பலாலியில் இருந்து திருச்சி மதுரைக்கு விமான சேவை!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கும் என சிவில் விமான போக்கு வரத்து அமைச்சை மேற் கோள்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி  இராணுவ விமான நிலையம், அபிவிருத்தி செய்யப்பட்டுச் சர்வதேச விமான நிலையமாக எதிர்வரும் 17ஆம் திகதி முறைப்படி அறிவிக்கப்படும். விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன.

இந்நிலையில், பலாலியிலிருந்து மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்க இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு பலாலி பன்னாட்டு விமான நிலையத்தைத்  தரம் உயர்த்துவதற்கு உரூபா 225 கோடி வெலவழித்துள்ளது. இந்தியா உரூபா 30 கோடி கொடுத்து உதவியுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செயயும் நோக்குடன் பிரதமர் இரணில் விக்கிரமசிங்க  தலைமையிலான குழு ஒன்று நேற்று (06 செப்தெம்பர்) மட்டக்களப்புக்கு  வருகை  செய்தது.

இந்த வருகையின் போது முக்கிய விடயமாக மட்டக்களப்பு விமான நிலையத்தை பன்னாட்டு  விமான நிலையமாக தரமுயர்த்தல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் புது நகரிலுள்ள விமான நிலையத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடல் கட்டுநாயக்க பன்னாட்டு  விமான நிலைய உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்த காரியபெருமதலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார், பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு விமான நிலைய உயர் அதிகாரிகள்
மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பிலிருந்து நேரடியாக இந்திய சுற்றுலாத் தலங்களைத் தரிசிக்கும் நோக்குடன் மட்டக்களப்பு, பலாலி மற்றும் மத்தள விமான நிலையங்கள் ஊடாகவும் எதிர்வரும் காலங்களில் பன்னாட்டுச்  சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன் போது விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும் மட்டக்களப்பு பன்னாட்ட  விமான நிலைய கட்டுமானப் பணிகளைத் தொடக்குவது தொடர்பாகவும் பிரதமர் விக்கிரமசிங்க தேவையான பணிப்புரைகளை விடுத்தார்.

இதேவேளை, விமான நிலையத்தின் ஓடு பாதைகளை பார்வையிட்டா பிரதமர், மாவட்டத்தின் சுற்றுலாத் துறையையும் பொருளாதார அபிவிருத்தியையும் உயர்த்தும் நோக்குடன் பல பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார்.

இந்த விமான நிலையங்கள்  பன்னாட்டு விமானநிலையங்களாக தரம் உயர்த்துவதால் எப்படி கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையம் காரணமாக கம்பகா மாவட்டம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்ததோ அது போல  யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு  பன்னாட்டு விமான நிலையங்கள் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் பொருளாதார வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த உயிர்த ஞாயிறு ஏப்ரில் 21 அன்று  மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து  சிறீலங்காவின் சுற்றுலாத்துறை பலத்த பின்னடைவைச் சந்தித்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை சரி பாதியாகச் சரிவடைந்தது. பல ஹோட்டல்கள் மூடப்பட்டன. ஆனால் இப்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

சிறிலங்காவுக்கு  ஆண்டொன்றுக்கு 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கிறார்கள்.  ஆண்டொன்றுக்கு 400,000 இந்திய சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகிறார்கள்.  சுற்றுலாத்துறைக்கு ஓர் ஆண்டில் அ.டொலர் 4.4 பில்லியன் வருவாய் கிடைக்கிறது.  Lonely Planet என்ற சுற்றுலா வழிகாட்டி சஞ்சிகை 2019 ஆண்டில் சிறந்த சுற்றுலாவுக்கு உகந்த இடம் சிறீலங்கா எனத் தெரிவு செய்துள்ளது.

Share:

Author: theneeweb