சிறுவர் தினம் மற்றும் போரில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக இரத்ததான முகாம்

சிறுவர் திணத்தை முன்னிட்டும், போரின் போது உயிரிழந்த மாணவர்களின் நினைவாகவும் வருடந்தோறும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களினால் நடாத்தப்படுகின்ற இரத்ததான முகாம் நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி நடத்தப்பட்டது.

கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரையும் இரத்தான முகாம் இடம்பெற்றது. இதன் போது 86 பேர் இரத்ததானம் செய்துள்ளனர்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் வருடந்தோறும் மிகவும் சிறப்பாக இந் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்திவருகின்றனனர். தற்போது எங்கள் சமூகத்தில் இளைஞர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான ஒரு இளம் சமூக நலனோடு சிந்தித்து செயல்படுவது அனைவரினதும் பாராட்டை பெற்று வருகிறது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இரத்ததான முகாம் நிகழ்வில் யாழ் போதான வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி, ஓய்வுப்பெற்ற கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
முதலாவதாக யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி இரத்தம் வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இரத்ததானம் வழங்கியவர்களுக்கு மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Share:

Author: theneeweb