எதிர்காலத்தில் உருவாகும் அரசாங்கத்தின் ஊடாக பனைசார் கைத்தொழிலுக்கு புதிய தொழில்நுட்பம்

30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து தெற்கு மக்கள் வடக்கிற்கும், வடக்கு மக்கள் தெற்கிற்கும் சென்றுவர கூடிய சமாதான சூழலை ஏற்படுத்தியதுடன், வடக்கில் பாரிய அபிவிருத்திகளை தமது அரசாங்கமே செய்தாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பனை தயாரிப்பாளர்களை இன்று (27) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பை ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ´தெற்கில் தென்னை மரமும், வடக்கே பனை மரமும் மதிப்புக்குரியவை. 30 வருட யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு மற்றும் கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக தனது அரசாங்கம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியது.

எதிர்காலத்தில் உருவாகும் எங்கள் அரசாங்கத்தின் ஊடாக பனைசார் கைத்தொழிலுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மானிப்பாய் பனை உற்பத்தி நிலையத்தை மேம்படுத்த வேண்டும். பனை கன்று உற்பத்தியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

பனை தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து அந்நிய செலாவனியை உழைக்கும் நிலைக்கு மேம்படுத்தப்பட வேண்டும். எங்கள் அரசாங்கம் சரியான நேரத்தில் நிவாரணம் அளித்தது. பனை கன்று உற்பத்தியாளர்களிடமிருந்து 10 ரூபாய் வரி மாத்திரமே வசூலிக்கப்பட்டது.

இப்போது 50 ரூபா வசூலிக்கப்படுகிறது. பனை உற்பத்தியில் ஈடுபடுவோர் பாதுகாக்கப்பட வேண்டும். நாம் தொழில்துறையை உயர்த்தி அதன் சார்புடையவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம்.

வீடுகள், ரயில் மார்க்கம், குடிநீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை வடக்கில் உருவாக்க நடவடிக்கை எடுத்தோம். இலங்கையின் சிறந்த மருத்துவமனை யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்காக மஹிந்தோதய வித்தியாலயங்களை அமைத்தோம் தற்போது எமது அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு நினைவு வந்துள்ளது. எமது அரசாங்கத்தால் மாத்திரமே அந்த பகுதி மக்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது.

அவ்வாறு செய்ய இந்த அரசாங்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அவர்களின் பிரச்சினைகளை மாத்திரம் தீர்த்து கொண்டுள்ளது அவர்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.

Share:

Author: theneeweb