ஹிஸ்புல்லா தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் கருத்து

முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சில வேட்பாளர்கள் வேறு சில வேட்பாளர்களுக்கு கிடைக்கும் வாக்குகளை இல்லாது செய்வதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள் என்பது தெளிவாக புலப்படுகின்றது.

அவ்வாறே நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதி என்ற வகையில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.

முஸ்லிம்கள் வழங்கும் வாக்குகள் மூலம் மாத்திரம் பிரஜையொருவர் ஜனாதிபதியாவது என்பது சாத்தியமாகாது.

ஆகவே அவர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாஸவுக்கு செல்லும் வாக்குகளை அவருக்கு செல்லாது தடுப்பதற்காகவே இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹிஸ்புல்லா இப்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும் என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தாக, அவரது ஊடகப்பிரிவின் மின்னஞ்சல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் காத்தான்குடி முக்கியமானதொரு பேசும் பொருளாக இருக்கப் போகின்றது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சர்வதேசமும் அவதானம் செலுத்தும் இடமாக காத்தான்குடி மாறியிருக்கிறது.

இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் செய்துகொண்டிருக்கிறார் என்றும் ஹக்கீம் கூறியுள்ளார்.

Author: theneeweb