பொறுப்புக்கூறலிருந்து தப்பித்தல் – – கருணாகரன்

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் மக்கள் பேரவை, நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்புகள் கொள்ள வேண்டிய நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக சுயாதீனக்குழுவொன்றை உருவாக்கியுள்ளது. இந்தக்குழு முதற்கட்டமாக அரசியற் கட்சிகளுடன் பேசத் தொடங்கியுள்ளது. முதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனைச் சந்தித்துப் பேசியிருக்கிறது. தமிழ் மக்கள் தெரிவு செய்யக் கூடிய நிலையில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்பதால், இந்தத் தேர்தலைக் குறித்து தமிழ்த்தரப்பு மிகப் பொறுப்பாகச் சிந்திக்க வேண்டும். எழுந்தமானமாகவோ, குறுகிய நோக்கிலோ தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, நலன்சார்ந்தோ முடிவுகளை எடுக்காமல், கடந்தகாலப் படிப்பினைகளைக் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். 2005, 2010, 2015 ஆகிய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ்த்தரப்புகள் எடுத்திருந்த தீர்மானங்கள் மிகத் தவறானவை என்பதை கடந்த காலப்படிப்பினைகள் தெளிவாகவே காட்டியுள்ளன. ஆகவே அந்தப் படிப்பினைகளைக் கொண்டு இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்ச்சமூகத்தின் நியாயத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ளக் கூடிய ஏதுநிலையை அல்லது வலியுறுத்தலைச் செய்ய வேண்டும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணக்கூடிய – தீர்வை முன்வைக்கக் கூடிய – தரப்பை ஆதரிப்போம் என்பதை உணர்த்த வேண்டும். இல்லையெனில் இந்தத் தேர்தலில் தமிழ்த் தரப்பு தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டியேற்படும் என்பதைக் கூற வேண்டும். இலங்கை அரசியற் களத்தில் சர்வதேச நாடுகளின் நலன்களும் தேவைகளும் நிறைந்திருப்பதால், அவையும் இந்த விடயத்தில் அக்கறைப்படக்கூடிய சூழல் உண்டு. அந்த அக்கறையில் இடையீட்டைச்செய்யக் கூடிய அளவுக்குத் தமிழ்த்தரப்பின் அரசியல் முன்னெடுப்புகள் அமைவது நல்லது. அதுவும் இல்லை என்றால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் என்ன என்பதை ஒரு முன்வரைவாக முன்வைத்து வேட்பாளர்களுடன் பேசலாம் என சம்மந்தனிடம் இந்தக் குழுவினர் கேட்டுள்ளனர்.

இதையெல்லாம் அமைதியாகவே காது கொடுத்துக் கேட்டிருக்கிறார் சம்மந்தன். எல்லாவற்றையும் கேட்டவர், “நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருக்கிறோம். உரிய நேரத்தில் பொருத்தமான முடிவை எடுப்போம். நீங்கள் எடுக்கின்ற இந்த முயற்சி நல்ல விசயமே. மேலும் தொடருங்கள்” என்று வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்.

இவ்வாறான பதில்தான் சம்மந்தனிடமிருந்த வரும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். சிலவேளை இந்தக் குழுவில் இருப்பவர்களுக்கு இது அதிர்ச்சியையோ ஆச்சரியத்தையோ கொடுக்கக் கூடும். மற்றப்படி ஒன்றும் பொதுவெளிக்கு இது ஒன்றும் புதினமல்ல.

ஏனெனில் சம்மந்தனும் அவர் தலைமைத்துவம் செய்யும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எப்பொழுதும் இதே மனநிலையில்தான் எதையும் அணுக முற்பட்டதை கடந்த கால வரலாறு சொல்லும். இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் பொறுப்புடன் நடந்ததுமில்லை. எதற்கும் பொறுப்பேற்றதுமில்லை. பொறுப்புக்கூறியதுமில்லை. இனிமேலும் அது அப்படித்தான் எதற்கும் பொறுப்புக் கூறப்போவதில்லை.

அப்படிப் பொறுப்புக் கூறவேண்டிய ஒரு நிலை உள்ளது என்று உணரும்போதே யாரும் பொறுப்பாகச் சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இல்லையெனில் இந்த மாதிரி ஏளனமாகவும் எதேச்சையாகவும் தந்திரமாகவுமே பதில் சொல்ல வரும்.

சம்மந்தனிடம் பொறுப்புக் கூறக்கூடிய மனப்பக்குவம் இருந்திருக்குமானால், அவர் தன்னுடைய அரசியற் தவறுகளுக்கான பொறுப்பை எப்போதோ ஏற்றிருப்பார். குறைந்த பட்சம் தற்போதைய அரசாங்கத்தின் தமிழ்ச்சமூகம் மீதான தவறுகளுக்கு உடந்தையாக நிற்க மாட்டார். அப்படிப்பொறுப்புக் கூறும் ஒரு சூழலில்தான் இந்த ஜனாதிபதித் தேர்தலையும் பொறுப்புடன் அவர் அணுக முற்படுவார். அதாவது தன்னுடைய அரசியல் வழிமுறையை இந்த மாதிரி மோசமான முறையில் மக்கள் நலனுக்கு எதிராகத் தொடர்ந்து கொண்டிருக்க மாட்டார்.

ஆகவே இந்தச் சந்திப்பில் வழமையான பாணியிலேயே சம்மந்தனுடைய அணுகுமுறையும் பதிலும் இருந்துள்ளது. முதலில் தன்னைச் சந்திக்க வருகின்றவர்களை எதிர்த்துப் பேசாமல், விளக்கங்களைச் சொல்லாமல் தாராளமாகப் பேச விடுவது. இதன் மூலம் அவர்களின் உளநிலையை ஆற்றுப்படுத்தி வென்றெடுக்க முயற்சிப்பது. நாங்கள் சொல்லுகின்ற எல்லாவற்றையும் பெரியவர் அமைதியாகக் கேட்கிறார். ஆகவே சாதகமாகத்தான் மனிதர் சிந்திக்கிறார் போலுள்ளது என உணர வைப்பது. பிறகு தன்னுடைய நிலைப்பாட்டின்படியே விடயங்களை முன்னெடுப்பது அல்லது கையாள்வது.

இப்பொழுதும் அவர் அப்படித்தான் செய்துள்ளார். நீங்கள் போங்கள். நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என்றவாறாக. இது ஒரு வகையில் அவமதித்தல்தான்.

உண்மையில் சம்மந்தன் செய்திருக்க வேண்டியது என்னவென்றால், இந்தக் குழுவினரின் செயற்பாடுகளை ஆதரித்துக் கொண்டு, ஏனையோரையும் ஒன்று சேருங்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பொது உடன்பாட்டுக்கும் பொதுக்கோரிக்கைக்கும் செல்லக் கூடிய நிலையை உருவாக்குங்கள். எல்லோருமாக இணைந்து நின்று ஜனாதிபதித் தேர்தல் மூலமாகத் தமிழ்ச்சமூகத்துக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் இக்கட்டான நிலையைக் கடக்க முடியும் என்பதை வலியுறுத்திக் கேட்டிருக்க வேண்டும்.

அது சம்மந்தனுக்கும் இலகுவான – அவசியமான – ஒன்றாகும். ஆனால், அதை அவர் கேட்கவில்லை. ஏனெனில் கூட்டமைப்பானது சனங்களின் நிலை நின்று சிந்திக்கவில்லை. அது தனக்கென வகுத்து வைத்திருக்கும் தனியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுவதால் அவருக்கு வேறு எதைப்பற்றியும் எவரைப்பற்றியும் அக்கறையில்லை. எதுவும் எவரும் பொருட்டுமில்லை.

ஆகவே சம்மந்தன் தரப்புத் தன்னுடைய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படவுள்ளது. தீர்மானங்களை எடுக்கப்போகிறது.

இதற்குப் பிறகு இந்தக் குழு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சந்தித்துப் பேசியுள்ளது. அப்பொழுது தனியாக ஒரு வேட்பாளரைத் தமிழ்த்தரப்பு நிறுத்த வேண்டும் என்ற குழுவின் யோசனையை சுரேஸ் பிரேமச்சந்திரன் நிராகரித்திருக்கிறார். பதிலாக இந்தத் தேர்தலை எப்படி அணுக வேண்டும். எதிர்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆராய்ந்து ஒரு கூட்டு முடிவை அல்லது பொதுத் தீர்மானத்தை எட்டுவதற்கான பங்களிப்பைத் தமது தரப்பு தாராளமாக வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளார். கூடவே, இதைக்குறித்த தமது கட்சியின் எண்ணப்பாடும் அவதானிப்புகளும் எப்படி உள்ளன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். மனந்திறந்த நிலையில் உரையாடல்கள் நடந்தன என்று பேரவையின் சார்பிலான குழுவைச்சேர்ந்தவர்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்தோரும் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் இந்தக் குழு ஏனைய அரசியற் கட்சிகளைச் சந்திக்கக் கூடும். இதேவேளை இந்தப்பத்தியை எழுதிக்கொண்டிருக்கும்போது யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் அரசியற்கட்சிகள் சிலவற்றை அழைத்து ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ்த்தரப்பினர் எதிர்கொள்வதைப்பற்றி ஒரு பேச்சை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளில் மாணவர் ஒன்றியம் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியவை கலந்து கொண்டன. இதில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் குறித்த எழுத்து மூல நிபந்தனையை விதிப்பது. அல்லது தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவது. அதுவும் சாத்தியப்படவில்லை என்றால் தேர்தலை நிராகரிப்பது. இதையெல்லாம் பற்றி விரைவாகப் பேசி முடிவுக்கு வரவேண்டியுள்ளதால், ஒவ்வொரு கட்சியிலிருந்தும் இரண்டிரண்டு பேரைக் கொண்டதொரு குழுவை நியமித்து தீர்மானத்தை வரைவதைப்பற்றிப் பேசப்பட்டது.

இதுவும் ஒப்புக்குச் செய்யப்படும் ஒரு விசயமாகவே மாறவுள்ள சாத்தியங்கள் அதிகமுண்டு. பல்கலைக்கழக மாணவர்களைப் புறக்கடிக்க முடியாது என்ற நிலையில்தான் பல கட்சிகளும் கலந்து கொண்டுள்ளனவே தவிர வேறொன்றுமில்லை.

இதைப்போன்று தமிழ்த்தரப்பின் கூட்டுத்தீர்மானத்துக்கான முன்னெடுப்பை அல்லது தமிழ்த்தரப்பின் மீது மக்கள் நலன் நோக்கிலான அழுத்தங்களைக் கொடுக்கும் விதமாக ஒரு ஏற்பாட்டைச் செய்வதற்கு இன்னொரு முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ் அரசியற் தரப்பில் அபிப்பிராய உருவாக்கிகளாகச் செயற்படுவோர் மூலம் இதைச் சாத்தியப்படுத்தும் எண்ணத்தோடு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி இன்னும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது இலங்கை அரசியலில் உள்ள பொறுப்பின்மையும் பொறுப்புக்கூறல் அற்ற உணர்வும்தான். இதுவே எல்லாத் தவறுகளுக்கும் அடிப்படைக் காரணம். ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள அத்தனை சிங்கள வேட்பாளர்களும் தாம் சிங்களச் சமூகத்தின் பிரதிநிதிகள் என்ற உணர்வோடுதான் செயற்படுகிறார்கள். அல்லது அப்படித்தான் சிந்திக்கிறார்கள். இது அவர்களுடைய பொறுப்பின்மையையும் பொறுப்புக்கூறாமையுமே வெளிப்படுத்துகிறது. அதிலும் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ, ஜே.வி.பியின் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க ஆகிய மூவரும் கடந்த கால அரசியலுக்கு நிறையவே பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

இதைப்போன்றே தமிழ்த்தரப்பிலும் அனைவரும் பொறுப்புக் கூறலைச் செய்ய வேண்டியவர்கள். அப்படிப் பொறுப்புக் கூறலைச்செய்ய வேண்டிய ஒரு நிலை இருந்தால் நிச்சயமாக நிதானமாகச் சிந்திக்கும் தன்மை ஏற்படும். இது தவறுகளைக் குறைக்கும். இந்தத்தன்மை இல்லாத காரணத்தினால்தான் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் தேர்தலில் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு முன்பே முண்டியடித்துக் கொண்டு, நானும் ரவுடிதான் என வடிவேலுவின் பாணியில் அரசியலை நகைச்சுவையாகச் செய்ய விளைந்துள்ளன. ஆனால், இது சிரித்துப் பம்பலடிக்கக் கூடிய விசயமல்ல. இது தலைகளை வைத்து விளையாடப்படும் சதுரங்கம். வேட்டைக்களம். அரசியல் மேடை.

இந்த இடத்தில் நாம் பொதுவான ஒரு கேள்வியையும் எழுப்ப வேண்டும். இது எல்லாத் தரப்புகளுக்குமுரியது. “இலங்கை அரசியலில் “பொறுப்புக் கூறல்” என்ற மிக முக்கியான விசயம் எந்த அளவுக்குச் சாத்தியமாகியுள்ளது?” என்பதே இந்தக் கேள்வி.

இந்தக் கேள்வியை எவரும் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ஏனென்றால், பொறுப்புச் சொல்ல வேண்டிய அரசியற் தவறுகளை நாட்டிலுள்ள அத்தனை அரசியற் தரப்புகளும் கொண்டுள்ளன. இதில் சிங்களத் தரப்பு, அரசாங்கம், முஸ்லிம்கள், தமிழர் தரப்பு, இயக்கங்கள், ஜே.வி.பி என்ற வேறுபாடுகள், பேதங்கள் எதுவும் கிடையாது. அனைவரும் பொறுப்பாளிகள். அனைவருக்கும் பொறுப்புண்டு. சில தரப்புகள் விகித வேறுபாடுகளில் வித்தியாசப்படலாம். ஆனால், எவரும் இதைத் தட்டிக்கழித்துத் தப்பி விட முடியாது.

ஆனால், இவை எவையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பொறுப்புக் கூறலைச் செய்ததில்லை. மட்டுமல்ல, இப்பொழுது கூடச் செய்யத் தயாரில்லை. எதிர்காலத்தில் தமது தவறுகளை உணர்ந்து பொறுப்புக் கூறலைச் செய்யவோ, தவறுகளிலிருந்து விடுபடவோ தயாராக இல்லை. இதை அவற்றின் சமகால நடத்தைகளும் நடவடிக்கைகளும் தெளிவாகவே காட்டுகின்றன. எனவே இந்த நிலையில் மக்களாகிய நாம் எடுக்கப்போகின்ற தீர்மானங்கள் என்ன? எதிர்காற்றில் பட்டத்தை ஏற்றப்றாமபோகிறோமா? அல்லது ஓடும் தண்ணீரில் கரைந்து விடப் போகிறோமா?

ஆனால், நிச்சயமாக ஒன்று, எத்தனை சுயாதீனக்குழுக்களையும் தின்று ஏப்பம் விடக் கூடியவையே தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையத் தலைமைகளும் கட்சிகளும். இந்தச் சூழலில் இந்தக் கட்சிகளை வளப்படுத்தலாம், வழிப்படுத்தலாம் என்று நினைப்பதெல்லாம் நாய்வாலை நிமிர்த்தும் செயலே. இவை மாற்றத்துக்குட்படுவதென்பது முயற்கொம்பே.

00

Share:

Author: theneeweb