பொன்னியின் செல்வன், மணிரத்னம் தீவிரம் : 6 மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு

தமிழில் மிகச் சிறந்த சரித்திர நாவல், கல்கியின் பொன்னியின் செல்வன். இது பல ஆண்டுகளாக நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. இதனை திரைப்படமாக தயாரிக்க பலரும் விரும்பினார்கள். குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வனை தயாரித்து, இயக்கி நடிக்க விரும்பினார். அது நிறைவேறவில்லை.

அதன்பிறகு இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சிவாஜியை வைத்து பொன்னியின் செல்வன் எடுக்க விரும்பினார். அந்தக் காலத்திலேயே 3 கோடி ரூபாய் பட்ஜெட். யாரும் முன் வராததால் அவரும் கைவிட்டார். அதன் பிறகு மணிரத்னம் பல ஆண்டுகளுக்கு முன்பே பொன்னியின் செல்வனை எடுக்க விரும்பினார். பிறகு அவரும் கைவிட்டார்.

தற்போது பாகுபலி, பத்மாவதி, பழசிராஜா, காயங்குளம் கொச்சுண்ணி, உள்ளிட்ட சரித்திர படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதால் மணிரத்தினத்திற்கு நம்பிக்கை வந்திருக்கிறது. இதனால் தனது அடுத்த தயாரிப்பாக பொன்னியின் செல்வனை கொண்டு வர தீவிரம் காட்டுகிறார்.

பொன்னியின் செல்வன் கதையை பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்து விட்டார் மணிரத்னம். இப்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்திருப்பதால் அதற்கேற்ப சில மாறுதல்களை செய்திருக்கிறார். முதல் கட்டமாக தனது சென்ட்டிமென்ட் படி, ஏ.ஆர்.ரகுமானை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்து பாடலுக்கான சூழலையும் கொடுத்து விட்டார்.

படம் 6 மொழிகளில் தயாராவதால் 6 மொழியைச் சேர்ந்த நடிகர்களையும் நடிக்க வைக்க இருக்கிறார். முதல் கட்டமாக அமிதாப்பச்சன், ஐஸ்வர்யராய் ஆகியோரை சந்தித்து பேசி கதையை கொடுத்து வந்திருக்கிறார். தமிழில் விக்ரம், ஜெயம்ரவி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் விஜய் தேரகொண்டா நடிக்கிறார். கன்னட நடிகர் சுதீப், மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் நடிக்கலாம் என்று தெரிகிறது.

படத்தின் பட்ஜெட் 300 கோடி என்கிறார்கள். இதனை மணிரத்னம் ஒரு பெரிய நிறுவனத்துக்கு முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து கொடுக்க முடிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வேலைகள் அதிகம் இருப்பதால் இன்னொருவரை இயக்கச் சொல்லிவிட்டு மணிரத்னம் மேற்பார்வை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. 2020ம் ஆண்டில் பொன்னியின் செல்வனை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.

Share:

Author: theneeweb