மண்சுமந்த மேனியர்” — கருணாகரன்

உடல் முழுவதும் காயப்பட்டு நடமாடவே முடியாத ஒரு போராளியின் நிலைமையைப் பற்றி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேனீ (Thenee.com) இணையத்தில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தவர். வன்னிப்பிராந்தியத்தில் புலிகளின் பிரதித் தலைவரான மாத்தயாவின் பொறுப்பிலிருந்த படையணியில் முன்பும் பிறகு, யாழ்ப்பாணப் படையணியிலும். இயக்கத்தில் சேர்ந்த காலம் தொடக்கம் அநேகமாகச் சண்டைக்களங்களிலேயே அவருடைய இயக்க வாழ்க்கை கழிந்தது. அதன் பேறே அவ்வளவு உடற்காயங்களும். ஒரு கட்டத்தில் இனிப்போதும் இந்த இயக்க வாழ்க்கை என்று இயக்கத்தை விட்டு வந்து திருமணம் செய்து தனிக்குடித்தனமாக வாழ்ந்தார். அப்பொழுது உடற்காயங்கள் ஆறி, (வீர)தழும்புகள் மட்டுமிருந்தன. கிடைத்த தொழில்களை எல்லாம் செய்து எப்படியோ வாழ்க்கையை ஓட்டினார். சிறிய அளவில் விவசாயமும். மனைவியும் மூன்று பிள்ளைகளுமாக நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

2008 இல் கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினரைக் கண்டு வட்டக்கச்சியிலிருந்தவர்களும் முதற்தடவையாக இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலை நோக்கி ஓடினார்கள். இந்தப் போராளியின் குடும்பமும் ஓடியது. அப்போது விழுந்து வெடித்த எறிகணையினால் மறுபடியும் பெருங்காயங்களுக்குள்ளானார் இந்தப் போராளி. பட்டகாலிலே படும் என்பார்களே அதைப்போல. மரத்திலிருந்து விழுந்தவரை மாடு ஏறி மிதித்ததைப்போல. அதோடு அவர் நடக்கவே முடியாத நிலைக்குள்ளானார். ஆனாலும் குடும்பத்தைப் பார்க்கவும் பராமரிக்கவும் வேண்டுமே. ஏதோ தன்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற முனைப்போடிருந்தவரை எதிர்பாராதவிதமாக ஒருநாள் சந்தித்தேன். அப்பொழுதுதான் அவருடைய கதையைக் கேட்டு, அவர்களுடைய நிலையைப்பற்றி எழுதினேன்.

இதைப் படித்த கன்பரா யோகன், ஒரு மின்னஞ்சலை எழுதியிருந்தார்.

வணக்கம். என் பெயர் யோகன்(யோகானந்தம்). தங்கள் பதிவுகளை (தேனீ இணையத்தில்) தொடர்ந்து வாசித்து வருகிறேன். அண்மையில் எழுதிய கால்களை இழந்த ஒரு போராளியின் வாழ்வுப்போராட்டம் பற்றிய பதிவினைப் பார்த்தேன். என்னால் முடியுமான சிறு தொகை அவர் ஜீவனத்துக்கு மேலதிக மாடுகளை வாங்குவதற்கு உதவுமாயின் மகிழ்ச்சியடைவேன் . இதற்கான விபரங்களை அனுப்புங்கள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

 

இப்படிக்கு,

யோகன் 

அவுஸ்திரெலியா (கான்பரா)

என.

இந்தக் கடிதத்துக்குப் பதிலளிக்கும்போது, குறித்த அந்தப் போராளியின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து, நீங்களே நேரடியாகத் தொடர்பு கொண்டு நிலைமையைப் பேசி அறிவது நல்லது என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதன்படி யோகன், அந்தப் போராளியோடு தொடர்பு கொண்டு பேசி அவர்களுடைய வாழ்வாதாரத்துக்காக மாடுகள் வாங்குவதற்கான பணத்தை அனுப்பியிருந்தார். அதைச் சரியாகக் கண்காணித்து வழிப்படுத்தும் பொறுப்பை நான் ஏற்றேன். அவர்களுடைய வீட்டில் இரண்டு மாடுகள் வந்து சேர்ந்தன. இதேவேளை ஏற்கனவே இன்னொரு வழியில் அவர்களுக்காக  மேற்கொண்டிருந்த முயற்சியும் கைகூடி வந்தது. அதையும் சேர்த்து அந்தப் போராளியின் வீட்டில் மூன்று மாடுகளாகின. அதிர்ஸ்டவசமாக அந்தக் குடும்பத்துக்குத் தேவையான வருமானத்தைப் பெறக்கூடிய நிலை உருவாகிவிட்டது. மூன்று மாடுகளையும் சரியாகப் பராமரித்தால் மிகக்குறுகிய காலத்திலேயே அவர்களால் ஒரு சிறிய மாட்டுப் பண்ணையை நிர்மாணித்து விட முடியும். இதற்கு ஏற்றமாதிரி கால்நடை அபிவிருத்தி மற்றும் கால்நடை மருத்துவத்துறையினரையும் இணைத்து விட்டேன். இடையில் ஒரு தடவை நான் அந்தப்போராளியின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பட்டியில் கன்றுகளோடு சேர்த்து ஆறு உருப்படிகள் நின்றன. மிகச் சந்தோசமாகவும் நிறைவாகவும் இருந்தது.

“மாடுகளுக்குப் புல்லை எடுப்பதுதான் பிரச்சினையாக இருக்கு. புல்லை வளர்ப்பதற்கேற்ற இடமில்லை. போதிய தண்ணீரும் இல்லை” என்றார் அந்தப் போராளி. மேலும் “வைக்கோலையும் மாட்டுத்தீவனத்தையும் எடுத்து வந்து சேகரித்து வைக்கக் கூடிய வசதியும் இல்லை” என்று சொல்லிக் கவலைப்பட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய வீட்டுக்கும் வீதிக்குமிடையில் வாய்க்கால் ஒன்று இருப்பதால் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து போவதற்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது. இது மாடுகளுக்கான தீவனத்தை எடுத்துச் சேகரிப்பதற்கும் சிரமத்தை உண்டாக்கியது. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தாலும் சரி, அவர் மாதாந்தக் கிளினிக்கு சக்கர நாற்காலியில் செல்வதற்கும் சரி, அந்த வாய்க்கால் பெரிய இடைஞ்சலைக் கொடுத்தது. அதற்காக வாய்க்காலை இடம் மாற்ற முடியுமா? பாலத்தைத்தான் நிர்மாணிக்க முடியும்.

இதற்கு ஏதாவது செய்யலாம் என்று முயற்சித்தேன். ஆனாலது கைகூடவில்லை. இதைப்பற்றி ஒருநாள் எழுத்தாளர் சயந்தனிடமும் பேசினேன். சயந்தன் இலங்கைக்கு வந்திருந்தபோது நேரடியாகவே அவர்களின் வீட்டுக்குப்போய் நிலைமைகளை இருவருமாக அவதானித்தோம். சயந்தனும் அவர்களுக்கு உதவினார். ஆனால், பாலத்தை நிர்மாணிப்பது சற்றுப் பெரிய வேலையாக இருந்ததால் எம்மால் எதையும் செய்ய முடியவில்லை. அதை ஏதாவது அமைப்புகள் செய்ய வேணும். அல்லது அரசாங்க உதவியின் மூலமாகவே செய்யலாம் என்பதால் அந்த வழியில் முயற்சிக்கலாம் என்று விட்டு விட்டோம். பிறகு, அவர்களுடைய வீட்டுக்கு அண்மையாக இருந்த மாகாணசபை உறுப்பினர் வை. தவநாதன் பாலத்துக்காக முயற்சி எடுத்ததாக அறிந்தேன். வட மாகாண போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனும் அங்கே போய்ப் பார்த்துச் சென்றிருந்தார்.

பாதிக்கப்பட்ட நிலையிலிருந்த ஒரு போராளி குடும்பத்தின் வாழ்க்கைக்கு இப்படியெல்லாம் பலரும் உதவிக் கொண்டிருந்தபோது, இந்த உதவிகளின் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தபோது, அவரைச் சூழ்ந்தது மறுபடியும் ஒரு சூதாடியைப்போல அரசியல். ஒரு காலம் போர்க்களத்திலே சமராடிய அவர், அரசியற் களத்தில் சமராடுவதற்காக அழைக்கப்பட்டார். இதற்காக கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் களமிறக்கப்பட்டார். அதில் அவருக்கோ அவரைக் களமிறக்கிய கட்சிக்கோ வெற்றிகளேதும் கிடைக்கவில்லை. ஆனால், அதற்குப் பிறகும் அந்தப் போராளி வேறு சிலரிடம் உதவிகளைக் கேட்பதாக அறிந்தேன். என்ன செய்வது காலம் மனிதர்களை இப்படியே அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நான் என்னுடைய தலையில் அடித்துக் கொண்டேன்.

இந்தக் கதைகளையெல்லாம் சயந்தனிடம் ஒருநாள் சொன்னபோது, “இதைப்பற்றிக் கவலைப்பட்டு ஆகப்போவதொன்றுமில்லை. இதெல்லாம் எதிர்பார்க்கக் கூடியதுதான். எங்களுக்குச் சரியெனப்பட்டதை உரிய நேரத்தில் செய்தோம். அவ்வளவுதான்” என்று தன்னுடைய வழமையான சிரிப்போடு சமாதானப்படுத்தினார். ஆனாலும் என்னுள்ளே அலைகள் அடங்கவில்லை.

அந்தப்போராளியின் அரசியல் விருப்பு, அவருடைய தெரிவு, அதன் சரி பிழைகளைக் குறித்தெல்லாம் நான் எதையும் பேச விரும்பவில்லை. அது அவருடைய உரிமையும் சுதந்திரமும். ஆனால், அவர் சிரமப்பட்ட காலங்களில் எங்கேயோ இருந்தவர்கள், பாராமுகத்தோடிருந்தவர்கள், தேர்தற் காலம் என்று வரும்போது இப்படி ஆள்தேடிப் பிடிக்க முயல்வதே சகிக்க முடியாதது. அதற்குள் இப்படியானவர்கள் சிக்குவதைப்பற்றியே நாம் பேசவேண்டியுள்ளது. இவ்வளவுக்கும் அவர்களுக்கான அந்தப் பாலம் நிர்மாணிக்கப்படவேயில்லை. வடமாகாணசபையின் ஆட்சிக்காலமும் முடிந்து விட்டது. இப்போது உள்ளுராட்சி சபையின் காலம். தேர்தலில் அவரைக் களமிறக்கியவர்களும் அதைச் செய்யவில்லை.

இதைப்பற்றியெல்லாம் யாருடன் பேசுவது?

இதையெல்லாம் இங்கே எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் ஏற்பட்டன.

ஒன்று, இன்னொரு தேர்தல் அடுத்த நவம்பரில் இலங்கையில் வரப்போகிறது. ஜனாதிபதித் தேர்தல். அதையொட்டி இதே மாதிரியான ஆள்பிடி அரசியலும் ஆட்களைப் பயன்படுத்தும் போக்கும் மீண்டும் தொடங்கி விட்டன. இரண்டு நாட்களுக்கு முன்பு (29.09.2019) கிளிநொச்சியில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள கோத்தபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு திரட்டுவதற்கான அலுவலகம் திறக்கப்பட்டது. அதற்காக அயலூர்களிலிருந்தெல்லாம் இதே போன்ற ஆட்கள் பேருந்துகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அப்படி வந்திறங்கியவர்களில் அதிகமானோர் வாழ்க்கையில் மிகச் சிரமப்படுவோர். பெண்கள், முதியோர், வேலைதேடும் இளவயதினர், முன்பு போராளிகளாகச் செயற்பட்டோரில் ஒரு தொகுதியினர். அவர்களுடைய வாழ்க்கை நிலையையும் பொருளாதார நிலையையும் சாதமாக்கி, இப்படி அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இரண்டாவது காரணம், கான்பரா யோகன் என்னுடன் தொடர்பு கொண்டு பேசும்போது ஆள் யாரெனச் சரியாக என்னால் அடையாளம் காணமுடியவில்லை. அவரும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. பிறகுதான் அவர் ஒரு நல்ல வாசகர் என்று அறியக் கூடியதாக இருந்தது. பிறகு அவர் சிறுகதைகளை எழுதுகிறார் என்று அறிந்தேன். சில கதைகளை அனுப்பியுமிருந்தார். வித்தியாசமான கோணங்களில் எழுதுவதில் அவருடைய கவனம் உள்ளதை அந்தக் கதைகளில் கவனித்தேன். ஒருநாள் யோகனுடைய கதைகளைப்பற்றி தெய்வீகனோடு பேசிக் கொண்டிருந்தபோது, மிக விரைவில்  தான் கான்பராவுக்கு யோகனிடம் செல்லவுள்ளதாகச் சொன்னார் தெய்வீகன். உலகம் மிகச் சிறியதாகச் சுருங்கி வருகிறதா? அல்லது நம்முடைய உறவு வட்டம் பெருத்து எல்லா இடத்திலும் பரவியுள்ளதா? எப்படியோ  கான்பராவுக்குச் சென்ற தெய்வீகன், யோகன் வீட்டிலிருந்து தொலைபேசினார். கூடவே யோகனும் பேசினார். எல்லோரும் மிக நெருக்கமாகி விட்டோம்.

தெய்வீகனுடைய அந்தப் பயணம் ஆச்சரியமளிக்கும் பல சேதிகளைப் புதிதாக்கியது. அதில் ஒன்று, 1980 களின் நடுப்பகுதியில் வடக்கிலே மிகப் பரவலாகப் பார்க்கப்பட்ட – பேசப்பட்ட – “மண்சுமந்த மேனியர்” என்ற நாடகத்தில் யோகனும் பங்கேற்றார் என்பது. அந்த நாடக அனுபவத்தை தெய்வீகனிடம் யோகன் சொல்லியிருக்கிறார். அதைத் தனியே தெய்வீகனிடம் சொல்வதையும் விட அந்த அனுபவங்களை பொதுவெளியில் எழுதிப்பகிரலாமே என்றபோது, அதற்குச் சம்மதித்து அதைப்பற்றி எழுதியிருந்தார் யோகன், கடந்த (செப்ரெம்பர், 2019) எதிரொலியில்.

யோகனுடைய அந்தக் கட்டுரையைப் படித்தபோது என்னுடைய நினைவுகள் பல வழிகளில் குறுக்கும் மறுக்குமாக ஓடின. 1980 களில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் சமூக உணர்வோடு, போராட்டத்தை  மக்கள் மயப்படுத்துவதற்கான அரங்களிக்கையாக இருந்தது மண்சுமந்த மேனியர். அதில் பங்கேற்றிருந்தார் யோகன். 2017 இல் போராட்டத்திலும் போரிலும் பாதிக்கப்பட்ட போராளிக்கான வாழ்வாதார உதவி. அதில்  பங்களித்திருந்தார் யோகன்.

இடம், காலம், சூழல் எல்லாம் மாறி விட்டன. ஆனால் யோகனுடைய மனம் மாறவில்லை. குணம் மாறவில்லை. நோக்கு மாறவில்லை. இயல்பு மாறவில்லை. யாரோ ஒரு முகம் தெரியாதவராக, பாதிக்கப்பட்டு – ஆதரவற்ற – நிலையிலிருக்கும் ஒரு குடும்பத்துக்கு உதவுவதற்காக என்னை இணைய வழியில் தேடிய யோகனையும் இப்பொழுது மிக நன்றாக அறிந்த “மண்சுமந்த மேனியரில் ஒருவராகிய யோகனையும் நினைத்துப் பார்க்கிறேன்.

ஆமாம், இந்த மனிதர்கள் “மண் சுமந்த மேனியரே”தான். நமது வாய்ச்சவாடல் அரசியல்வாதிகளுக்கும் இந்த மனிதர்களுக்குமிடையிலான வெளி மிக மிக அதிகம். முற்றிலும் வேறானது. மண்சுமந்த மேனியரோ வேர்களை உயிர்ப்பிப்போர். புண்சுமந்தோரோ துயரங்களைக் கடக்க முடியாதிருப்போர். புண்சுமந்த மேனியரைப் பயன்படுத்துவோரோ, துளிர்களைத் தமக்கெனக் கொய்வோர்.

இவையெல்லாம் துருவங்களே. இந்தத் துருவ நிலை என்றுதான் மாறும்? எப்படி மாறும்? ஆமாம், இந்த நிலை மிகப் பெரிய துயரே.

 நன்றி – எதிரொலி (அவுஸ்திரேலியா)

Share:

Author: theneeweb