உறவுக்கு வழி சமைப்போம் உரிமைக்குத் தோள் கொடுப்போம்

எதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய உரையாடல்கள், விவாதங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள் பலவாறாக வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவைகள் தமிழ் மக்கள் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கும் தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே முன் வைக்கப்பட்டு வருகின்றன.
மலையக மக்களில் ஆரம்பித்த இலங்கையின் இனவாத அரசியல் பாரம்பரியம் இன்று மூர்க்கத்தனமான கொலை வெறி அரசியலாக தன்னை  பகிரங்கமாக அடையாளப்படுத்தி நின்று குடிமக்களின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளத் தன்னாலான சகல முயற்சிகளையும் முன்னெடுத்தபடி உள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆளும் தரப்பினர் யாவரும் கொலை கொள்ளை ஊழல் ஏமாற்று மோசடி யாவற்றிலும் சம்பந்தப்பட்டவர்களே. இதுவரை தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இன மத வேறுபாடின்றி இவற்றிற்குத் துணை நின்றவர்களே.
முதலில் இலங்கையின் குடிமக்களைச் சிங்களம்-தமிழ் என்று பிளவு பட வைத்தார்கள்.  தமிழ்ப் பேசும் மக்களை ‘வம்சாவழிகள்’ என்றும் ‘வந்தேறிகள்’ என்று பிரித்தார்கள். தொடர்ந்து முஸ்லீம்களை பிரித்தெடுத்தார்கள். பின்னர் வடக்கு-கிழக்கு எனப் பிரித்தார்கள். இவற்றுக்கெல்லாம் அந்தந்த மக்கள் பிரிவுகளின் தலைமைகளும் துணை போனதே கடந்த கால வரலாறு காட்டும் உண்மையாகும்.
மேற்குறிப்பிட்ட அரசியல் அணுகு முறையின் கீழே நாட்டின் ஒரு சிறிய தொகையினர் சுகபோகத்துடன் வாழ பெரும்பான்மைக் குடிமக்கள் தவறான தலைமைகளின் கீழ் நின்று தங்களைத் தாங்கள் அறியாமலேயே தங்களுக்குள் மோதியபடி ஒடுக்கப்பட்டவர்களாக, ஓரங்கட்டப்பட்டவர்களாக அடிப்படை உரிமைகள் இன்றி அன்றாடங் காய்ச்சிகளாக வாழ்கிறார்கள். மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் தொடர்ந்து பயணிக்கும் ஆளும் தரப்புக்கள் இன்று அதன் உச்சக்கட்டத்தில் வந்து நின்று வாக்கு வேட்டையாடுகின்றன.
ஆம். குற்றவாளிகள் ஒன்றிணைந்து நின்று தங்களை நிரபராதிகளாக்கும் படி மக்கள் ஆணையைக் கோரி தேர்தலில் நிற்கிறார்கள். அதற்காக பல வகையான புதிய பாணி வாக்குறுதிகளை நாளுக்கு நாள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கேற்ப மக்களின் தலைமைகள் தங்கள் இருப்பை தக்க வைக்கும் நோக்கில் செயற்படுகின்றன. உறுதிமொழிகள் பெற ஓடித் திரிகிறார்கள். கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் தயாரிக்கிறார்கள். வாக்குறுதிப் பத்திரத்தில் கையொப்பம் வாங்க ஆலாய் பறக்கிறார்கள். கொலைக்கும் கொள்ளைக்கும் ஊழலுக்கும் நியாயம் கற்பிக்கிறார்கள். 
நாட்டில் அண்மைக் காலங்களில் இடம் பெறும் சம்பவங்கள் இலங்கையில் இரண்டு அரச இயந்திரங்கள்( The State Apparatus ) அதாவது இரண்டு விதமான அரச நிர்வாகம் நடைமுறையில் உள்ளதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. (உ+ம்)   21 ஏப்ரல் குண்டு வெடிப்பு-கைதுகள்-ஆயுதக் கண்டு பிடிப்புக்கள். அதனைத் தொடர்ந்த கலவரங்கள். மிக அண்மையில் தமிழ்ப் பிரதேசங்களில் கைதுகள்-ஆயுதங்கள் மீட்பு. அரசாங்கம் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை என்று கூறும் அதே வேளை நாட்டின் பாதுகாப்பு உளவுத் துறை நாளுக்கு நாள் ஆயுத மறைவிடங்களைத் தேடிக் கண்டு பிடிப்பதன் மூலம் (நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது என்று) சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்ப் பேசும் மக்கள் இம்முறையும் ஒரு சிங்கள ஜனாதிபதி ஒருவரையே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆளும் தரப்பினரின் இரண்டு பிரதான வேட்பாளர்களே இன்று ஜனாதிபதியாகும் வாய்ப்புக் கொண்டிருப்பதாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் தமிழ் மக்கள் தொடர்பாக ஏதாவது பேசினால் என்ன? பேசாவிட்டால் என்ன? இரண்டும் ஒன்றுதான். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்க வேண்டிய கடமையோ, அவசியமோ, தேவையோ எதுவுமில்லை. அதனை மிகத் தெளிவாக ஆணித் தரமாக கடந்த 72 வருட காலமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர். இவர்களால் எதுவும் கிடைக்கும் என்று யாராவது கூறினால் நிச்சயம் அவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களே. சமூக அரக்கர்களே. மக்கள் இரத்தத்தை உறிஞ்சி வாழும் அட்டைகளே. 
இலங்கையில் இன்று சிங்கள பௌத்த பேரினவாதம் ஏகாதிபத்திய வல்லரசுகளின் நலன்களுடன் தன்னை நன்கு இரண்டற பிணைத்துக் கொண்டுள்ளது. இந்த இரு வேட்பாளர்களில் எவர் பதவிக்கு வந்தாலும் வல்லரசுகளின் கட்டளைப்படி தான் நடக்க வேண்டிய தாராளவாதப் பொருளாதாரப் பொறிமுறைக்குள் இவர்கள் இலங்கையை அடகு வைத்து விட்டார்கள். எனவே வெளிநாட்டு மீட்பர்களை நம்பி(முள்ளிவாய்க்காலில் நம்பி ஏமாந்தது போதும்) சிங்களப் பேரினவாதிகளுடன் பேரம் பேசலாம் என்று மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. உலகமயமாக்கல் திட்டத்தின் கீழ் புதிய தாராளவாதப் பொருளாதாரம் இந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசியலைப் பயன்படுத்தியே இலங்கையில் தன் காலை ஊன்றத் தொடங்கியுள்ளது.
இதன் விளைவுதான் கல்வி-சுகாதாரம் காசுக்கு விற்கப்படுகிறது. குடிமக்களின் நிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்படுகிறது. நடைமுறையில் உள்ள உள்ளுர் உற்பத்தி வளங்கள் மட்டுப்படுத்தப்பட்டு வெளிநாட்டு உற்பத்திகளுக்கு காணிகள் வழங்கப்படுகின்றன. விதைகளுக்கான கட்டுப்பாடும் அவற்றில் ஒன்றாகும். வடக்கில் உள்ள சிங்கள-தமிழ் மீனவர்கள் பிரச்சனையும் தென்னிலங்கைக் கடல் வளங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் பக்க விளைவுகளாகும். பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை வளங்கள் அழிக்கப் படுவதெல்லாம் உல்லாசப் பயண அபிவிருத்தி என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதன் விளைவாகும். இக்கட்டுரை எழுதப்படும் வேளையில் “நவம்பர் 16ல் தமது வேட்பாளர் வெற்றியீட்டினால்  மறுநாளே(நவ. 17ல்) மண் அகழ்வுக்கான கட்டுப்பாட்டை நீக்குவேன்” என ஒரு அமைச்சர் 14.10.2019 அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றியுள்ளதாக அறியமுடிகிறது.
எனவே தமிழ் மக்களுக்கு இன்றுள்ள ஒரேயொரு தெரிவும் சரியான ஒரு முடிவுமாக ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அதுவே இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டின் அரசியல் பாராம்பரியத்தை தலைகீழாக மாற்றுவது. அரசியல் பாரம்பரியம் மாறவேண்டுமானால் இன்று சிங்களப் பௌத்த பேரினவாத அரசியலுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு மக்களை மடையர்களாக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தலைமைகளை, பிரதிநிதிகளை, தரகர்களை  நிராகரிக்க வேண்டும்.
நாட்டின் இன்றைய கட்டாய அவசிய தேவைகளில் முதலாவது சுதந்திரமான நீதி சட்டப் பாதுகாப்பு நிர்வாகம். இரண்டாவது அரசியல்வாதிகளின் தலையீடற்ற அரச நிர்வாகம். மூன்றாவது தகுதி, தொழில் நிபுணத்துவம் வாய்ந்த வல்லுனர்களைக் கொண்ட திட்டங்களின் நடைமுறை செயற்பாடு. இவற்றை நிறைவேற்ற முடியாத அரசியல் பின்னணியையும் அதற்குரிய ஆதரவுத் தளத்தையுமே இந்த இரு வேட்பாளர்களும் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் மேற் குறிப்பிட்ட மூன்று  விடயங்களையும் நடைமுறைக்கு கொண்டு வராமல் குடிமக்களுக்கும், நாட்டுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் எந்த விதமான தீர்வும் இவர்களால் வழங்கப்பட முடியாது.
இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய ஜனநாயக சூழ்நிலையை, அரசியல் நிர்ப்பந்தத்தை உருவாக்குவதற்கான ஒரு அரிய வாய்ப்பை இன்றைய ஜனாதிபதித் தேர்தல் அனைத்துக் குடிமக்களுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.
தமிழ் மக்களைப் போன்றே சிங்கள மக்களிலும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் அத்தனை பிரச்சனைகளும் சிங்கள மக்களுக்கும் உண்டு. அவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட தவறான பிரச்சாரங்களினால் தமிழ் மக்கள் பற்றிய பிழையான புரிதல் சிங்கள சாதாரண மக்களிடம் உண்டு. அவர்களின் சந்தேகங்களை அகற்றாமல், அவர்களுக்கு  உண்மைகளை உணர வைக்காமல் எந்த சக்தியாலும்  நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஏனெனில் அடுத்த பாராளுமன்றத்தை, அரசாங்கத்தை, அரசியல் அதிகாரத்தை நிர்ணயம் செய்யப் போகிறவர்கள் இந்த சாதாரண சிங்கள மக்களே.
72 ஆண்டுகளாக ‘தமிழ்’, ‘சமஸ்டி’, ‘தனிநாடு’, ‘சுயநிர்ணயம்’, ‘சுயாட்சி’, ‘அதிகாரப் பரவலாக்கம்’ என்றெல்லாம் கதையாடல்கள் செய்தவர்கள், அதற்கான போராட்டங்களுக்கு அணிவகுத்தவர்கள் யாவரும் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களுடன் ‘கொடுத்தும் வாங்கியும்’ தான் தங்கள் அரசியலைத் தொடருகிறார்கள். ஆனால் எந்தக் காலத்திலுமே சிங்கள மக்களுடன் பேசுவதற்கு முயற்சி செய்யவில்லை. மாறாக அவர்களுடன் உறவு கொள்வதற்கு முயற்சித்தவர்களையும், உறவு கொண்டிருந்தவர்களையும் துரோகிகளாக்கி கொலைக்களம் அனுப்பினார்கள்.
எனவே கடந்த 72 வருடங்களாக தமிழ் மக்கள் செய்யத் தவறிய அல்லது செய்ய முடியாமல் இருந்த ‘சாதாரண சிங்கள மக்களுடனான நேரடித் தொடர்பையும் தோழமைக்கான உறவுப் பாலத்தையும்’ ஒரேயொரு  நொடியில் ஏற்படுத்தக் கூடிய ஒரு பெரிய வாசற் கதவை இந்த ஜனாதிபதி தேர்தல் திறந்து வைத்துள்ளது. ஏற்கனவே பல பொன்னான சந்தர்ப்பங்களை தமிழ் மக்கள் தங்களது அரசியல் அறியாமையால் அல்லது மற்றவர்களின் தவறான வழி நடத்தலால் நழுவ விட்டுள்ளார்கள். இம்முறையும் தமிழ் மக்கள் அதனை நழுவ விடுவார்களேயானால் இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சகல குடிமக்களும் ‘பல் விளக்கவும்’ ‘சாப்பிடவும்’ மட்டுமே வாய் திறந்து வாழ வேண்டியது வருங்காலத்தில் தவிர்க்க முடியாதது. 
இரண்டு ஆளும் (வர்க்க) கட்சி வேட்பாளர்களில் ஒருவருக்கே வாக்களிக்கும் படி தமிழ் அரசியல் தரகர்களுக்கு வல்லாதிக்க சக்திகள் வலியுறுத்தியுள்ளன. தென்னிலங்கையில் ‘தாமரைக் கோபுரமும்’ வட இலங்கையில் ‘சர்வதேச விமான நிலையமும்’ வல்லாதிக்க சக்திகளின் கால் பதிப்புத் தடயங்களே. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி இலங்கை ஆட்சியாளர்களுக்கு  உதவிய இந்த வல்லரசுகள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க உதவவில்லை. ஆனால் இலங்கையில் கால் பதிக்கவும், இராணுவ தளங்கள் அமைக்கவும் ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். 21 ஏப்ரல் குண்டு வெடிப்பு வல்லரசுகளின் உளவுத் துறையினரை 24 மணித்தியாலங்களில் இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்த தடவை அப்படி  ஒரு  சம்பவம் இடம் பெற்றால் அந்நிய இராணுவமே வந்திறங்கும். தங்களது மூலதன முதலீட்டுத் திட்டங்களை பாதுகாக்க வந்துள்ளதாக அதற்கு நியாயம் கற்பிக்கும்.  அந்நிய இராணுவம் வந்து நின்று பட்டுக் கொண்ட அனுபவத்தில் ‘இலங்கை இராணுவம் நல்லது’ என்று பெயர் வாங்கிய வரலாற்றைத் தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். எனவே தமிழ் மக்கள் இன்றைய நடைமுறை யதார்த்தங்களை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தால் தமிழ் குடிமக்கள் நிச்சயம் கடந்த கால இனவாத மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து நீதியான சட்டப் பாதுகாப்பு அடங்கிய,  ஜனநாயக விழுமியங்கள் செழிக்கும் இறைமையுள்ள இலங்கையை உருவாக்கும் வகையில் தங்கள்  வாக்குகளை பயன்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும். இதனையும் நாங்கள்  தவற விட்டால் இடப் பெயர்வும் புலப் பெயர்வும் தமிழ் மக்கள் வாழ்வில் எதிர்காலத்திலும் தொடரவே செய்யும். 
இந்தத் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் பெரும்பாலானோர் பண வரவுக்கும், பரபரப்புக்கும், ஆளும் தரப்பினரின் ஆலோசனைக்கும் என தேர்தல் களத்தில் இறங்கியவர்கள். நாட்டின் பரந்து பட்ட குடிமக்களின் ஆதரவு கோரி பிரச்சார களத்தில் இறங்கியிருப்பது ஆழமான அரசியல் பின்னணியையும், நாடளாவிய மக்கள் ஆதரவையும் கொண்டிருக்கும் மூன்று பிரதான கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளர்களே. இவர்கள் மூவரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை பின்னணியாகக் கொண்டவர்களே.
இவர்களில் ஆளும் தரப்பு வேட்பாளர்கள் இருவரும் போகும் பாதைகளில் தென்படும் பௌத்த மடாலயங்களுக்குச் சென்று பௌத்த துறவிகளின் காலைத் தொட்டுக் கும்பிட்டு தங்களது சுயரூபத்தை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனூடாகத் தங்களைச் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பாதுகாவலர்களாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். “தமிழ்” என்ற தலைப்பை ‘ஊறுகாய்’ போல ஒரு ஓரத்தில் வைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் சுற்றியே தமிழ்ப் பேசும் மக்களின் சகல தலைமைத்துவங்களும் (மலையகம்-முஸ்லீம் உட்பட) தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுவதில் நாட்டம் கொண்டுள்ளன.
அதே சமயம் ஆட்சி அனுபவம் அற்ற மூன்றாவது பிரதான வேட்பாளர் மட்டும் ‘நீதி சட்டப் பாதுகாப்பின் சுயமான செயற்பாடு – அரசியல் தலையீடற்ற அரச நிர்வாகம் -இவற்றைத் தளமாகக் கொண்டு இயங்கும் துறைசார் நிபுணர்களின் திட்டங்கள் ஆகியவற்றை செயற்படுத்துவதே தனது தலையாய பணி என்பதை மிகவும் தெளிவாக வலியுறுத்தி வருகிறார். அத்துடன் 12.10.2019 அன்று கண்டியில் தான் கலந்து  கொண்டிருந்த  பௌத்த சம்மேளனக் கூட்டத்திலேயே “மதத்தையும் இனத்தையும் சார்ந்து எமது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கமாட்டோம் என்பதை தேரர்கள் முன்னால் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.” என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
மேலே சுட்டிக் காட்டப்பட்ட இந்த மூன்று வேட்பாளர்களையும் பற்றி விமர்சனம் செய்யும் தகுதியும், தரமும் உள்ள தலைவர்கள் எவரும் தமிழர் தரப்பில் இல்லை. ஏனெனில் நாட்டில் நடந்த அனைத்து அனர்த்தங்களிலும் அதனால் ஏற்பட்டுள்ள
இன்றைய அவலங்களிலும் இந்தத் தலைமைகளுக்கும் பங்குண்டு. ஆனால் இந்தத் தலைமைகளின் அரசியலால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுக்கு வேட்பாளர்களை விமர்சிக்கவும் விசாரணை செய்யவும் உரிமை உண்டு. ஏனெனில் அவர்கள் தான் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கத் தகுதியான ஒருவருக்குத் தங்கள் வாக்குகளை வழங்கப் போகிறவர்கள். இந்த அடிப்படையில் வழங்கப்படும் வாக்குகள் ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்யத் தவறினாலும் இதுவரை தொடரும் பாரம்பரிய அரசியலைத் தலைகீழாக புரட்டிப் போடும் புதியதொரு அரசாங்கத்தை நாளை வரவிருக்கும் பொதுத் தேர்தல் ஊடாக அமைக்க வழி வகுக்கும்.
எனவே இலங்கையில் இனவாத – மதவாத அரசியல் பாரம்பரியத்தை அடியோடு அழிக்க வேண்டுமானால் நாட்டில்  பல வகையிலும் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்க் குடிமக்கள் தங்களைப் போல் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சகோதர சிங்களக் குடிமக்களுடன் கையுடன் கை கோர்த்து தோளோடு தோள் கொடுக்கவேண்டும். அதனூடாக இலங்கையில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க வேண்டும்.
-குடாநாடான்-

Author: theneeweb