நீதிமன்ற உத்தரவை மீறியோரை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டும்- இரா.சம்பந்தன்

முல்லைத்தீவு – செம்மலை – நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பௌத்த பிக்கு ஒருவரின் பூதவுடல் நீதிமன்ற உத்தரவை மீறி எரிக்கப்பட்டமைட தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

குருகந்த ரஜமகா விகாரையின் தலைமை குரு கடந்த மாதம் 21 ஆம் அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில் மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் காலமனார்.

அவரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு எதிராக நீராவியடி பிள்ளை ஆலய நிர்வாகம் முல்லைத்தீவு காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தது.

இதனையடுத்து அந்த முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, குறித்த தேரரின் உடல் சர்ச்சைக்குரிய வளாகத்தில் தகனம் செய்யப்படக்கூடாது என்றும் அதற்கு மாற்று இடமொன்றில் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எந்த இடத்தில் தகனம் செய்யக்கூடாதென்று நீதிமன்றம் உத்தரவிட்டதோ அதே இடத்திற்கு கொண்டுசென்று தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் அரசாங்கத்தை வலியுறுத்துவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதற்கான பதிலை நாளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share:

Author: theneeweb