தற்போது சுயதொழில்துறை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளது

வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்களின் ஊடாக கிடைக்கும் பணத்தின் மூலமே நாட்டில் அனைத்து விடயங்களும் தீர்மானிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுயதொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ´எமது அரசாங்கத்தில் சுயதொழிலாளர்களுக்கு பாரிய வேலைத்திட்டங்கள் முன்னேடுத்துள்ளோம். ஆனால் தற்போது சுயதொழில்துறை பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளது. சகலருக்கும் அரச உத்தியோகம் கிடைப்பதில்லை. அதனால் அரசாங்கத்திற்கு சுமையாக இல்லாது வாழும் சுயதொழில் முயற்சியாளர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

அரசாங்கம் செய்யும் எல்லாவற்றிலிருந்தும் மக்களே துன்பப்படுகின்றனர். தேர்தல் காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

தற்போது வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்களின் ஊடாக கிடைக்கும் பணத்தை கொண்டே அனைத்து விடயங்களும் தீர்மானிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சட்டவாட்சி தற்போது சீர்குழைந்துள்ளது. கடந்த காலங்களில் வழக்கு தாக்கல் செய்தமைக்கான காரணங்கள் தற்போது வெளிவந்துக் கொண்டிருக்கின்றது.

சம்பந்தப்பட்டவர்கள் வழங்கும் தகவல்களைப் பார்க்காமல் அவர்களை பணியில் இருந்து நிறுத்தும் அளவிற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என்றார்.

Share:

Author: theneeweb