பிரான்ஸ்: மீண்டும் தீவிரமடைகிறது “மஞ்சள் அங்கி’ போராட்டம்; அரசு நிர்வாக அலுவலகத்தின் மீது தாக்குதல்

பிரான்ஸில் அரசுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் “மஞ்சள் அங்கி’ போராட்டம், இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் தீவிரமடைந்தது.

அப்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஒரு பகுதியாக, அரசு வளாகத்தை போராட்டக்காரர்கள் தாக்கினர். இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் கிரைவியாக்ஸ் கூறியதாவது: மஞ்சள் அங்கிப் போராட்டக்காரர்கள் அரசு நிர்வாக அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது, தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

கருப்பு உடை அணிந்து அரசு வளாகத்துக்கு வந்த போராட்டக்காரர்கள், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திர வாகனத்தை ஓட்டி வந்து அலுவலக வாயிலை சேதப்படுத்தினர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனத்தை போராட்டக்கார்கள் வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி, இந்தத் தாக்குதலை நடத்தினர் என்றார் அவர்.

அரசு வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த கார்களையும், கண்ணாடி ஜன்னல்களையும் சேதப்படுத்திய காட்சிகள் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த வளாகத்திலிருந்து செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் கிரைவியாக்ஸ் உள்ளிட்டவர்களை போலீஸார் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

இதுதவிர, தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று, வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை பிரான்ஸ் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாத நிலையில், 8-ஆவது வாரமாக இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது போலீஸாருடன் போராட்டக்காரர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காற்று மாசைக் குறைத்து, பருவ நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை மேக்ரான் அரசு அதிகரித்து வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி முதல் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
எரிபொருள் விலையேற்றம் மட்டுமன்றி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்ப்பின் அடையாளமாக, ஒளிரும் மஞ்சள் மேலங்கியை அணிந்து கொண்டு பொதுமக்கள் நடத்தும் இந்தப் போராட்டம், “மஞ்சள் அங்கி’ போராட்டம் என்றழைக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த இந்தப் போராட்டம், நான்கு வாரங்களாக தொடர்ந்து தீவிரமடைந்தது.
அதையடுத்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு சலுகைத் திட்டங்களை அதிபர் இமானுவல் மேக்ரன் அறிவித்தார்.

வரிகளை பெருமளவு குறைப்பது, குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோக்கள் (சுமார் ரூ.8,200) அதிகரிப்பது போன்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிவித்தார்.
அதையடுத்து, மஞ்சள் அங்கிப் போராட்டத்தின் தீவிரம் குறைந்திருந்த நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் தங்கள் தீவிரத்தை மீண்டும் அதிகப்படுத்தி வருவது அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

Share:

Author: theneeweb