பௌத்த தேரரின் மறைவு தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள விகாரையின் காலமான விகாராதிபதி கொழும்பு மேதலங்கார கீர்த்தி தேரின் இறுதிக் கிரியை தொடர்பில் நாளைய தினம் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை அவரின் பூதவுடலை குறித்த பகுதியில் புதைக்கவோ அல்லது எரிக்கவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அவ்வாறு தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் எனக்கோரி பிரதேச மக்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சுதர்சன் முன்னிலையில் இந்த விவகாரம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினரும், தற்போது விகாரையில் விகாராதிபதியாக உள்ள தேரரும், நாளை காலை 9 மணிக்கு மன்றில் முன்னிலையாக வேண்டும் என முல்லைத்தீவு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேநேரம், நாளைய தினம் நீதிமன்றத்தினால், பொருத்தமானமொரு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு காவல்துறையினர் இயன்றளவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை, இந்த நீதிமன்ற உத்தரவின் பிரதிகள் ஆலய மற்றும் விகாரை வளாகங்களில் அறியக்கூடிய வகையில் அறிவித்தலாக ஒட்டப்பட வேண்டும் என்றும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், காலமான பௌத்த தேரரின் பூதவுடல், பழைய செம்மலை நீராவியடியில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கள மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் ஆகியோர் பௌத்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர் நீண்டகாலமாக பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை விகாரை அமைத்திருந்தமையால் குறித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில், முல்லைத்தீவு காவல்துறையினரால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

பிள்ளையார் ஆலய தரப்புக்கு தேரரினால் இடையூறு விளைவிக்க்படக்கூடாது என்றும், இரு தரப்பும் சமாதானமுறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் குறித்த பௌத்த தேரரின் சார்ப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb