எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

 

காலி துறைமுகத்திற்கு அருகில் கடற்பரப்பில் எம்.வீ எவன்கார்ட் கப்பலினுள் உரிமம் இன்றி துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருத்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதிவாதிகள் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ட்ரயல் எட் பார் விசேட நீதாய நீதிமன்றினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்களான பாலித பெர்ணான்டோ மற்றும் பீ ஏகொடவெல, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் சமன் திஸாநாயக்க, ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர உள்ளிட்ட 5 பேருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பிரதிவாதியையும் தலா 5 இலட்சம் ரூபாய் ரொக்க பிணையிலும் 25 ரூபாய் சரீர பிணையிலும் விடுவிக்க கொழும்பு ட்ரயல் எட் பார் விசேட நீதாய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வௌிநாடு செல்வதற்கு பிரதிவாதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அவர்களின் வௌிநாட்டு பயணக் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காலி மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட மேலும் மூன்று பிரதிவாதிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர்களும் முன் பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் வழக்கு எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பு: – நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Share:

Author: theneeweb