ஜனாதிபதி மனநல வழக்கு – 1 இலட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பில் பரிசோதனை செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மனுதாரருக்கு நீதிமன்ற சட்டச் செலவாக ஒரு இலட்சம் ரூபா பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு 12ஐ சேர்ந்த தக்ஷிலா லக்மாலி என்ற பெண் ஒருவரே குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பிரதீ பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபர் சார்ப்பில் ஆஜரான மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மனுவை விசாரணை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மனநல கட்டளை சட்டத்தின் கீழ் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் தகவல்கள் தெரியவருமாயின் அது தொடர்பில் முதலில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்த சொலிஸ்டர் ஜெனரல், அதன் பின்னர் பொலிஸார் அந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிடின் மாத்திரமே அதனை நீதிமன்றத்திற்கு எடுத்து வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்காமல் ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நீண்ட நேரம் கருத்துக்களை விசாரணை செய்த பின்னர் குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துவது சட்டத்திற்கு முரணானது என நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

எனவே குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தாது நிராகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

Share:

Author: theneeweb