சமயலறை – புதிய பண்பாட்டுக்கான வாசல் – ஸர்மிலா ஸெய்யத்

சமையலறை இல்லாத வீடு இருக்கவே முடியாது. ஒவ்வொரு வீட்டினதும் சமையலறை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில பெரியதாக. சில குறுகலாக. சில அலுமாரிகளும் இலத்திரனியல் சமையல் உபகரணங்களும் பொருத்தப்பட்ட நவீனமானதாக. நவீனம் என்றில்லாவிட்டாலும் கணிசமான இலகு இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டதாக. எப்படியோ எல்லா வீட்டிலுமோர் சமையலறை உண்டு.

ஒரு படுக்கையறைக்கோ, வரவேற்பறைக்கோ, ஏன் குளியறைக்கோ தரும் முக்கியத்துவத்தைவிடவும் குறைந்தளவான கவனிப்புடன் நிர்மாணிக்கப்படுகின்றவைதான் பெரும்பாலும் இந்த சமையலறைகள். கட்டட பணியாளர்களும், பொறியியலாளர்களும்கூட சமையலறை எனும்போது கொஞ்சம் இளக்காரமான போக்குடன்தான் நிர்மாணிக்கிறார்கள். குறிப்பாக ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியாவில் இந்த சமையலறையின் தலைவிதி ஒரே மாதிரித்தான்.

சமையலறை பெண்களுக்கான இடம் என்பது எழுதப்படாத பொது விதி. காற்றோட்ட வசதியற்ற குறைந்தபட்சம் ஒரு மின் விசிறிகூட இல்லாத சமையலறையின் புழுக்கத்தில் நின்று பெண்கள் சமைத்த உணவுகளை மண்டப உணவு மேசையில் சௌகரியமாக அமர்ந்து ஆண்கள் சாப்பிடுகின்ற காட்சி நம்மை எப்போதுமே உறுத்துவதில்லை. ஏனென்றால், பெண்கள் அவர்களது கடமையைச் செய்கிறார்கள்.

பெண்ணியச் செயற்பாட்டாளர் குமியின் வீட்டின் சமையலறைதான் முதன் முறையாகச் சமையலறை பற்றி என்னை யோசிக்கச் செய்தது. அந்த வீட்டுச் சமையலறை வரவேற்பு மண்டபத்தோடு மண்டபமாக இருக்கும். நடுவில் ஒரு தடுப்புச் சுவர் கூட இல்லை. விருந்தாளிகளுடன் உரையாடிக் கொண்டே அவர் தேநீர் தயாரிப்பார். உட்கார்ந்திருக்கத் தோன்றாமல் நானும் அவருடன் நின்று தேநீர் கோப்பையைக் கழுவியோ, சாப்பிட்ட தட்டைக் கழுவியோ பங்களித்திருக்கிறேன்.

இப்படியொரு சமையலறை ஏன் எங்கள் வீட்டில் இல்லாமல் போனது என்று தோன்றியது. விருந்தாளிகள், உறவினர்கள் வந்தால் சதாவும் சமையலறையிலேயே கிடந்து புழுங்கும் உம்மாவை நினைத்துப் பார்த்தேன். அவருக்குப் பெரும்பாலும் உறவினர்களுடன் உரையாடுவதற்குக் கூட நேரம் கிடைக்காது. நேரத்திற்கு உணவும், பணியாரங்களும் தேநீரும் என்று தயாரித்து மண்டபத்திற்கு அனுப்பிக் கொண்டே இருப்பார். அவருக்கு உதவியாகவும் பெண்கள்தான் இருப்பார்கள்.

இந்த சமையறைக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் பற்றி நிறையச் சொல்லலாம். வீட்டின் ஓர் மூலையில் நிர்மாணிக்கப்படும் சமையலறைகள் பெண் அடிமைக் குறியீடுகள். பெண்களின் வேலை சமைப்பது என்றாக்கி அவர்களை அடுப்படியிலேயே கிடக்கப் பண்ணுவதுதான் இந்த சமையலறைகள்.

இப்போதெல்லாம் நகர்ப் புறங்களில் மாடிவீடுகள் வானை முட்ட நிமிர்ந்து நிற்கின்றன. இந்த அடுக்கு மாடி வீடுகள் மண்டபத்தோடு சமையலறையையும் சேர்த்தாற்போல நிர்மாணிக்கின்றன. இந்த சமையலறைகளின் நோக்கம் பெண்களை அடுப்படியிலிருந்து விடுவிப்பதல்ல. இடப்பற்றாக்குறையும் சொகுசும்தான் இதன் நோக்கம். இந்த வகை சமையலறை கூட பெண்களுக்குச் சுமைதான். மண்டபத்துடனேயே இருப்பதால் சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். பாத்திரங்களை அங்கங்கு, அப்படியே போட முடியாது. எந்த வேலையையும் தள்ளிப்போடமுடியாது. யாராவது விருந்தினர்கள் வருகிறார்கள் என்றாலே வயிறு கலங்கத் தொடங்கிவிடும். வேலைக்குப்போகும் பெண்கள் என்றால் இந்த மாதிரி அவஸ்தைகள் தவிர்க்கவே முடியாததாகின்றது.

என்னதான் தீர்வு? சமையலறையை வீட்டினோர் மூலையில் ஒதுங்கினாற்போல யார் கண்ணிலும் படாதபடி கட்டினால் பெண்ணடிமைத்தனக் குறியீடு, மண்டபத்தோடு இருந்தாலும் பெண்களுக்கு அவஸ்தை! மொத்தத்தில் ஒரு சமையலறை எப்படித்தான் இருக்கணும்?

இங்கு பிரச்சினை சமையலறை மட்டுமல்ல, சமைப்பது பெண்களின் வேலை என்பதும்தான். சமையலறையை மண்டபத்தோடு நிர்மாணித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்ணேதான் சமையலும் செய்து பரிமாறி, அதனைச் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகம். அதிகம் மட்டுமல்ல. அநீதி.

சமையல் பெண்களின் வேலை என்பதிலிருந்து இந்த உலகம் வெளியேற வேண்டும். ஆண்கள் வெளியேற வேண்டும். பெண்களும் குடும்பங்களும் வெளியேற வேண்டும். கக்கூசுக்குப் போய்விட்டு தன்னைத் தானே எப்படிக் கழுவிக் கொள்கிறோமோ, அப்படியே பசியெடுக்கின்ற ஒவ்வொருவரும் தானே சமைக்கவும் வேண்டும். மொத்த குடும்பத்திற்குமாக ஒரு பெண் தன்னந்தனியாக நின்று சமைப்பதெல்லாம் ஆயுள் தண்டனைக்குச் சமன்.

சில வீடுகளில் சமைக்கக்கூடிய ஆண்களாக இருந்தாலும் பெண்கள் அவர்களை ஓரங்கட்டுவார்கள். ”நீங்களா, ஐயையோ”! என்று பதறுவார்கள். இந்தப் பதட்டத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வெறும் முட்டையை அவிப்பதற்கே நாலைந்து பாத்திரத்தை இழுத்துப் போட்டு முழுக் குசினியையும் அவர்கள் அல்லோலகல்லோலப்படுத்தி விடுவார்கள் என்பது. மற்றையது, ”நீங்கள்லாம் சமைக்கக்கூடாது. யாராவது பார்த்தால் என்ன சொல்வார்கள்” என்ற சுத்த பேதமைத்தனம். யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை! அப்படியே சொன்னாலும் சொல்லிட்டுப் போகட்டும் என்ற நிலைக்குப் பெண்கள் வந்தாக வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்பு கட்டார் நாட்டிலிருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த நண்பனோடு பேசிக் கொண்டிருந்தபோது சொன்னான். அவனுக்கு சமைப்பது பிடிக்குமாம். கட்டாரில் அறையொன்றில் தானே சமைத்துத்தான் சாப்பிடுகிறானாம். ஆனால் இங்கு வந்து சமையலறைக்குள் போனாலே மனைவியும் மாமியாரும் பின்னாலேயே ஓடிக் கொண்டு வந்து, ”என்ன வேணும், என்ன செய்யப் போறீங்க, எங்களைக் கேளுங்க, நீங்க ஏன் இதெல்லாம் பண்ணிக்கிட்டு” என்று வறுத்தெடுக்கிறார்களாம்.

இப்போதெல்லாம் முகநூலைத் திறந்தால், வாரத்திற்கு ஒரு காட்சியாவது கண்ணில்படுவது, ஆண்கள் நண்பர்களோடு கூட்டாகச் சேர்ந்து ஊர் எல்லைகளில் ஆற்றங்கரையோரங்களில், கடற்கரைகளில் சோறாக்கிச் சாப்பிட்டு மகிழ்ந்த படங்கள்.

ஆண்களால் நிச்சயமாக திறமையாகச் சுவையாகச் சுத்தமாக எல்லாம் சமைக்க முடியும். அது பெண்களின் வேலை மட்டுமே இல்லை. வீடுகளில் ஆண்களும் பெண்களும் ஒன்றாகச் சேர்ந்து சமைக்கும் ஒரு சமையல் கலாசாரத்தை இந்தத் தலைமுறையிலிருந்தாவது உருவாக்கவேண்டும். சமையல் ஒரு கலை, அது அனைவரினதும் வேலை, எல்லோரும் தெரிந்திருக்கவேண்டிய ஒன்று என்ற தெளிவோடு குழுந்தைகள் வளர இந்த சமையல் கலாசாரம் ஒரு வழியாக அமையும். வீடுகளில் எப்போதும் சிறுமிகளையும் பெண் பிள்ளைகளையும் மட்டும் கூப்பிட்டுக் குசினி வேலைக்குப் பணிப்பதை தாய்மார் நிறுத்த வேண்டும். பையனை தொலைக்காட்சி பார்க்க விட்டுவிட்டு மகளைக் கூப்பிட்டு தேங்காய் துருவத் தருவதை தாய்மார் மறுபரிசீலனை செய்யவேண்டும். பையன் தேங்காய் துருவினால் ஆணுறுப்புக்கு எந்தச் சேதமும் வராது. பெண் துருவுவதுபோலவே ஆண் துருவினாலும் தேங்காய் ஆகும். ஒரு கேடும் குறைவும் வராது.

பழைமையான சமையலறைகளை மட்டும் மாற்றினால் போதாது. சமையலறைகளை மண்டபத்திற்குள் கொண்டுவந்துவிட்டால் மட்டும் மாற்றம் வராது. சமையல் கலாசாரமொன்று வேண்டும். அது அனைவரினதும் வீட்டுப்பணியாக மாறவேண்டும். வீட்டுப்பணிகள் எதுவுமே யாருக்கும் தனியுரிமையானதல்ல. அது ஒட்டுமொத்தக் குடும்பத்தினதும் கூட்டுப்பணி. கூட்டுப்பணி செய்யும் கலாசாரம் மூலமாக குடும்பங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேணவும், தனிநபர்களின் கௌரவங்களை உறுதி செய்யவும் முடியும்.

  

Share:

Author: theneeweb