பிறந்த குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது

பிறந்து இரண்டே நாளான கைக்குழந்தையை பாழடைந்த கிணற்றில் வீசிக் கொலை செய்த இளம் தாயொருவர் நேற்று (07) முந்தல் கல்குளிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

119 பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த இளம் தாய் வசித்து வந்த இடத்தை அண்மித்த தோட்டமொன்றில் கைவிடப்பட்ட கிணற்றில் இருந்தே குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

32 வயதான இளம் தாய் கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார் எனக் ௯றப்படுகிறது.

குழந்தை பிரசவித்த குறித்த தாய் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையைப் பெற்றெடுத்த குறித்த தாய் அந்தக் குழந்தையை கைவிடப்பட்ட கிணற்றுக்குள் வீசியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இளம் தாய் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை விவாகரத்து செய்தார் எனவும் அதன் பின்னர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் ௯றப்படுகிறது.

ஏற்கனவே செய்து கொண்ட திருமணத்திலிருந்து ஒரு குழந்தையைப் பெற்ற இவர், கணவரைப் பிரிந்ததன் பின்னர், தனது பிள்ளையை வளர்ப்பதற்காக காட்டுநாயக்கவிலுள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துள்ளார். இதன்போது, குறித்த பெண் கர்ப்பம் தரித்திருக்கலாம் என அந்தப் பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த குறித்த பெண், இந்த வருடம் ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

வயிற்றில் எண்ணெய் கட்டி ஒன்று இருப்பதாகக் கூறி , கர்ப்பமாக இருப்பதை தன் குடும்பத்தினரிடமிருந்து மறைத்து வந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான இளம் தாயார் முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட தாய் மருத்துவ சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தையின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்துவதற்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Author: theneeweb