ஆளுநர் மாற்றங்கள் மாற்றங்களைக் கொண்டு வருமா?

–    கருணாகரன்—-

மாகாண ஆளுநர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து ஏனையவர்களும் மாற்றப்படவுள்ளனர். இப்பொழுது ஐந்து மாகாணங்களுக்கான ஆளுநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனையவர்கள் அடுத்த சில தினங்களுக்குள் நியமிக்கப்படலாம். அல்லது இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போதோ, நீங்கள் இதை வாசித்துக் கொண்டிருக்கும்போதோ அவர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படலாம்.

வடக்குக் கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களுக்கான நியமனங்களில் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சூழல் குறைவு. வடக்குக் கிழக்கு நியமனங்கள் வேறானவை. அவை ஏற்படுத்துகின்ற உணர்வு நிலையும் வேறானது.

கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களை வேறுபடுத்தாமல், சமனிலையில் நோக்கக் கூடிய ஒருவரின் நியமனமே சிக்கல்களையும் சர்ச்சைகளையும் தவிர்க்கக் கூடியதாக இருக்கும். அல்லது ஆளுநராக நியமிக்கப்படுகின்றவர் இந்தச் சமூக வெளியில் தன்னை ஒரு பொது ஆளாக நிறுத்திச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்.

அதாவது எந்தச் சமூக அடையாளத்துக்குள்ளும் கட்டுப்பட்டுவிடாத  அல்லது எல்லைகளுக்குள்ளும் தன்னை வரையறுத்துக்கொள்ளாத பொதுநபராக, அனைத்துச் சமூகத்தினரும் மதிக்கக்கூடிய, ஏற்கக் கூடியவராக இருக்க வேண்டும். அத்தகைய தலைமைத்துவப் பண்பு இருக்க வேண்டும்.

இப்பொழுது கிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பவர் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா. பாராளுமன்ற அரசியலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் வழியே நன்றாக அறியப்பட்டவர் ஹிஸ்புல்லா. கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியை மையப்படுத்திச் செயற்பட்டவர். நீண்டகாலம் அமைச்சராகவும் செயற்பட்டிருக்கிறார்.

இத்தகைய அனுபவத்தையும் அடையாளங்களையும் கொண்ட ஹிஸ்புல்லா, இப்பொழுது தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர்  பதவியை ராஜினாமாச் செய்து விட்டு ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஹிஸ்புல்லாவின் நியமனத்தை முஸ்லிம்கள் கொண்டாடுவதோ தமிழர்கள் சந்தேகத்துடன் நோக்குவதோ சிங்களவர்கள் ஒன்றுமே புரியாமல் விழிப்பதோ இங்கே அவசியமற்றவை. ஒரு பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதைப்போல, ஒரு நிர்வாகப் பிரிவுக்கு அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளதைப்போல கிழக்கு மாகாண நிர்வாகத்துக்கான ஆளுநர் பொறுப்பை ஹிஸ்புல்லா பொறுப்பேற்றிருக்கிறார். அல்லது அவ்வாறு ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது ஒரு நோக்கிற்குரியது.

மறுவளத்தில் ஹிஸ்புல்லா கிழக்கிற்கான ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள். அதேயளவுக்கு தமிழர்கள் முகம் சுழிக்கிறார்கள். ஹிஸ்புல்லாவின் நியமனத்தைக் கண்டித்தும் எதிர்த்தும் தமிழர்கள் எழுதி வரும் பதிவுகளில் அவர்களுடைய அச்சத்தைக் காணலாம். இந்த அச்சத்துக்கு ஹிஸ்புல்லாவின் உரையொன்று காரணமாக – சாட்சியமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அதில் சைவக்கோயில் ஒன்றை ஆக்கிரமித்து பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதற்குத் தான் உதவியதைப் பகிரங்கமாகக் ஹிஸ்புல்லா சொல்கிறார். பொறுப்பான பதவியில் இருந்த ஒருவர் இப்படி நல்லெண்ணத்துக்கும் இன ஐக்கியத்துக்கும் எதிராகச் சிந்திக்க முடியாது. ஆனால் ஹிஸ்புல்லா அப்படித்தான் சிந்தித்திருக்கிறார். நடந்திருக்கிறார். இந்த நிலையில்தான் இப்போது ஆளுநராக வேறு பொறுப்பேற்றிருக்கிறார். அப்படிப் பொறுப்பேற்றவர் இதுவரையில் தான் எப்படிச் செயற்படுவேன் என்பதைச் சொல்லவேயில்லை என்பது பலருக்கும் கேள்விகளை உருவாக்கியுள்ளது.

ஆனால், இப்பொழுது இந்தப் பதவியானது ஹிஸ்புல்லாவுக்கு வழமையை விட வேறான பொறுப்பை அனுபவத்தையும் அடையாளத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படிக்  கொடுக்க வேண்டும். அவர் அதற்கு ஏற்பத்  தன்னை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது யதார்த்தமும் சூழலும். தற்போது ஏற்பட்டுள்ள அரிய சந்தர்ப்பத்தை ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஹிஸ்புல்லா செயற்படுவாராக இருந்தால் எதிர்காலத்தில் அவர் இந்த நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுவார். இதுவரையான அவருடைய அனுபவமும் சேவைப்பரப்பும் முஸ்லிம் சமூகத்தையே கூடுதலாக மையப்படுத்தியதாக இருந்தது. தமிழ், சிங்களச் சமூகங்களுக்கு அவர் சேவைகளைச் செய்திருந்தாலும் அவருடைய அடையாளம் காத்தான்குடி ஆள் என்ற அளவில் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதைக் கடந்ததாகவே இந்த ஆளுநர் நியமனம் அவருக்குக் கிடைத்துள்ளது. இதை வைத்துக்கொண்டே கிழக்கின் புதிய சூழலை அவர் உருவாக்க வேண்டும். அந்தப் பொறுப்பும் சவாலும் அவருக்குரியதாகிறது.

கிழக்கு மாகாணத்தின் சமூகவியற் சூழலும் அது உருவாக்கியிருக்கும் உள நிலைகளும் வேறானவை. அங்கே தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்கள் வெவ்வேறு உணர்நிலைகளில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் யுத்த காலத்தைப்போல இன்று அதிக இடைவெளியோ அதிக முரண் நிலையோ அங்கு இப்போதில்லை. அல்லது அது வெளித்தெரியவில்லை.

தவிர்க்க முடியாத நிலையில் இந்த மூன்று சமூகங்களும் இணைந்து வாழ வேண்டிய யதார்தமும் உண்மையும் உண்டு. இதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் உரியது. இதற்கான ஏதுநிலைகளை உருவாக்குவதில் பல்கலைக்கழகம் போன்ற கல்வி மையங்களுக்கும் ஊடகங்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் பங்குண்டு. முக்கியமாக இலங்கையின் எதிர்கால அரசியலுக்கான பயிற்சிக் களமாக கிழக்கு மாகாணமே உள்ளது என்று கூறலாம். அங்கேதான் மூவினச் சமூகங்களும் போட்டியாகவும் பரவலாகவும் பங்கேற்பாளர்களும் உள்ளனர். ஆகவே கிழக்கில் ஒரு நல்லுறவு நிலையும் சமனிலையும் ஏற்படுமாக இருந்தால் அது நாடு முழுவதுக்கும் முன்மாதிரியாக இருக்கும்.

இதைப்போன்றதே வடக்கிற்கான ஆளுநர் நியமனமும் இன்னொரு வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2009 யுத்தம் முடிந்த கையோடு வடக்கிற்கான ஆளுநராகச் செயற்பட்டவர் முன்னாள் இராணுவ உயரதிகாரி ஜீ.ஏ. சந்திரசிறி. அதற்குப் பிறகு பளிகக்கார செயற்பட்டார். பிறகு றெஜினோல்ட் கூரே.

ஜீ.ஏ. சந்திரசிறியின் காலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் நடக்கவில்லை. ஆகவே அவர் தன்னுடைய ஆளுகையின் கீழ் வடக்கின் நிர்வாகத்தை நடத்தினார். அவருடன் இணைந்து அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டார். மாகாணசபைத் தேர்தல் நடந்து விக்கினேஸ்வரன் தலைமையிலான மாகாணசபை நிர்வாகம் செயற்படத் தொடங்கியபோது ஜீ.ஏ. சந்திரசிறிக்கும் மாகாணசபைக்கும் இடையிலான மோதல்கள், முரண்கள் ஏற்பட்டன. இதனால் ஜீ.ஏ. சந்திரசிறி விலக வேண்டியேற்பட்டது.

அதற்குப் பிறகு ஆளுநராகப் பொறுப்பேற்ற பளிகக்கார நல்லெண்ணத்தை உருவாக்கும் விதமாக ஆளுநர் நிதியையே வடமாகாணசபைக்கு ஒதுக்கினார். மாகாணசபை நிர்வாகத்தில் தலையிடாமல் வெகு தொலைவில் ஒதுங்கியிருந்தார்.

ஆனாலும் அவரைச் சூழல் விட்டு வைக்கவில்லை. வடமாகாணசபையின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் தவறுகளும் ஊழலும் மக்களைச் சலிப்படைய வைத்தபோது அவர்கள் ஆளுநரிடம் முறைப்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். ஆளுநரிடம் நீதியையும் உதவிகளையும் எதிர்பார்த்தனர்.

மாகாணசபை நிர்வாகத்தில் தலையீடு செய்ய மாட்டேன் என்று தூரத்தில் விலகி நின்ற பளிகக்காரவுக்கு இது நெருக்கடியாகியது. என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அவர் குழப்பத்திற்குள்ளானார். ஒரு கட்டத்தில் அவராகவே அந்தப் பொறுப்பிலிருந்து விலகி விட எண்ணினார். இதை அப்பொழுது அவர் தனக்கு நெருக்கமான பலரிடம் துக்கம் தோயச் சொல்லியிருக்கிறார்.

அவருக்குப் பிறகு வந்த றெஜினோல்ட் கூரேயும் அதிக சர்ச்சையில்லாமல் ஆளுநராக மாகாண நிர்வாகத்தை நடத்தினார். இதுவரை நடத்திவருகிறார். மாகாணசபையின் அமைச்சர்கள் நியமனம், ஊழல் விவகாரம், முதலமைச்சரின் மீதான வழக்கு போன்ற நெருக்கடிகளில் கூட றெஜினோல்ட் கூரே கடுமையான நிதானத்தைக் கடைப்பிடித்தார் என்றே சொல்ல வேண்டும். நெருக்கடிகளைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் மக்களுடன் அவர் ஐக்கியமாக முயற்சித்தார். அதில் அவர் கணிசமான வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இதற்குக் கூரேயின் அணுகுமுறைகளும் அவருக்குத் தமிழ் பேசத்தெரியும் என்பதும் ஒரு காரணமாகும். இன்னொரு காரணம், அவர் முன்பு மேல்மாகாணசபையின் முதலமைச்சராக இருந்தமை. இவையெல்லாம் அவருக்கு மாகாணசபையின் நிர்வாகத்தைப் புரிந்து கொண்டு செயற்படவும் தமிழ் மக்களுடன் நெருங்கவும் வாய்த்தது. இதனால் அவருக்கு வடக்கில் நன்மதிப்பு அதிகரித்தது.

இதைப்போல இனி வரப்போகின்ற ஆளுநரும் செயற்படுவாரா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு நிச்சயமாக மாகாணசபைத் தேர்தல் வரவுள்ள சூழல் உண்டு. அப்பொழுது தேர்வு செய்யப்படுகின்ற மாகாணசபை நிர்வாகத்தோடு முரண்படாத, ஒருங்கிணைந்து செயற்படக்கூடிய மனப்பாங்கும் செயற்திறனும் உள்ள ஒருவரே ஆளுநராக வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் நியமனங்கள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படுகின்றவை என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதையெல்லாம் கவனத்திற் கொண்டு பொருத்தமான ஆளுமையைத் தெரிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பல பரிந்துரைகள் ஜனாதிபதிக்குச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யார் புதிய ஆளுநராக வரவுள்ளார் என்பது வடக்கின் இன்றைய பெருங் கேள்வியாகும்.

ஒன்பது மாகாணங்களுக்குமான ஆளுநர்களின் நியமனத்துக்கும் மாகாணசபைத் தேர்தலுக்கும் கூட ஒற்றுமை உண்டு என்று கூறுவோரும் உண்டு. அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான களச் சூழலை உருவாக்கும் விதமாக இந்த ஆளுநர் நியமனங்கள் உள்ளன என்பது அவர்களுடைய அபிப்பிராயமாகும்.

ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் எல்லாத் தளங்களிலும் புதிய உள்ளடக்கங்களும் புதிய மாற்றங்களும் அவசியம் என உணரப்படுவதால்தான் இந்த மாற்றங்களும் புதிய நியமனங்களும் என்று கூறுவோரும் உண்டு.

எப்படியோ ஒரு வாரத்திற்குள் (சிலவேளை அடுத்த கணத்திற்குள்) புதிய ஆளுநர்கள் யாரென்று தெரிந்து விடும். மாகாண நிர்வாகங்களை சிறப்பாக இயக்குவதற்கும் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையிலுள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும் மத்தியிலிருந்து மாகாணத்திற்கு அதிகாரத்தை வழங்குவதற்கும் ஆளுனர்களின் செயற்பாடுகள் பெரும் பங்கை வகிக்கக் கூடியன.

இது மாறி நடந்தால் மாகாண சபை நிர்வாகமே கெட்டழிந்து விடும். மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையிலான முரண்பாடுகளும் இடைவெளியும் அதிகரிக்கும்.

எல்லாம் ஜனாதிபதியின் கைகளிலும் ஆளுநர்களின் கைகளிலும்தான் தங்கியுள்ளன.

Share:

Author: theneeweb