கோட்டாபய ராஜபக்ஷவை, இலங்கையின் பிரஜையாக அங்கீகரிக்க கூடாது என்று உத்தரவிடக்கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, இலங்கையின் பிரஜையாக அங்கீகரிக்க கூடாது என்று உத்தரவிடக்கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு இந்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, நாளை மறுதினம் முதல் மூன்று நீதியரசர்கள் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயத்தினால் பரிசீலிக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர்களான யசன்த கோதாகொட மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோரால் இந்த மனு பரிசீலிக்கப்பட்டதுடன், அதன் முக்கியத்துவம் கருதி, நாளை மறுதினம் முதல் அதனை தொடர்ச்சியாக விசாரிக்கவும், விசாரணை ஆயத்தில் மேலதிக நீதியரசராக மகிந்த சமயவர்தனைவையும் இணைத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த மனுவை பேராசியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு இன்று காலை பரிசீலிக்கப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஷவின் தரப்பு சட்டத்தரணியிடம் அதற்கு எதிர்ப்புகள் இருப்பின் முன்வைக்குமாறு கோரப்பட்டது.

எனினும் மனுவை விசாரிக்க எதிர்ப்பு இல்லைஎன்று கோட்டாபய ராஜபக்ஷவின் தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக, குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர்கள், ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர், அரச நிர் நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவலக அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர், எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் மன்றாடியார் நாயகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக தெரிவித்து, இலங்கையின் கடவுச் சீட்டைப் பெற்றுள்ளார்.

ஆனால் அவர் இலங்கையின் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு, உரிய ஆவணங்களை முன்வைக்கவில்லை என்று தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Author: theneeweb