பிரியா, நடேசலிங்கம் தம்பதியினருக்கு 24 மணி நேர கால அவகாசம்

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பிரியா, நடேசலிங்கம் தம்பதியினருக்கு, மெல்போர்ன் நீதிமன்றம் 24 மணி நேர கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்ற அவர்களது வீசா காலம் நிறைவடைந்த நிலையில் அவர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் பல தடவைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு அவர்கள் வசித்து வந்த பிலோயிலா பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் இரண்டாவது மகளுக்கு வீசா வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைக் கருத்தில் கொண்டு, இறுதியாக அவர்களை நாடு கடத்த எடுக்கப்பட்ட முயற்சி பிற்போடப்பட்டது.

இந்த வழக்கு இன்று மெல்போர்ன் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, அவர்களது மகள் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு வீசா வழங்கப்பட வேண்டும் என்று அவர்களது சட்டத்தரணியால் வாதம் முன்வைக்கப்பட்டது.

எனினும் இன்றைய வழக்கு விசாரணையில் தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.

வழக்கு பூரண மற்றும் இறுதி விசாரணைக்காக திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாடு கடத்தப்படுவதை தடுத்து வழங்கப்பட்டிருந்த உத்தரவு காலம் நாளை 24 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Author: theneeweb