அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் நியாயமானதா?

செப்டம்பர் 26, 27 ஆகிய இரண்டு தினங்களிலும் சுகயீன விடுமுறையில் ஆசிரியர்கள் அதிபர்களை இருக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்ற அதேநேரம் 26 முற்பகல் 10 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிர நிலையத்துக்கு முன்னால் ஒன்றுகூடுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரேணுகா குழுவின் சம்பளத் தீர்வானது, ஏற்கனவே இருந்த முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்திருப்பதுடன் கல்விப் புலத்தில் இருப்பவர்களின் சம்பள முரண்பாடு ஏனைய அரச துறையில் உள்ளவர்களின் சம்பளத்தோடு ஒப்பிடுகையில் முரண்பாடு கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் பின்னணியில் நாளை விடுக்கப்பட்டிருக்கின்ற சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான போராட்டம் வெற்றியைத் தருமா? என்பதுதான் கேள்விக்குறியாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தினால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன. அதேவேளை, தேவையேற்படின் பாடசாலைகளை மூடுவதற்கான அதிகாரங்கள் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டு, ஓர் அனர்த்த சூழ்நிலைக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் கல்விப் புலத்தில் உள்ளோரின் இந்தப் போராட்டமானது யாராலும் ஏறெடுத்துப் பார்க்கப்படமாட்டாது.

நாள்தோறும் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஏதோவொரு தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடிக்கொண்டே இருக்கின்றனர். நானறிந்த வகையில் அவர்களில் தீர்வைப் பெற்றுக்கொண்டவர்கள் எவருமில்லை.

அதேநேரம் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னரான பாடசாலை நடவடிக்கைகளில் சுமார் 20 நாட்கள் சூறையாடப்பட்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளை மாணவர்கள் எதிர்நோக்கவிருக்கின்ற பரீட்சைகளிலும் இது பெருமளவில் தாக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை.

மேற்படி இருநாள் சுகயீன விடுமுறையானது ஓர் ஆசிரியரின் வருடாந்த சுகயீன விடுமுறையில் இரண்டைக் குறைக்குமே தவிர, அதனால் வேறு எந்தப் புண்ணியம் கிட்டப்போவதில்லை என்பது வெள்ளிடைமலை. ஓர் அதிபர் பாடசாலையை மூடிவிட்டு சுகயீன விடுமுறையில் வீட்டிலிருந்தால் அரச நிறுவனம் ஒன்றை இயங்கவிடாது ஸ்தம்பிக்கவைத்த குற்றத்துக்கு ஆளாகமாட்டாரா?

ஆசிரியர்களும் அதிபர்களும்தான் இப்போராட்டத்தில் குதிப்பதாயின் பாடசாலைகளில் கடமை புரிகின்ற கல்விசாரா ஊழியர்களின் இரண்டு நாள் எந்த அடிப்படையில் கழியப் போகின்றது. அண்ணளவாக இலங்கையில் 2 இலட்சத்து 20 ஆயிரம் பேர் கல்விப் புலத்தில் பணிபுரிகின்ற நிலையில், அவர்களை 30க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

உண்மையில் சிலருக்கு தாம் எந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதி என்று கூடத்தெரியாமல் இருக்கின்றது. அதேவேளை, சில தொழிற்சங்கங்கள் அங்கத்துவப் பணத்தை அறவீடு செய்ய மட்டுமே தொழிற்படுகின்றன.

அதிபர் ஆசிரியர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் சுகயீன விடுமுறையை உறுதிப்படுத்துவதுடன், நாளைய தினம் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதா அல்லது வீட்டில் வைத்திருப்பதா என்று ஒவ்வொரு பெற்றோரும் ஏக்கத்துடன் இருக்கின்றனர்.

சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு இருப்பினும், நாளைய தினம் ஆரம்பிக்கப்படவிருக்கும் இப்போராட்டமானது வெற்றியடையும் எந்த சாத்தியங்களும் இல்லாத காரணத்தினால், இப்போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தங்களது முயற்சிகளை உடனடியாக கைவிட்டு நாளைய தினம் வழமைபோன்று பாடசாலைகள் இயங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

வெறும் அரசியல் நோக்கத்துக்காக தேசியப் பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்யும் ஆசிரியர்களின் பொறுப்புமிக்க கௌரவமான பணி கொச்சைப் படுத்தப்பட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கத்திலும், இன்று கல்வி அமைச்சுக்கு முன்னால் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளின் போராட்டத்தினை நேரில் கண்டதினாலும் இப்பத்தியினை எழுதுகிறேன்.

எனவே, பொறுப்புமிக்க அதிபர், ஆசிரியர்களே நாட்டின் இன்றைய அனர்த்த சூழ்நிலையை கவனத்திற்கொண்டு வேறொரு தினத்தில் உங்களது போராட்டத்தை செய்து அரசிடம் உங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்குமாறு வேண்டுகிறேன்.

இப்போராட்டம் வெற்றிபெற வேண்டுமானால், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வை இனங்கண்டு அதன்பின் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பில் ஆசிரியர்களை அறிவுறுத்தி, குறைந்தபட்சம் ஏன் இந்த போராட்டத்தைச் செய்கிறோம் என்ற அறிவையாவது ஆசிரியர்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும்.

எம்.எம்.எம். சமீம் (BA, MA, PGDE, PGDC)
முன்னாள் அதிபர்

Share:

Author: theneeweb