கோட்டாபய தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றம் பிறப்பித்த 2 உத்தரவுகள்

கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரால் இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அமெரிக்க குடிமகனாக இருந்த போது சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அரசியில் செயற்பாடுகளில் ஈடுபட்டதன் ஊடாக குடிஉரிமைச் சட்டம், குடிவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் தேர்தல்கள் சட்டங்களை மீறியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரகசிய பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்றை ஏற்ற கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளுக்கு அமைவாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவின் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்ட காலப்பகுதியில், கோட்டாபய ராஜபக்ஷ இரட்டை குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவை தம்மிடம் இல்லை என அதிகாரிகள் அறிவித்ததாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, விசாரணைகளுக்கு தேவையான குறித்த ஆவணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு இரகசிய பொலிஸார் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

குறித்த கோரிக்கையை ஏற்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியவர்களால் பொஸில்மா அதிபரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb