போருக்குப் பிறகான அரசியல்! – கருணாகரன்


போருக்குப் பிந்திய அரசியல் எப்படி இருக்க வேண்டும்? அதை எப்படி முன்னெடுப்பது?

இலங்கையில் போர் முடிந்த பிறகு எழுந்த கேள்விகளே இவை. ஆனால் துரதிருஷ்டமாக இந்தக் கேள்விகளுக்கான பதிலை இலங்கைச் சமூகங்கள் இன்னும் கண்டடையவில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடவும் இல்லை. குறைந்த பட்சம் தாம் பட்ட மிகத்துயர் நிறைந்த அனுபவத்திலிருந்தும் கடந்த கால இருள் வாழ்விலிருந்தும் கூட எந்த அறிவையும் பெறவில்லை. இலங்கைத்தீவின் மிகப் பெரிய துயர் இது. மிகப் பெரிய சாபமும் இதுதான்.

போருக்குப் பிறகான அரசியலானது பகை மறப்பு, புரிந்துணர்வு, நல்லிணக்கம், ஐக்கியப்படல், சேர்ந்தியங்குதல், ஒன்றிணைதல், சமாதானத்தை எட்டுதல், அமைதிவழியை உருவாக்குதல் என்றவாறாக இருந்திருக்க வேண்டும். இது கூட்டுச் செயற்பாடுகளின் வழியாகவே நிகழ்த்தப்பட வேண்டியது. பெருந்தன்மையோடும் அறிவோடும் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டியது. இதற்கான தொடக்கம் உரையாடல்களோடு ஆரம்பித்திருக்க வேண்டும். நீண்ட – பொறுதியோடான உரையாடல்களோடு. நம்பிக்கை கொள்ளுமளவுக்கு வெளிப்படைத்தன்மையும் நிதானமும் உள்ள உரையாடல்களாக.

இதையே சர்வதேச சமூகமும் விரும்பியது. இதற்காக அது பெரு முயற்சிகளை எல்லாம் எடுத்தது. பெருமளவு நிதியைக் கூட இலங்கைச் சமூகங்களுக்கும் அரசுக்கும் வழங்கியது. ஆனால், வெட்கக்கேடான விசயம், இந்தக் காசைச் செலவழிப்பதிலும் தமக்கென எடுத்துக் கொள்வதிலும் காட்டிய ஆர்வத்தை இதனோடு சம்மந்தப்பட்ட எவரும் அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் பகை மறப்புக்கும் ஒதுக்கவில்லை. அல்லது அதற்காகச் செலவழிக்கவில்லை. அல்லது அதற்குரிய வேலைத்திட்டங்களை அர்ப்பணிப்போடு முன்னெடுக்கவில்லை. இது எவ்வளவு பெரிய அநியாயம்? எவ்வளவு மோசமான செயல்?

இவ்வளவுக்கும் இலங்கையில் அமைதியையும் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கான இந்த வழிமுறைகளை வெளிச்சமூகத்தினரே அக்கறையோடு முன்னெடுக்கின்றனர். இலங்கையர்களோ இதைப் புறக்கணித்து விட்டு பகை வளர்ப்பிலேயே முழுமையான அக்கறையைக் கொண்டிருக்கின்றனர். இது போருக்குப் பிந்திய அரசியலுக்கு எதிரான அரசியலாகும். அதாவது பின்னிழுத்துச் செல்லும் அரசியல். சாத்தானின் நிழல் படிந்த அரசியல். இருட்சதுப்பில் பயணிக்கும்  அரசியல்.

ஒரு சிறிய உதாரணம். ஆனால், நிஜமாக நடந்த கதை.

போர் முடிந்த பிறகு 2010 வாக்கில் தொடர்ச்சியாகச் சில ஊடகப் பயிலரங்குகளை அரசசார்பற்ற நிறுவனங்களும் அமெரிக்கா, சுவீடன், சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளும் நடத்தின. அதில், போருக்குப் பிந்திய சூழலை எப்படி உருவாக்க வேண்டும்? அந்தச் சூழலை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதைப்பற்றியெல்லாம்  விவாதிக்கப்பட்டது. இன்னொரு வகையில் சொன்னால் இதைப்பற்றி ஊடகத்துறையினருக்கு அறிவூட்டப்பட்டது எனலாம்.

இதில் முரண்பாட்டின் தோற்றம், அது போராக மாறிய விதம் அல்லது மாற்றப்பட்ட முறைமை, போர், போரின் முடிவு, போருக்குப் பிந்திய புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு, பகை மறப்பும் மீளிணக்கமும், தீர்வு, சமாதானம் அல்லது அமைதி என்ற தொடரில் நிகழ்வனவற்றைப் பற்றிப் பேசிப்பட்டது.

முரண்பாடு முற்றியதாலேயே போர் வெடித்தது. அது பேரழிவோடு முடிவடைந்திருக்கிறது. ஆனாலும் தீர்வு கிட்டவில்லை. பேரழிவுக்கும் பெருந்தியாகத்துக்கும் எந்தப் பெறுமானங்களுமில்லாமல் போய்விட்டது. இதனால் சமூகங்களிடையே கொந்தளிப்பு அப்படியே உள்ளது. அதிலும் போரில் தோற்றதாகக் கருதும் தமிழ்ச்சமூகத்தின் அகக் கொந்தளிப்பு இதில் உச்சம். ஆகவே இதை ஆற்றுப்படுத்தக்கூடிய வேலைகளும் தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் முக்கியமானது இதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட வேண்டியது புனர்வாழ்வும் புனரமைப்புமே. அப்பொழுதே இழந்தவற்றை ஓரளவுக்கேனும் மீள் நிரப்ப முடியும். அது வேதனையைக் குறைக்கும். இதைத் தொடர்ந்து பகை மறப்பும் மீளிணக்கமும் நிகழ வேண்டும்.

இந்த மீளிணக்கத்துக்கு அடிப்படையானது பகை மறப்பு. பகை மறப்புக்கு முறையான புனரமைப்பும் புனர்வாழ்வும் நிவாரணமளிப்பும் நிகழ வேண்டும். மீள நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். மீள நிகழாமைக்கு அவசியமானது பகை மறப்பு. பகை மறக்கப்படவில்லை என்றால் மீள நிகழாமைக்குச் சாத்தியமே இல்லை. ஆகவே பகை மறப்பு அவசியமானது. ஆனால் பகை மறப்பை எளிதில் செய்து விட முடியாது. சமூகங்களாகவும் இனங்களாகவும் பிளவுண்டிருக்கும் இலங்கைச் சமூகங்களிடையே வளர்ச்சியடைந்திருக்கும் பகையையும் முரண்களையும் இல்லாமற் செய்வதொன்றும் எளிய விசயமில்லை. அதற்கு நேர்மையுடன் கூடிய அர்ப்பணிப்புத் தேவை. எந்த நிலையிலும் தளர்ந்து போகாத உறுதி வேண்டும். இந்த அர்ப்பணிப்பு என்பது சாதாரணமானதல்ல. மிகக்கடினமானது. குறுகிய அரசியல் லாபங்களும் நோக்கங்களும் இதற்கு எதிரானவை.

பகையில் திரட்சி அடைந்திருக்கும் வெறுப்பையும் சந்தேகத்தையும் கடந்து பகை மறுப்பை வளர்த்தெடுப்பதொன்றும் எளிய விசயமும் அல்ல. ஆனாலும் இதைச் செய்தே ஆக வேண்டும். அப்படியென்றால், யுத்தத்துக்குச் செலவழித்த நேரம், ஆளணி, நிதி, வளங்கள், கரிசனை, அதிகாரம் போன்றவற்றை விடவும் பன்மடங்கில் பகையை மறக்கும் செயற்பாட்டுக்குச் செலவழிக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் அந்த ஊடகப் பயிலரங்குகளில் வலியுறுத்திப் பேசினோம்.

உலகளாவிய அளவில் இதுதான் நிலைமை. இதை உணர்ந்து கொண்ட மேற்படி நாடுகளின் பிரதிநிதிகள் தாராளமாக தம்மால் இதற்கு உதவ முடியும் என்றனர். இதன்படி அவர்கள் ஏராளம் வேலைத்திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்காக முயற்சித்தனர். பகை மறப்பு, நல்லிணக்கம் போன்றவற்றில் வெற்றிகரமான முன்னுதாரணத்தைக் கொண்டிருக்கும் தென்னாபிரிக்காவுக்கே ஒரு தொகுதி அரசியல் எழுத்தாளர்களையும் அரசியல் செயற்பாட்டினரையும் சில ஊடகவியலாளர்களையும் அழைத்துச் சென்று நிலவரங்களை – மாற்றங்கள் நிகழ்ந்த விதங்களை – காண்பித்தனர்.

அப்பொழுது நாம் முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறி முகாமிலிருந்தோம். பின்னர் முகாமிலிருந்து வெளியேறி உறவினர் ஒருவரின் ஆதரவில் தங்கியிருந்தோம். போரின் கசப்பான அனுபவங்களோடிருந்த எங்களுக்கு இது மிக மிகச் சரியானதொரு வழியென்றே பட்டது. ஆனால் யுத்த அனுபவத்துக்கு வெளியே இருந்து வந்தவர்களுக்கு இதைக்குறித்த பெரிய ஈடுபாடுகளைக் காண முடியவில்லை. அவர்கள் வழமையான பாணியில் அணி பிரிந்து தங்களுக்கிடையில் பழைய வழிகளைப் புதுப்பிப்பதைப்பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். மறந்தும் கூட சாப்பாட்டு நேரத்தைத் தவிர்த்து உரையாடற் சந்தர்ப்பங்களில் கூட புதிய விசயங்களுக்காக வாய் திறக்கவில்லை.

இது மேற்படி சமாதானத்தை விரும்பும் தரப்புகளுக்கு சலிப்பையும் வியப்பையும் ஏற்படுத்தின. என்றபோதும் சற்றும் தளராத விக்கிரமாதித்தனைப்போல, அவை பகை மறப்பு, மீளிணக்கம், அமைதித் தீர்வு, நிரந்தர சமாதானம் என்ற வகையிலேயே பேசிக் கொண்டிருந்தன. இதற்கு ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பெரும் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தின.

ஆனால், பயிலரங்குக்கு வெளியே அல்லது அதற்குப் பிறகு எந்த விதமான மாற்றங்களும் நிகழாமல் அப்படியே பழைய வழித்தடத்தில் பகை வளர்ப்பு அறிக்கையிடலே தொடர்ந்தது. ஊடகத்துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் பகை வளர்ப்பு அரசியலே நிகழ்ந்தது. நிகழ்ந்தும் வருகிறது. இதில் அரசுதான் தவறுகளைத் தொடர்ந்துமிழழைக்கிறது என்றொரு வாதத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். அரசியலமைப்புத் திருத்தத்திலும் கூட பகை மறப்புக்கான அடிப்படைகளே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. பௌத்தத்துக்கு முதலிடம் என்பதில் தொடங்கி, ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்ற பதங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஆதிக்க அரசியல் என்பது பகை வளர்ப்பன்றி, பகை மறப்பில்லையே. ஆகவே அரசாங்கத்தையே இந்த நாடுகள் கண்டிக்க வேண்டும். அரசாங்கத்துக்கே அவை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அரசாங்கத்துக்கு வெளிச்சக்திகள் அழுத்தம் கொடுக்காது. அப்படிக் கொடுத்தாலும் அதுவொரு மென்னழுத்தமாகவே இருக்கும். அதைக் கண்டு கொழும்பு அசந்து விடாது. ஆகவே மக்கள்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதற்கு முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அவசியம். திறந்த உரையாடல்களும் முறையான திட்டமிடலும் தேவை. அர்ப்பணிப்பான உழைப்பு அவசியம். இதைச் செய்வதற்கு யாருமே தயாரில்லை. பதிலாக குறுகிய வழியில் லாபத்தைச் சம்பாதிக்கும் அரசியலே முன்னெடுக்கப்படுகிறது. இதனால் ஏட்டிக்குப் போட்டியான  நிலைமை உருவாகியுள்ளது.

ஆகவேதான் போருக்குப் பிந்திய அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்ற இந்தக் கேள்விகளுக்கு இன்னுமே பதில் காணப்படவில்லை. இதற்கு எவரிடத்திலும் பதிலில்லை. ஏனென்றால் எல்லோரும் போருக்கான பகை அரசியலையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பகை அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போது எப்படிப் போருக்குப் பிந்திய அரசிலைப்பற்றி இவர்களாற் சிந்திக்க முடியும்?

ஆனால்,  நிச்சயமாக போருக்குப் பிந்திய அரசியலை முன்னெடுக்காத வரையில் (அப்படியென்றால் போருக்கான பகை அரசியலைத் தொடர்ந்து கொண்டிருக்கும் வரையில் என்றே பொருள்படும்) இலங்கையில் மாற்றங்களும் ஏற்படாது. முன்னேற்றமும் நிகழாது. பதிலாக நீராவியடியிலும் முற்றவெளியிலும் புத்த பிக்குவின் சடலம் அடக்கம் செய்யப்படும். பௌத்தத்துக்கு முதலிடம் என்ற அரசியலமைப்பு அரங்கேறும். நாவற்குழியில் பௌத்த விகாரை கட்டப்படும். இப்படிச் செய்யச் செய்யச் சமூகங்கள் பிளவுண்டு விடும்.

உண்மையில் சனங்கள் சமூகங்களாகவே பிளவுண்டிருக்கிறார்கள். அப்படிப் பிளவு படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சமூகப் பிளவுகள் சாதாரணமானவையல்ல. எப்போதும் கொதித்துக் கூராகிக் கொண்டிருப்பவை. இதையே அரசியற் கட்சிகள் விரும்புகின்றன. குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதைப்போல இந்தக் குழப்பத்தில் உறுமீனைப் பிடிக்கவே முயற்சிக்கின்றன.

இதன் ஒரு வெளிப்பாடே நீராவியடியில் பௌத்த பிக்குவின் உடல் தகனமும் நாவற்குழியில் விகாரை அமைப்பதும்.

இந்தச் சூழலில்தான் இந்தப் பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட “போருக்குப் பிந்திய அரசியல் எப்படி இருக்க வேண்டும்? அதை எப்படி முன்னெடுப்பது?” என்ற கேள்விகள் அணியாத தணலாகக் கனன்று கொண்டிருக்கின்றன.

இந்தக் கேள்விகளை இங்கே பகிரங்கமாக அரசியல் தலைவர்களிடமும் அவர்களுடைய கட்சிகளிடத்திலும் முன் வைக்கிறேன். அதைப்போல ஊடகவியலாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் இதற்குப் பதிலளிக்க வேண்டும். ஏனெனில் மக்களுடைய தெரிவுக்கான அரசியலை முன்வைப்பவர்களும் அதற்கான வழிகாட்டுநர்களும் இவர்களே. இதற்கான பதிலைச் சரியாகக் காணத் தவறினால் நீராவியடியைப்போல ஆயிரம் நீராவியடிகள் தோன்றும்.

00

Share:

Author: theneeweb