பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் – – கருணாகரன்

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோட்டபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க ஆகிய மூன்று பிரதான வேட்பாளர்களும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் உரிமைகளைப் பற்றி எதையுமே பேசவில்லை. இது அநீதியும் பெருந்தவறுமாகும். ஆகவே, கேள்விக்கிடமற்ற நிலையில் சிங்களப் பேரினவாதத்தை வலுப்படுத்துவதே மூவருடையதும் நோக்கமாக உள்ளது. இதன்மூலம் தமிழ், மலையக, முஸ்லிம் சமூகங்களைப் பலவீனப்படுத்திச் சிங்களச் சமூகத்தை வலுப்படுத்துவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் இவர்களை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும்? எங்களுடைய (சிறுபான்மைத் தேசிய இனங்களுடைய) வாக்குகளை இவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?” என்று சற்றுக் கோபத்தோடு கேட்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்.

இவர் கூறுவதும் எழுப்பும் கேள்விகளும் நியாயமானவையே. இதே   கேள்விகளோடும் கோபத்தோடும்தான் பெரும்பாலான தமிழ், முஸ்லிம்  மக்களும் உள்ளனர். எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் பிரதான வேட்பாளர்களை நாம் ஆதரிப்பது? என்று கேட்டுக்கொண்டு.

சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமலே அவர்களுடைய வாக்குகளைப் பெறமுடியும் என இந்த மூன்று தரப்பு வேட்பாளர்களும் கருதுகின்றனர். கருதுகின்றனர் என்பதற்கும் அப்பால் அப்படி உறுதியாகவே நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையும் இந்தத் துணிவும் எப்படி இவர்களிடம் உருவானது?

இதற்குக் காரணம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையே. இவை கடைப்பிடித்த பலவீனமான, குருட்டு விசுவாச அரசியல் வழிமுறையே இன்று தமிழ்த் தேசிய இனங்களை வலுவற்றதாக ஆக்கியிருக்கிறது.

இந்தத் தரப்புகளின் ஆதரவிலேதான் தற்போதைய ஆட்சியும் அரசாங்கமும் தங்கியிருக்கின்றன. அப்படியென்றால், இவற்றின் தயவைப் பெறும் அரசாங்கம் அதற்கான வெகுமதியைக் கொடுக்க வேண்டுமல்லவா. ஆதரவளித்த சக்திகளும் அந்த வெகுமதியை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா! அப்படி நடந்திருக்கிறதா? இந்த அரசாங்கத்துக்கும் ஆட்சிக்கும் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவுக்குப் பெற்றுக்கொண்டது என்ன? சரியாகச் சொன்னால், தமிழ் மக்கள் தமக்குச் சரியானதென, விருப்பத்துக்குரியதென, நம்பிக்கைக்குரியதெனக் கருதிய ஆட்சியின் மூலம் எதனைப் பெற்றனர்? எதைச் சாதித்தனர்? இதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆற்றிய பங்களிப்பு என்ன? இது முஸ்லிம் தரப்புக்கும் அப்படியே பொருந்தும்.

அரசியலில் பேரங்களும் நலன்களுமே முக்கியமானது. அதிலும் ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் எப்போதும் தமது நலனையும் பேரத்தையுமே உச்சக் குறியாகக் கொண்டிருக்க வேண்டும். அதைப் பெறுவதற்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியாக இனங்காண வேண்டும். அதை உச்சமாகப் பயன்படுத்த வேண்டும். இதை உணர்ந்து கொண்டு இந்தச் சமூகங்களின் அரசியற் தலைமைகள் செயற்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.

இதைனால்தான் இந்த அரசாங்கத்தைத் தமிழ் பேசும் தேசிய இனங்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி இவற்றினால் செயற்படுத்த முடியவில்லை. தமிழ் மக்களுடைய அடிப்படைப்பிரச்சினைகள் தொடக்கம் ஏனைய விடயங்கள் வரையில் எதன் மீதும் கவனப்படுத்தவும் இயலவில்லை. இருந்தபோதும் இவை எதைப்பற்றியும் பேசாமல் அல்லது இவற்றுக்கான அழுத்தங்களைக் கொடுக்காமலே நிபந்தனைகளற்ற ஆதரவை அளித்து வந்தன. இன்னும் வழங்கிக்கொண்டிருக்கின்றன.

இவ்வளவுக்கும் ஏற்கனவே கூறியதைப்போல இந்த அரசாங்கமானது இவற்றிற் தங்கியிருப்பதால் பேரம்பேசக் கூடிய வலு இவற்றிடமிருந்தது. இருந்தபோதும் அதனைப் புரிந்த கொண்டு ஆற்றலோடு அதைப் பயன்படுத்தத் தவறியதன் விளைவே இன்றைய கையறு நிலையாகும்.

ஆகவே, நிபந்தனையற்ற முறையில் கண்மூடித்தனமான ஆதரவை அரசுக்கு அளித்து வருவதன் மூலம் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்ற பேரதிகார நிலை சிங்களப்பெருங்கட்சிகளிடத்திலே உருவாகியுள்ளது. இதனை மேலும் புரிந்து கொள்வதற்கு எளிய உதாரணங்கள் சில. 1994 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க, “தமிழ் மக்களுக்குச் சிங்கள மக்கள் பெரும் தவறுகளையும் அநீதியையும் இழைத்துள்ளனர். அதற்கு நாம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்” என்று சிங்களச் சமூகத்திடம் பகிரங்கமாகக் கூறியே தேர்தலில் நின்றார்.

2010 இல் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக தன்னால் 13 பிளஸ் வரை செல்ல முடியும் என்றார் மகிந்த ராஜபக்ஸ.

இதைப்போல 2015 இல் தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கமைவாக  அரசியலமைப்பைத்திருத்தம் செய்வது தொடக்கம் ஐ.நா.வின் நிலைப்பாட்டிற்கமைய பிராந்தியங்களின் ஒன்றியம், பல்லின சமூகங்களுக்கான சமநிலையான பாதுகாப்பும் அதிகாரமும் என்று கூறியே ரணிலும் மைத்திபால சிறிசேனவும் ஆதரவைக் கேட்டனர்.

இந்த நிலையெல்லாம் இப்பொழுது சடுதியாக ஏன் இல்லாமற்போனது?

சமகாலத் தேவைகள், நிலைமைகளை மட்டும் குறியாகக் கொண்டு அரசியலை முன்னெடுப்பதன்  விளைவான பெருங்குறைபாடே இதுவாகும். இவற்றின் அரசியலானது, ராஜபக்ஸக்களின் அதிகாரத்தை உடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கை அல்லது அந்த நடவடிக்கைக்கான ஆதரவு என்றளவிலேயே சுருங்கி விட்டது. அதுவும் இப்பொழுது கேள்விக்குரியதாகியுள்ளது. இப்பொழுது மீண்டும் எழுச்சியடையத் தொடங்கியிருக்கும் ராஜபக்ஸக்களைக் குறித்து என்ன செய்வது என்ற நிலை இவற்றின் முன்னே கேள்வியாகியிருக்கிறது.

ஆகவே இந்த மாதிரியான நிலையில் அரசியலை முன்னெடுத்துச் செல்லும் தலைமைகள் சமகாலத்தையும் எதிர்காலத்தையும் சரியாக மதிப்பிட்டு, மதிநுட்பத்துடன் காய்களை நகர்த்துவனவாக இருந்திருக்க வேண்டும். அப்படியான இயல்போடும் திறனோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவையும் இருக்கவில்லை.

இவற்றின் தூரநோக்கற்ற நிலையே இன்று தமிழ் மொழித் தேசிய இனங்களின் நிலையைப் பலவீனமாக்கியுள்ளது. ஆனாலும் இவை தங்கள் மீசையில் மண்படாமலே விழுந்திருக்கிறோம் என்று அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கின்றன. இதைக் கேட்க எரிச்சலே ஏற்படுகிறது.

இது குற்றச்சாட்டு அல்லவா என்றால், நிச்சயமாகக் குற்றச்சாட்டு என்றே துணிந்து கூற வேண்டும்.

இதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

இதேவேளை இதற்கு முன்பு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் போன்றவையும் இதை ஒத்த அரசியலையே செய்துள்ளன.  இவற்றின் நிபந்தனையற்ற ஆதரவைப் பெற்ற கடந்த கால ஆட்சியாளர்கள், மிகச் சுலபமாக சிறுபான்மைத் தரப்பினரைக் கையாள முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றனர். இந்த நம்பிக்கையே இந்த வேட்பாளர்களின் இன்றைய இந்தத் துணிவாகும்.

இதனுடைய மறுபக்கத்தை உணர்ந்தால் அல்லது ஆராய்ந்தால் அது எவ்வளவு பயங்கரமானது, ஆபத்தானது என்று தெரிய வரும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தப் பொறுப்புக் கூறலைத் தவிர்க்கும் நிலை பகிரங்கமாகவே அரங்கேறுகிறது என்றால் எதிர்காலத்தில் இதன் விளைவுகள் படுபயங்கரமாகவே அமையப்போகின்றன. இதற்கு தமிழ் பேசும் இனங்கள் கொடுக்கப்போகும் விலை மிக உச்சமாக இருக்கும்.

இவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனமே வரவில்லை. அப்படியிருக்கும்போது அதற்கு முன்பு எதற்காக இப்படிச் சந்நதம் கொள்ள வேண்டும்? அது வந்த பிறகு அதன் சரிபிழைகளைப்பற்றி, குறை நிறைகளைப்பற்றிப் பேசலாமே. அதுதானே சரியானது என்று யாரும் கேட்கக் கூடும்.

தேர்தல் விஞ்ஞாபனம் வந்துதான் இவர்களுடைய நிலைப்பாட்டையும் உளக்கிடக்கையையும் அறிய வேண்டும் என்றில்லை. இந்த வேட்பாளர்கள் மூவரும் கடும்போக்காளர்கள் என்பது உலகறிந்த உண்மை. மூவரும் தமிழ் பேசும் தேசிய இனங்களைக்குறித்தும் அவற்றின் உரிமைகள், பிரச்சினைகளைக் குறித்தும் ஒரு போதுமே சாதகமான சித்திரத்தை அளித்தவர்களில்லை. இந்த மூவரும் எப்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் எண்ணவோட்டத்துக்கு மாறாக, சிங்கள மனநிலைக்கு உவப்பான நிலைப்பாட்டையே கொண்டவர்கள். இது ஏற்கனவே நிறுவனமயப்பட்டிருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கப்போக்கிற்கு வலுவூட்டக்கூடியது. இந்தப்போக்கை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த நிலையைக் கேள்விக்குட்படுத்தாமல் இவர்களுக்கான ஆதரவை அளிப்பதென்பது தற்கொலைக்குச் சமனானது.

ஆனால், அதையே சிங்கள மேலாதிக்கவாதிகளும் இதையே விரும்புகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தினர் என்ன செய்யலாம்? என்ற கேள்வி எல்லோரிடத்திலும் எழுந்துள்ளது.

தமிழ்ச்சமூகத்தினர் இன்று செய்ய வேண்டியவை பல உண்டு. முதலில் விடயங்களின் அடிப்படையில் Issue Base நிபந்தனைகளை – கோரிக்கைகளை முன்வைப்பது. பின்னர் அதை வலியுறுத்துவது. அதை வலுவானதாக்குவது. அதை ஏற்றுக்கொள்ள வைப்பது.

இதில் அரசியல் தீர்வுக்கான, உரிமைக்கான விடயங்கள் முதலாவது. இரண்டாவது, மக்களின் இயல்பு வாழ்க்கையோடும் அரசியல் நெருக்கடிகள் உண்டாக்கிய பிரச்சினைகள் அல்லது புதிய விளைவுகள் பற்றியவை.

இவற்றை வகைப்படுத்தித் தொகுத்து முன்வைக்க வேண்டும். யாராலுமே புறக்கணிக்க முடியாத அளவுக்கு எமது கோரிக்கைகளும் அவற்றை வைக்கும் முறையும் அமைய வேண்டும். சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெறக்கூடிய வகையில் இந்த முன்வைப்புகளைத் தயாரிக்க வேண்டும்.

எனவே இதைக் கவனமாகப் பொறுப்போடு செய்ய வேண்டும். குறிப்பாக இதற்குப் பயன்படுத்தப்படும் மொழியே – சொற்களே சரியாகத் தேர்வு செய்யப்பட்டவையாக இருப்பது அவசியம்.

அப்படியென்றால், உணர்ச்சிகளுக்கு முதன்மைப் பெறுமானத்தைக் கொடுக்காமல், முற்றிலும் அறிவுபூர்வமாகவே இதை நாம் வைக்க வேண்டும். அறிவுபூர்வமாகச் செயற்பட முனைய வேண்டும்.

இன்று தேவையானது இதுவே. இதைச் செய்வதற்கும் செயற்படுத்துவதற்குமான முன்வரிசையே இன்றைய தேவை. அதாவது பலவீனமான தமிழ்த் தலைமையை விடவும் பலமான தமிழ்த்தரப்பே தேவை. அது சிறியதாக இருந்தாலும் அதுவே பொருத்தமானது. ஏனெனில் வீரியமுள்ள சிறிய நாற்றே நாளை வலுமிக்க பெரு விருட்சமாகும். அதுவே நிழலையும் கனிகளையும் தரும்.

Share:

Author: theneeweb