களோடு பொருந்திப்போகக் கூடிய அடிப்படைகளைச் சூட்சுமமாகக் கொண்டுள்ளது. சனத்தொகை – சந்தை – மற்றும் ஆட்சி, வளங்கள் போன்ற பல காரணங்கள் அதற்கு அனுகூலமாக உள்ளன. இருந்தும் அதற்கும் நெருக்குவாரங்கள் உண்டு. அதை
அவர்கள் எதிர்கொண்டவாறே உள்ளனர். ஆனால், அவர்களிடத்தில் காணப்படுகின்ற பன்மைத்துவமும் ஜனநாயக அடிப்படைகளும் தமிழ்ச்சமூகத்தில் உள்ளதையும் விட மேலானவையாக இருப்பதால் அதற்கான நெருக்கடித் தீவிரம் குறைவு.

இதையெல்லாம் விரிவான தளத்தில் விவாதிக்க வேண்டியது அவசியமாகும். அந்த விவாதத்திற்கு – போஸ்மோட்டத்திற்கு – தமிழ்ச்சமூகம் தயாராகுமா?

Share:

Author: theneeweb