பொதுச் சின்னத்திற்கு உடன்பட்டால் மாத்திரமே பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைப்போம்

பொதுச் சின்னத்தில் போட்டியிட இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டணி அமைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருநாகலையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைக்கும் நோக்கத்திற்கு தீங்கை ஏற்படுத்தி கட்சி உறுப்பினர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் வகையில் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், அந்தகட்சி மக்கள் நேய செயற்பாடுகளினால் அழிவை சந்திக்கவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பலவீனமடைந்திருப்பதாக எவர் கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கால ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே உள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரமற்ற ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பதை விட 2020 ஆம் ஆண்டு அதிகாரமுள்ள ஆட்சியை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தின்; அதிகாரத்தை பெறுவதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இலக்கு

அதற்கு தனித்து போட்டியிடாமல் கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக அந்த இலக்கினை அடைவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

Share:

Author: theneeweb