“இராணுவத் தளபதியின் அரசியல் பிரசன்னம் தவறான முன்னுதாரணம்”: கலா­நிதி ரொஹான் பிரத்­தி­யேக செவ்வி

பிரித்தானிய பிரதமர் தலைமையிலான அமைச்சர்களை சந்தித்த போது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்க ஆதரவளிப்பதாக கூறினார்கள்

இரா­ணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதி­கா­ரி­களை உட­ன­டி­யாக அர­சி­ய­லுக்குள் அழைத்து வரு­வ­தா­னது ஜன­நா­ய­கத்­திற்கு கேள்­வி­க்கு­றியை ஏற்­ப­டுத்­து­வ­துடன் நாட்­டிற்கும் பேரா­பத்­தாக அமையும் சூழல் உரு­வாகும் என்று ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள ஸ்ரீலங்கா சமூக ஜன­நா­யக கட்­சியின் தலைவர் கலா­நிதி.ரொஹான் பல்­லே­வத்த வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு:

கேள்வி:- நாட்டின் முன்­னணி தொழி­ல­தி­ப­ராக அடை­யாளம் காணப்­பட்ட நீங்கள் நேர­டி­யாக ஜனா­தி­பதித் தேர்தல் ஊடாக அர­சியல் பிர­வேசம் செய்­தி­ருக்­கின்­றீர்­களே?

பதில்:- ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாட்டில் அப­ரி­மி­த­மான மாற்­றங்கள் ஏற்­படும் என்று எதிர்­பார்த்து காத்­தி­ருந்தேன். ஆனாலும் அவ்­வா­றான மாற்­றங்கள் எவை­யுமே இடம்­பெ­ற­வில்லை. மேலும் மோச­மான நிலை­மைக்­குள்ளேயே நாடு சென்­றி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் தொடர்ந்தும் பார்­வை­யா­ள­ராக இருக்க முடி­யாது. மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான தலை­யீ­டு­களை செய்ய வேண்டும் என்ற தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருந்தேன்.

அதற்­காக அர­சியல் அங்­கீ­காரம் அவ­சியம் என்­ப­தையும் உணர்ந்து அதில் பிர­வே­சிக்கும் முடி­வினை உறு­தி­யாக எடுத்­தி­ருந்தேன். அச்­ச­ம­யத்தில் தான் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டது. ஆகவே அதில் போட்­டி­யிடும் தீர்­மா­னத்­தினை எடுத்­துள்ளேன். மேலும் நாட்­டினை இயக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­தி­யி­டத்­தி­லேயே உள்­ளது. ஆகவே முக்­கிய பத­வி­யாக இருக்கும் ஜனா­தி­பதி பத­வியின் ஊடாக நாட்டில் பாரிய மாற்­றங்­களை மேற்­கொள்ள முடியும் என்­பதும் எனது நிலைப்­பா­டாக இருக்­கின்­றது.

கேள்வி:- நீங்கள் எவ்­வா­றான மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- முதலில் ஒரு­வி­ட­யத்­தினை தெளி­வு­ப­டுத்­து­கின்றேன், பிரித்­தா­னிய அர­சுக்கும் எனக்கும் இடையில் தனிப்­பட்ட உற­வுகள் காணப்­ப­டு­கின்­றன. அண்­மையில் தற்­போ­தைய பிர­தமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் அவ­ரது அமைச்­ச­ரவை அமைச்­சர்­களை சந்­தித்­த­போது, பல்­வேறு விட­யங்­களை கலந்­து­ரை­யா­டினோம். இதன்­போது என்­போன்ற, நாட்­டினை முன்­னோக்கி கொண்டு செல்ல முனையும் தலை­வர்­க­ளுடன் அவர்கள் இணைந்து பணி­யாற்­று­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தாக கூறி­னார்கள்.

அது­மட்­டு­மன்றி, ஆட்சி அதி­காரம் என்­போன்­ற­வர்­க­ளுக்கு கிடைக்­கின்­ற­ போது இலங்­கைக்கு எதி­ராக எவ்­வி­த­மான குற்­றச்­சாட்­டுக்­களும் இல்லை என்று ஜெனீ­வாவில் கூறு­வ­தற்கு கூட தயா­ராக இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டார்கள். உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இல்­லாது விட்­டாலும், தனிப்­பட்ட முறையில் அவ்­வாறு வாக்­கு­றுதி அளித்­தார்கள்.

அத்­துடன், இந்த நாட்­டினை பொரு­ளா­தார ரீதியில் முன்­னோக்கிக் கொண்டு செல்­வ­தற்­கான முத­லீட்­டா­ளர்­க­ளையும் எனக்கு அறி­முகம் செய்து வைத்­தி­ருந்­தார்கள். தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களால் இத்­த­கைய விட­யங்­களை முன்­னெ­டுக்க முடி­யா­தி­ருக்­கின்­றது. அவர்கள் ஏன் இத்­த­கைய தலை­வர்­க­ளுடன் உரிய அணு­கு­ மு­றை­களைச் செய்­ய­வில்லை என்ற கேள்வி எழு­கின்­றது.

எமது தரப்பில் மூன்று வரு­டங்­களை இலக்­காக வைத்து நாட்டின் அனைத்து துறை­க­ளையும் முன்­னேற்­று­வ­தற்­கான செயற்­றிட்­ட­மொன்று நிபு­ணர்­களின் பங்­கேற்­புடன் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதனை நடை­மு­றை­சாத்­தி­ய­மாக்கும் முழு­மை­யான நம்­பிக்­கை­யுடன் தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ளேன்.

கேள்வி:- ஏனைய வேட்­பா­ளர்­க­ளி­டத்­தி­லி­ருந்து வேறு­பட்­டி­ருக்கும் கொள்­கைத்­திட்­டங்கள் பற்றி கூறுங்கள்?

பதில்:- அரிஸ்­டோட்­டி­லி­டத்தில் யார் உண்­மை­யான ஜனா­தி­ப­தி­யாக இருக்க முடியும் எனக்­கேட்­ட­போது, தத்­து­வ­ஞா­னி­யொ­ரு­வரே பொருத்­த­மா­னவர் என்று கூறினார். மனி­தா­பி­மான ரீதி­யி­லான பகுத்­த­றிவைக் கொண்ட ஒரு­வரே உய­ரிய ஆச­னத்தில் அமர்ந்­தி­ருக்க வேண்டும். சாதா­ரண பொது­ம­கனின் கண்­ணீரை உணர்வு ரீதி­யாக கொள்­ளக்­கூ­டி­ய­வ­ராக இருக்க வேண்டும். குடிநீர், உணவு, பசுமை பாது­காப்பு உள்­ளிட்­டவை சம்­பந்­த­மாக கூடி­ய­ளவு கவ­னத்தில் கொள்ள வேண்டும். இந்த விட­யங்­களில் அக்­கறை கொண்ட ஒரு­வரே ஜனா­தி­ப­தி­யாக இருக்க வேண்டும்.

இத­னை­வி­டுத்து சட்­ட­வாக்­கத்­து­றை­யுடன் தொடர்­பு­பட்ட கொள்­கைத்­திட்­டத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்­து­வதால் எவ்­வி­த­மான நன்­மை­களும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. மேற்­படி அடிப்­படை விட­யங்கள் குறித்த பட்­ட­றி­வு­ட­னான நபர் தலை­மை­யேற்கும் போது சட்­ட­வாக்­கத்­துறை கொள்­கைத்­திட்­டங்­களை உரிய முறையில் தயா­ரிக்கும்.

சட்­ட­வாக்­கத்­துறை வரையும் கொள்­கை­களின் நன்மை தீமை­களை உணர்ந்து அவற்றை முகாமை செய்யும் அல்­லது நடை­மு­றைப்­ப­டுத்தும் திறனை ஜனா­தி­ப­தி­யாகும் நபர் கொண்­டி­ருந்தால் போது­மா­னது. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக எமது நாட்டில் அடிப்­படை விட­யங்கள் பின்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு கொள்­கைத்­திட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் நிலைமை உரு­வாக்­கப்­பட்­டது.

ஆகவே எமது நாட்டின் துரதிர்ஷ்டமான நிலை­மையை உணர்ந்­து­கொண்டு தலை­மை­யேற்­ப­தற்கு தயா­ரா­கி­யி­ருக்­கின்­ற­மையே ஏனைய வேட்­பா­ளர்­க­ளி­டத்­தி­லி­ருந்து வேறு­பட்­டி­ருக்கும் எனது தனித்­து­வ­மாக கரு­து­கின்றேன்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு  உடன் தீர்வு காண 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம். 4 பில்லியன் டொலர்களுக்கான உறுதிப்பாடுகளை நான் பெற்றுள்ளேன்

கேள்வி:- நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு உடன் தீர்வு காண்­ப­தற்கு உங்­க­ளி­டத்தில் எத்­த­கைய திட்­டங்கள் இருக்கின்றன?

பதில்:- நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை உட­ன­டி­யாக சீர்­செய்­வ­தென்றால் 10பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நேர­டி­யாக முத­லீடு செய்­யப்­பட வேண்டும். பிரித்­தா­னியா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுடன் தனிப்­பட்ட முறையில் எனக்குள்ள உற­வு­களைப் பயன்­ப­டுத்தி தற்­போது வரையில் 4பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­ முத­லீடு உறு­தி­மொ­ழி­களைப் பெற்­றுள்ளேன். மீத­மாக 6பில்­லியன் டொலர்­களே தேவை­யாக உள்­ளன. ஆட்சி அதி­காரம் கிடைக்­கின்­ற­போது, அதனை இல­கு­வாக பெற்­றுக்­கொள்ள முடியும். அதில் எந்­த ­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தல்­ க­ளத்தில் மூன்று பிர­தான தரப்­புக்கள் கள­மி­றங்­கி­யுள்ள நிலையில் உங்­க­ளுக்கு இத்­த­ரப்­புக்­க­ளி­டத்­தி­லி­ருந்தும் அழைப்­புகள் கிடைத்த­தாக அறி­ய­மு­டி­கின்­ற­தோடு இவர்­களில் யார் உங்­க­ளுக்கு சவால் என்று கரு­து­கின்­றீர்­கள்-?

பதில்:- நான் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை ஆரம்­பித்­தி­ருந்த தரு­ணத்தில் பிர­தான கட்­சிகள் என்னை தம்­முடன் இணைந்து கொள்­ளு­மாறு அழைப்­புக்­களை விடுத்­தி­ருந்­தன. என்னைப் பொறுத்த வரையில் இந்த தரப்­புக்கள் நாட்­டையும் மக்­க­ளையும் தவ­றான வழி­களில்  கொண்டு செல்­கின்­றார்கள் என்­ப­தனால் தான் கொள்­கை­களை வகுத்து கள­மி­றங்க வேண்­டிய நிலைமை எனக்கு ஏற்­பட்­டது. அவ்­வா­றி­ருக்­கையில், பிர­தான தரப்­பு­க­ளுடன் மீண்டும் இணை­வ­தா­னது கொள்கை ரீதி­யான நிலைப்­பா­டு­களை கைவிட்டு பிர­பல்­யத்­தினை தேடிய அர­சியல் செயற்­பா­டா­கவே இருக்கும்.

ஆகவே அவர்­களின் அழைப்­பினை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. இலங்கை வர­லாற்றில் கொள்கை ரீதி­யான அர­சியல் செயற்­பாட்­டா­ளர்கள் இருந்­துள்­ளார்கள். அவர்­க­ளுக்கு மக்கள் அங்­கீ­காரம் அளித்­துள்­ளார்கள். ஆகவே பிர­தான கட்­சி­களின் சார்பில் பிர­பல்­ய­மாக இருக்கும் வேட்­பா­ளர்­களை தாண்டி எனக்­கான அங்­கீ­காரம் கிடைக்கும் என்ற நம்­பிக்கை உள்­ளது. நான் கொள்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி செல்­வதால் யாரும் எனக்கு சவா­லாக இருக்­க­மாட்­டார்கள் என்றே கரு­து­கின்றேன்.

கேள்வி:- ‘அபி­மன்ய லங்கா’ அமைப்­பினால் உங்­க­ளது பெயர் முதலில் முன்­மொ­ழி­யப்­பட்­ட­போதும் பின்னர் முன்னாள் இரா­ணு­வத்­த­ள­ப­தியின் பெயரை தெரிவு செய்­தி­ருந்­தார்­களே?

பதில்:- ‘அபி­மன்ய லங்கா’ என்னும் அமைப்பில் 44வரை­யி­லான பல்­வேறு துறை­சார்ந்த அமைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இதில் ஐக்­கிய துறைசார் அமைப்பு  மற்றும் தேசிய துறைசார் அமைப்பு போன்­ற­னவும் காணப்­ப­டு­கின்­றன. முதலில் ஐக்­கிய துறைசார் அமைப்பு செ­யற்­பட்டு வந்­தி­ருந்த நிலையில் தான்­தேசிய துறைசார் அமைப்­பினை நாட­ளா­விய ரீதியில் செயற்­ப­டு­வ­தற்­காக நானே முன்­னின்று  ஸ்தாபித்­தி­ருந்தேன்.

இந்­நி­லையில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக எனது பெயரை தெரிவு செய்­தி­ருந்­த­தோடு கடந்த 25ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பினை வெளி­யி­டு­வ­தா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் திடீ­ரென 24ஆம் திகதி  புதிய வேட்­பா­ள­ராக மகேஷ் சேன­நா­யக்­கவை அறி­விக்­கப்­போ­வ­தாக கூறி­னார்கள். ஓர் இரவில் வேட்­பாளர் எவ்­வாறு மாற்­றப்­பட்டார் என்று தெரி­ய­வில்லை.

அவ்­வா­றான நிலையில் நான் திட்­ட ­மிட்­ட­வாறு கள­மி­றங்­கு­கின்றேன் என்று உறு­தி­யாக கூறி­விட்டேன். மகேஷ் சேன­நா­யக்­கவை ஆத­ரித்த தரப்­பினர் சுக­த­தா­ஸவில் அவர்­களின் அறி­விப்­பினை வெளி­யிட்­டனர். அத்­துடன் நாஹ­னந்த கொடித்­து­வக்கு உள்­ளிட்­ட­வர்­களும் போட்­டி­யிடும் முடி­வினை அறி­வித்­தார்கள். இதனால் வாக்­கு­களை மட்­டுமே சிதைப்­ப­தா­கவும் அமைந்து உண்­மை­யான மாற்­றத்­தினை எட்­ட­மு­டி­யாது போகலாம்.

மேலும், இரா­ணு­வத்­த­ள­பதி பத­வியில் இருந்து ஓய்வு பெற்று சொற்­ப­கா­லத்­தினுள் மகேஷ் சேன­நா­யக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தா­னது  பிழை­யான முன்­னு­தா­ர­ண­மாகும். நாம் அனை­வ­ருமே சுதந்­தி­ரத்­தி­னையும், ஜன­நா­ய­கத்­தி­னையும் அதிகம் விரும்­பு­ப­வர்­க­ளாக இருக்­கின்றோம். இரா­ணுவ அதி­கா­ரி­களைப் பொறுத்­த­வ­ரையில் உத்­த­ர­விட்டால் அதனை செய்ய வேண்டும் மறு­பேச்­சிற்கே இட­மில்லை. அவ்­வா­றி­ருக்­கையில் அதி­காரம் அவர்­களின் கைக்குச் சென்றால் நிலை­மைகள் எவ்­வாறு இருக்கும்.

இத­னை­வி­டவும் தற்­போ­தைய இரா­ணு­வத்­த­ள­ப­தி­யான சவேந்­திர சில்­வா­வுக்கும் அர­சியல் கன­வுகள் இல்­லா­ம­லில்லை. இவரும் ஓய்வு பெற்ற பின்னர் அர­சி­ய­லுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு அதிக சந்­தர்ப்­பங்கள் உள்­ளன. மகேஷ் சேன­நா­யக்க, சவேந்­திர சில்வா என இரா­ணுவ சேவை­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற அதி­கா­ரி­களை உட­ன­டி­யாக அர­சி­ய­லுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு இட­ம­ளிப்­பதும், அங்­கீ­கா­ர­ம­ளிப்­பதும் நாட்டின் ஜன­நா­யக விழு­மி­யங்­களை கேள்­விக்­கு­றி­யாக்­கு­வ­தோடு எதிர்­கா­லத்தில் நாட்­டிற்கும் பேரா­பத்து ஏற்­ப­டு­வ­தற்கே அதிக வாய்ப்­புக்கள் உள்­ளன.

அது­மட்­டு­மன்றி பிரித்­தா­னிய அர­சாங்கம் தனிப்­பட்ட முறையில் என்­னுடன் தொடர்பு கொண்டு கலந்­து­ரை­யா­டிய போது ஜன­நா­யக விழு­மி­யங்­களை மையப்­ப­டுத்­திய நிலைப்­பா­டு­க­ளையே வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள்.  இவ்­வா­றான பின்­ன­ணியில் மகேஷ் சேன­நா­யக்­கவின் தரப்பில் எனக்கு விடுக்­கப்­பட்ட அழைப்­பி­னையும் நான் நிரா­க­ரித்­தி­ருந்தேன். நான் ஒரு சிவில் பிர­ஜை­யா­கவே செயற்­பட விரும்­பு­கின்றேன்.

மிக முக்­கி­ய­மான சர்­வ­தேச தரப்­புக்கள் உள்­ளிட்ட ஏனைய தரப்­புக்­களின் நிலைப்­பா­டு­களை, சிந்­த­னை­களை புறந்­தள்ளி இலங்கை எமது நாடு இதற்குள் எத­னையும் செய்வோம் என்ற சிந்­த­னையில் அவர்­களை புறந்­தள்ளி செயற்­பட முடி­யாது. எமது நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு பூகோ­ளத்தில் உள்ள அனைத்து தரப்­புக்­க­ளு­டனும் கைகோர்த்தே பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- இரா­ணு­வத்­தினை சேர்ந்­த­வர்­களின் அர­சியல் பிர­சன்­னத்­தினை எதிர்க்கும் நீங்கள் இரா­ணு­வத்தில் கட­மை­யாற்­றி­ய­வரும், முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ரா­கவும் இருக்கும் கோத்­தா­ப­யவின் அர­சியல் பிர­வே­சத்­தினை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- மகேஷ் சேன­நா­யக்க தற்­போது ஜனா­தி­பதித் தேர்தல் களத்தில் இறங்­கி­ய­மையால் அவ­ருடன் ஒப்­பி­டு­கையில் கோத்­தா­பய மேலா­னவர் என்ற சிந்­தனை  உரு­வாக்­கமே மக்கள் மத்­தியில் எழப்­போ­கின்­றது. இதனால் பொது­மக்கள் அவரை ஆத­ரிக்கும் நிலைப்­பாட்­டிற்குச் செல்­வ­தற்­கான வழி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. இது இந்த நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு தவ­றான முன்­னு­தா­ர­ண­மாக இருக்­கின்­ற­மை­யா­னது கவ­லைக்­கு­ரி­ய­தா­கின்­றது.

குறிப்­பாக மூன்று தசாப்த யுத்தம் நிறை­வுக்கு வந்­ததன் பின்னர் இலங்கை பிர­ஜை­க­ளி­டையே படைத்­த­ரப்பில் சேவை­யாற்­றி­ய­வர்­களை நாய­கர்­க­ளாக கொள்ளும் மன­நி­லை­யொன்று தோற்றம் பெற்­றி­ருக்­கின்­றது. என்­னைப்­போன்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முத­லீ­டு­களை வர­வ­ழைத்து வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் செல்­வாக்குச் செலுத்தும் துறை­சார்ந்த நிபு­ணர்­களின் பங்­க­ளிப்­பினை பொருட்­டாக கொள்­ளாத மன­நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலை­மையும் துர்ப்­பாக்­கி­ய­மா­னதே.

ஆகவே பொது­மக்கள் நாட்­டிற்கு தலைமை தாங்­கு­வ­தற்­கான தகு­தி­யு­டைய நபர்­களை அடை­யாளம் காண்­ப­தற்­கான அள­வு­கோல்­பற்றி விழிப்புடன் அறிந்­தி­ருக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­கின்­றது. ஒரு­முறை ஜன­நா­ய­கத்­திற்கு ஆபத்­தினை ஏற்­ப­டுத்தும் இரா­ணு­வ­சிந்­தனை தரப்­புக்கள் அதி­கா­ரத்­தினை பெற்றால் அதன் விளை­வுகள் எவ்­வாறு இருக்கும் என்று கற்­ப­னை­கூட செய்து பார்க்க முடி­யாது என்­பதை புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

கேள்வி:- தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் எத்­த­கைய நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

பதில்:- தேசிய பிரச்­சினை என்­பது பிர­தா­ன­மாக காணப்­படும் பிரச்­சி­னையின் ஓர் அங்கமே ஆகும். ஆகவே பிரதான பிரச்சினைக்கு தீர்வினை காணாமல் அங்கமாக இருக்கும் தேசிய பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காண்பதால் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. உள்நாட்டில் இருக்கின்ற வளங்களை முறையாக திட்மிட்டு பயன்படுத்துகின்றபோது 10ஆயிரம் கோடியை திரட்டுவதென்பது சவாலான விடயமாகாது.

அவ்வாறான நிலைமை ஏற்படுகின்றபோது தனியாள் வருமானம் மாதமொன்றுக்கு சராசரியாக ஒருஇலட்சத்து ஐம்பதாயிரமாகிவிடும். இதனால், ஒவ்வொரு தனியாளினதும் வாழ்க்கைத்தரம் உயர்வடையும். உலக நாடுகளை முன்னுதாரணமாக கொள்கின்றபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கின்றபோது மதம், இனம், குலம் போன்ற விடயங்கள் முன்னிலைப்படுத்தப்படும் போக்கு குறைவாக காணப்படுகின்றது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவடைகின்றபோது இந்த விடயங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இதனால் பன்முக சமூகங்களைக் கொண்ட நாடுகளினுள் பிரிவினை அதிகரிக்கின்றது. ஆகவே இந்த விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

ஆகவே மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் தொடர்ந்தும் இனங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு காணப்படுமாயின் அதுபற்றிய கவனத்தினை செலுத்தி கலந்துரையாடல்கள் ஊடாக தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி:- அடுத்து வரும் பொதுத்தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களிலும் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளீர்களா?

பதில்:- ஆம், இந்த நாட்டில் உள்ள அனைத்து தரப்புக்களையும் கூட்டிணைத்து நாடளாவிய ரீதியில் எமது தரப்பு போட்டியிடும். மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கூட்டணியமைப்பது பற்றிய பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். அது குறித்த இறுதி முடிவுகளை எதிர்காலத்தில் எடுக்கவுள்ளோம்.

நேர்காணல் : ஆர்.ராம் – Virakesari

Share:

Author: theneeweb