குற்றத்தை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கோரிய பூஜித் ஜயசுந்தர

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று (01) மதியம் கைது செய்யப்பட்ட, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று மாலையே பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராகப் பணியாற்றியவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறித்த மின் தூக்கி செயற்பாட்டாளராகப் பணியாற்றியவரை அச்சுறுத்திய காணொளி அப்போது சமூக ஊடகங்களில் வெளியானது.

அந்த சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் திகதி நடைபெற்றதாக அறியமுடிகின்றது.

சம்பவத்தை எதிர்கொண்ட ஏ.எம்.சமரகோன் என்பவர் குறித்த அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்று சென்ற பின்னர் கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதத்தில் பதில் பொலிஸமா அதிபராக கடமையாற்றியவரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதன்போது பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் பதிவாகியிருந்த குறித்த காணொளியை பூஜித் ஜயசுந்தரவிற்கு காண்பித்ததாகவும் அதற்கு அவர் குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோருவதாக கூறியுள்ளார்.

இதன் பின்னர் சந்தேக நபரான பொலிஸ்மா அதிபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட சந்தேக நபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றம் மத்தியஸ்த சபையில் விசாரிக்கப்பட வேண்டியது ஆதலால் அவருக்கு பிணை வழங்குமாறும் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும் சந்தேக நபர் வேறு விதத்தில் இந்த குற்றத்தை புரிந்தாரா என்பது பிரச்சனைக்குரியது எனவும் பிரதிவாதியின் பிணைக் கோரிக்கையை நிராகரிக்கும் அளவுக்கு மனுதாரர்கள் தரப்பில் விடயங்கள் முன்வைக்கப்படவில்லை என கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க அறிவித்தார்.

இதற்கமைய கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இரண்டு இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் எட்டாம் திகதி வரை ஒத்தி வைப்பதாகவும் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.

Share:

Author: theneeweb