தொலைபேசி உரையாடலை வெளியிட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி..!

கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், தற்போதைய மன்றாடியார் நாயகமுமான தில்ருக்ஷி டயஸ், எவன்கார்ட் வழக்கு தொடர்பில் நடத்திய தொலைபேசி உரையாடலின் குரல் பதிவை அந்த நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் அவரினால் இந்தக் குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த தொலைபேசி உரையாடலில் கருத்து தெரிவித்துள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி, சுமார் 4,000 பேருக்கு தொழில்வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், இவ்வாறு நிகழும் என்றும் தெரிந்திருந்தால் தாம் ஒருபோதும் வழக்கு தொடர்ந்திருக்க மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோசமான அரசியல் செயற்பாட்டின் காரணமாக இந்த நடவடிக்கை இடம்பெற்றது.

உங்களது அலுவலத்தில் உள்ள 7 ஆயிரத்து 500க்கும் அதிகமான கடிதங்களை தாம் அறிந்துள்ளதாகவும் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபவுக்கு எதிராக தாம் வழக்குத் தொடருவதில்லை என்றும், அந்த செயற்பாடுகள் குறித்து தாம் வருத்தமடைவதாகவும் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவின் செயற்பாடுகள் எவ்வாறானது என்பதை அதன் முன்னாள் பணிப்பாளர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மன்றாடியார் நாயகம் தில்ருக்ஷி டயஸ்க்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்கத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்வதற்காக ராவணா பலய உள்ளிட்ட சில அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மன்றாடியார் நாயகம் தில்ருக்ஷி டயஸை தொடர்புகொள்ள எமது செய்திப் பிரிவு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை..

Share:

Author: theneeweb