சிங்கள – முஸ்லிம் மக்களையும் பிளவுபடுத்தும் சூழ்ச்சி முன்னெடுப்பு

சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தெரண தொலைக்காட்சியில் நேற்று (16) இரவு ஒளிபரப்பான 360 நேரடி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஒரு நாட்டில் இராணுவமும், இராணுவ வாகனங்களும் அதிகளவில் சஞ்சரித்தால் அது நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவதை எடுத்து காட்டுவதாகவும் கூறினார்.

தற்போது சிங்கள மற்றும் முஸ்லிம் கிராமங்களை பிளவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உள்ள பாதுகாப்பற்ற நிலைமையினூடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கான சந்தர்பம் இல்லை எனவும் அவர் கூறினார்.

நாட்டில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு பாதுகாப்பு பிரச்சினை இல்லை எனவும் மாறாக அது சமூகங்களுக்கு இடையிலான ஒரு விரோதமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு என்பதற்கு பதிலாக பொது மக்கள் பாதுகாப்பு என்ற பதமே தற்போது முக்கியமானது எனவும், ஆகவே அவ்வாறான பிரச்சினைக்கு ஒற்றுமை மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலமே தீர்வை பெற முடியும் எனவும் அவர் கூறினார்.

எனவே, மக்களுக்கு இடையிலான சகோதரதுவத்தை கட்டியெழுப்புவதற்கான பாதுகாப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் சமய நம்பிக்கைகளை பயன்படுத்தி அரசியல் இலாபத்தை பெற முயற்சிக்கும் சிலர் அதனை அரசியல் அரங்கில் விற்பதாகவும் அவர் கூறினார்.

ஆகவே, மதத்தை அரசியல் அரங்கிற்கு பயன்படுத்தக் கூடாது என்பதே தான் உள்ளிட்ட கட்சியின் பிரதான கொள்கையாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Share:

Author: theneeweb