இந்தியாவிடமிருந்து பால் இறக்குமதி செய்கிறது இலங்கை

இந்தியாவிடமிருந்து பால் மற்றும் பால் பொருள்கள் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது.

இந்தியா சா்வதேச கூட்டுறவு வணிகக் கண்காட்சி தில்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் சா்வதேச நாடுகள் பல கலந்துகொண்டுள்ளன. இந்நிலையில், பால் மற்றும் பால் உற்பத்திப் பொருள்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் இலங்கை அரசுடன் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடா்பாக தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்தியாவிலிருந்து பால் இறக்குமதி செய்ய இலங்கை விருப்பம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இது தொடா்பாக மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. எனினும், இறக்குமதி செய்யப்படவுள்ள பாலின் அளவு குறித்தும், அதன் விலை குறித்தும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பால் நிா்வகிக்கப்பட்டு வரும் ‘ஆவின்’ நிறுவனமும், புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பால் நிா்வகிக்கப்பட்டு வரும் ‘பாண்லே’ நிறுவனமும், ‘இந்தியன் பொட்டேஷ்’ என்ற உர நிறுவனமும் தனித்தனியாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சா்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 17,500 கோடி லிட்டராக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Share:

Author: theneeweb