யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் தாங்கள் அல்ல..

யுத்தத்தில் தமிழர்களை தாங்கள் கொன்றதாக கூறப்படுவது தவறான கருத்து என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எங்கள் எதிர்காலம் எங்கள் கரங்களில் என்ற தொனிப்பொருளில் பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மலையக இளைஞர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை ஆரம்பித்தவர்கள் தாங்கள் அல்ல.

அதனை முடிவுக்கு கொண்டுவந்தவர்களே தாங்கள் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால் தங்கள் மீதே பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இது சிலரது அரசியல் தேவைப்பாடுகள் என்பதை அறிந்துக்கொள்ள முடிகின்றது.

அவர்களே தமிழ் மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை முன்வைக்கின்றனர் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

யுத்தம் தொடர்ந்தும் நீடித்திருந்தால் அதனால் பாரிய அழிவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும்.

எனினும் அதனை தம்மால் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.

இதன்மூலம் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி குறித்த சிந்தித்தும் செயலாற்ற முடிந்தது.

இதனிடையே, பெருந்தோட்டத்துறை தொடர்பில் வேறுமுறையில் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேயிலைத் துறையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது.

ஆயிரம் ரூபா, 50 ரூபா என்று கடந்த காலங்களில் வேதன உயர்வு கோரப்பட்டது.

எனவே, அவர்களுக்கு சிறந்ததும், அதிகளவானதுமான வருமானத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக பொருளாதாரத்தை எவ்வாறு சீரமைப்பது என்பது தொடர்பில் அரசாங்கம் என்ற அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் மலையக மக்களின் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் தொடர்பில் சிறந்த திட்டங்களை மேற்கொண்டு அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்குமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்;பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தநிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே பெருந்தோட்ட பகுதி வாழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு இதுவரை உரிய வகையில் பெற்று கொடுக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

Share:

Author: theneeweb